ஹாட்லிக் கல்லூரியின் புதிய மாணவர் விடுதி நேற்று முன்தினம் திறந்து வைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 03/03/2014 (திங்கட்கிழமை)
யாழ் மாவட்டத்தின் வடமராட்சிப் பகுதியில் அமைந்துள்ள முன்னணி பாடசாலைகளில் ஒன்றான ஹாட்லிக் கல்லூரியில் புதிய மாணவர் விடுதி நேற்று முன்தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
“இயன் கரன் விடுதி ” என பெயரிடப்பட்டுள்ள இந்த மாணவர் விடுதியானது, ஹாட்லிக் கல்லூரியின் பழைய மாணவரும், கல்லூரி பழைய விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்றவரும், தற்பொழுது ஜேர்மனி நாட்டின் ஹம்பேர்க் பிரதேச செனட்டருமான திரு இயன் கே.கரன் மற்றும் திருமதி பார்பா கரன் ஆகியோரினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் த.குருகுலராஐா, இலங்கைக்கான ஜேர்மனிய தூதுவர் கலாநிதி யுயோகன் மோஹாட் ஆகியோர் விசேட விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்கள்.
மேலும் கல்வித்துறை சார்ந்த உயர் அதிகாரிகள், அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், மாணவர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்கள்.
வடமராட்சிப் பிரதேசத்தில் எண்பதுகளின் நடுப்பகுதிவரை மிகச்சிறப்பாக ஹாட்லிக் கல்லூரியில் மாணவர் விடுதி இயங்கி வந்ததும், இதில் யாழ் மாவட்டம் உட்பட்ட பல பிற மாவட்டங்களிலிருந்தும் பல மாணவர்கள் தங்கி கல்வி கற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.