நடைபெற்றுக்கொண்டிருக்கும் வல்வெட்டித்துறை வாலாம்பிகா சமேத வைத்திஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் 15 ஆம் நாளான நேற்று, தேர் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இத்தேர் திருவிழாவில் சோமஸ்கந்த மூர்த்தி, இராஜராஜேஸ்வரி, பிள்ளையார் , முருகன் , சண்டேஸ்வரர் ஆகியோரின் விக்கிரகங்கள் பஞ்சரதத்தில் வீதி உலா வந்தார்கள் . யாழ்ப்பாணத்தில் முதன்முதலில் வல்வெட்டித்துறை சிவன் கோவிலிலேயே பஞ்சரம் இழுக்கப்பட்டதாக அறியமுடிகிறது. பல வருடங்களின் பிறகு நேற்றைய தினம் விக்கிரகங்கள் பஞ்சரத்தில் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்துள்ளார்கள்.
வருடத்தில் பொதுவாக அதிகளவு பக்தர்கள் பங்குகொள்ளும் இந்த மகோற்சவத்தில், ஏராளாமான பக்தர்கள், வல்வெட்டித்துறை மற்றும் வல்வெட்டித்துறையின் சுற்றுவட்டக் கிராமங்களான வல்வெட்டி, கம்பர்மலை, கொமந்தரை, கெருடாவில் மற்றும் தொண்டைமானாறு ஆகிய பகுதிகளிலிருந்து கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
வல்வை வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வரர் ஆலயத்தின் புதிதாக வடிவமைக்கப்பட்ட தேர்கள் 18.03.13 அன்று வெள்ளோட்டம் விடப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
புதிதாக வடிவமைக்கப்பட்ட இந்த புதிய தேர்கள், கடந்த வருடம் ஏற்பட்ட தாளமுக்கமான 'நிலாம்' புயலினால் சரிந்து சேதமடைந்து பின்னர் திருத்தி வடிவமைக்கப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
வல்வெட்டித்துறை சிவன் கோவிலானது, வல்வெட்டித்துறைச் சந்தியிலிருந்து மேற்காக சுமார் 500m தூரத்தில், காங்கேசந்துறை - பருத்தித்துறை வீதியில், வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு அருகாமையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் பிரசித்திபெற்றதும் புராதனவுமான பெரியதுமான வல்வெட்டித்துறை சிவன் கோவிலும், இதற்குச் சொந்தமான இலங்கையின் பல்வேறு இடங்களிலுமுள்ள ஏராளமான நிலங்கலும் திரு.திருவேங்கடம் குடும்பத்தினருக்குச் சொந்தமானதாகும். திரு .திருவேங்கடம் அவர்கள் திரு. வே .பிரபாகரன் அவர்களின் பாட்டனார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.