மறக்க முடியாத கறுப்பு ரோஜா அருமை அண்ணா.. - கி.செல்லத்துரை
பிரசுரிக்கபட்ட திகதி: 02/07/2015 (வியாழக்கிழமை)
அமரர் பரமகுருசாமி அருமைச்செல்வத்தை நாம் அக்காலத்தே அருமை அண்ணா என்று அன்போடு அழைப்போம்..
உதயசூரியன் விளையாட்டுக்கழகம் என்றால் உடனடியாக மனத்திரையில் சில சிரித்த முகங்கள் அணி வகுத்து நிற்கும் அப்படி நினைக்கும்போதெல்லாம் அவர் முகம் என் நினைவில் வரும்.
வல்வையில் வாழும் காலத்தில் இவருடைய சகோதரர் துரைச்செல்வம் எமது வல்வை பாரத் கலாமன்றத்தில் முக்கிய நடிகராக திகழ்ந்துவந்தார், இதனால் இவர்கள் வீட்டுக்கு தினசரி போவேன்..
இவருடைய தாயாரின் விருந்தோம்பும் பண்பு இன்றுவரை மனத்திரையில் இருந்து நீங்க மறுக்கிறது, அந்த நேரத்தில் நாடகத்தில் முன்னேற வேண்டுமென அடிக்கடி எமக்கு உற்சாகம் தருவார், தனது ஆதரவை புன்னகையால் செலுத்துவது இவருடைய இயல்பு.
ரோஜாக்கள் பேசுவதில்லை ஆனால் புன்னகையால் மனிதர்களால் சொல்ல முடியாத செய்திகளை சொல்லிவிடும், அதுபோல புன்னகையால் பேசி முடிக்கும் கறுப்பு ரோஜா அருமை அண்ணா.
வார்த்தைகள் இல்லாமல் புன்னகையால் அவர் சொல்லும் செய்திக்குள் பல பக்கங்கள் அடங்கிய செய்திகள் இருக்கும் புரிந்தவர்க்கு அது ஒரு வாழ்வியல் கலை, புரியாதோர்க்கு புன்னகை.
இவரிடம் இன்றைய புலம் பெயர் வல்வையர்களும், தற்போது வல்வையில் உள்ளவர்களும் இவரிடம் கற்றுக்கொள்ள வேண்டிய சிறந்த பண்புகள் நிறையவே உள்ளன.
புலம் பெயர் வல்வையர்கள் ஐரோப்பாவில்தான் இருக்க வேண்டும் என்பதில்லை, திருச்சியில் இருந்தாலும் அவர்கள் புலம் பெயர் வல்வையர்களே.
கடந்த 24 வருடங்களுக்கு முன்னர் திருச்சியில் உள்ள குமரன் நகரில் எனது தந்தை இறந்தபோது ஒரு புலம் பெயர் வல்வையராக அருமையண்ணாவைச் சந்தித்தேன்.
நான் டென்மார்க்கில் இருந்து சென்றிருந்தேன்.. நான் போகாவிட்டால் என்ன நடந்திருக்குமோ என்று நினைத்தேன்.. ஆனால் அருமை அண்ணா அங்கு வந்து சேர்ந்துவிட்டார்.
இறுதிக்கிரியைகளை கடைசி வரை நின்று நடத்தினார்.. உலகில் எந்த மூலைக்கு போனாலும் வல்வை மக்கள் ஒரு வல்வை குடிமகன் இறந்துவிட்டால் ஓடிச்சென்று உதவவேண்டும்..
வல்வை குடிமகன் ஒருவன் ஒரு நல்ல காரியத்தை செய்தால் அந்த இடத்தில் அழைப்பிதழ் இல்லாமலே ஆதரவளித்து நிற்க வேண்டும், அதுதான் வல்வை என்பதை அவரிடம் கண்டு கொண்டேன்.
வல்வை மக்கள் என்பது ஒரே விடயம்தான் என்பதை திருச்சியில் உள்ள வல்வை உறவுகளிடம் கண்டு வியந்து போனேன்.
வல்வை என்பதன் பொருள் ஒட்டுமொத்த வல்வையின் ஒற்றுமை என்பதை வாழ்ந்தும், செயலிலும் காட்டிய பெருமகன் இவர்.
வல்வையின் வெற்றிக்குக் காரணமான அடிப்படை இலக்கணம் தெரிந்த பெருமக்கள் தற்போது மிகமிக சொற்பமானவர்களே புவிப்பந்தில் எஞ்சியுள்ளார்கள்.
எஞ்சிய ஒரு சில வல்வை மலர்களில் ஒரு கறுப்பு ரோஜாவை வல்வை இழந்து நிற்கிறது.
இலங்கையில் தமிழர்கள் வாழ்வதற்கு ஒரு நெறி இருக்கிறது.. ஆனால் ஒரு வல்வைக் குடிமகன் வாழ்வதற்கு அதைவிட மேலும் ஒரு சிறப்பு நெறி இருக்கிறது..
எழுதப்படாத அந்த நெறி தெரிந்த ஒரு வல்வை மகன் இவர்.
இப்படி இவருடைய வாழ்க்கையில் இருந்து இன்றைய வல்வை இளையோர் கற்றுக்கொள்ள ஏராளம் விடயங்கள் உள்ளன.
அன்னாரின் ஆத்ம சாந்திக்கு எல்லாம் வல்ல பேரொளியை பிரார்த்திக்கிறேன்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.