வாரம் ஒரு பழங்கதை - “ இறுதியாத்திராரதம்” - வல்வையூா் அப்பாண்ணா
பிரசுரிக்கபட்ட திகதி: 23/11/2015 (திங்கட்கிழமை)
கடவுள் அப்பா ஞாபகார்த்தமாக வல்வை ஒன்றியத்தால் அன்பளிப்பு செய்யப்பட்டு இன்று சேவையிலுள்ள இறுதியாத்திரைரதத்தில் எழுதப்பட்டுள்ள வாசகமே“ இறுதியாத்திராரதம் ” என்பதாகும். இறுதி + யாத்திரை + ரதம் எனும் மூன்று சொற்களின் புணா்ச்சியே “ இறுதியாத்திராரதம் ” என்றாயிற்று.
ஒரு வீட்டில் மரணம் நேர்ந்துவிட்டால் “ எங்கள் வீட்டில் இறப்பு நேர்ந்துவிட்டது. வாருங்கள் ” என யாரையும் அழைக்கும் வழக்கம் ஊரில் எக்காலத்திலும் இருந்ததில்லை. ஆனாலும் ……….
மரணம் நிகழ்ந்த வீட்டார் முதலில் தெரியப்படுத்த வேண்டிய தவிர்க்க முடியாத ஒரே நபராக இருந்தவா் “ கடவுள்அப்பா ” என அனைவராலும் அழைக்கப்பட்டு வந்த “ கந்தசாமி முருகுப்பிள்ளை ” ஆவார்.
கடவுள் அப்பா
கடவுள் அப்பா வீட்டுக்கு வந்தால்த்தான் பிரேத ஊர்வலத்திற்கான “ கட்டில் கட்டும் ” சங்கதி நிறைவேறும். கடவுள் அப்பா வீடு தேடிச் சென்று மரணச்செய்தி அறிவிப்பவரிடம் அப்பா இவ்வாறு தெரிவிப்பார். “ 2 கட்டு கமுகம் சலாகை, சணல்கயிறு, இளைக்கயிறு, பூவரசம் தடிகள், தென்னம் ஓலை மட்டை, கட்டிலை மூடிக்கட்ட வெள்ளைவேட்டி, கட்டிலைச் சுற்றிக் கட்டமான் புள்ளிச்சேலை ( பிரபலமான மான்புள்ளிச் சேலை இல்லாத வீடுகளே அந்நாளில் இல்லை. வயது முதிர்ந்த பாட்டிகள் மான்புள்ளிச் சேலை கட்டினால் அதற்குத் தனி கௌரவமே இருந்தது) மான் புள்ளிச் சேலையின் நீளம் 7 முழம்) இவைகளைத் தயார் செய்து வைத்திருங்கள். நான் காலையில் / மாலையில் வருகிறேன் ” என பதில் சொல்லி அனுப்புவார்.
வீட்டாரும் தயார் நிலையில் இருப்பார்கள். கடவுள் அப்பா செத்த வீட்டிற்கு வந்து சம்மணம் கட்டி உட்கார்ந்து தடிகளை அளவெடுத்து வெட்டிக் கொடுக்க, உதவிக்கு நிற்கும் பலரும் அவர் சொல்வதைச் செய்து முடிப்பா்.
சவக்கட்டிலின் இறுதிக் கட்ட வேலையாக – மேலாக வெள்ளை வேஷ்டியும் – காவு தடியைச் சுற்றி மான் புள்ளிச் சேலையும் கட்டிவிட்டால் சவக்கட்டில் ரெடி. ஒன்றரை மணி நேரத்தில் இந்த வேலை முடிந்ததும் பிரேத ஊர்வலம் ஆரம்பமாகி விடும். கடவுள் அப்பாவும் தனது சகபாடியான சுந்தரலிங்கம் மேத்திரியாருடன் தாக சாந்திக்காகப்( கள்ளுக்கு) புறப்பட்டு விடுவார்.
சுந்தரலிங்கம் மேத்திரியார் கடவுள் அப்பாவின் சகபாடி – நண்பா் – ஆலோசகா்- சம்பந்தி அனைத்துமாவார். இன்று மேத்திரியார் தளர்ந்து விட்ட போதும் சுகநிலையில் நடமாடுகிறார்.
சுங்கவீதியில் மேற்குப் பார்த்த படியாக இருந்தது கடவுள் அப்பா வீடு. நீண்ட காலமாக அந்த வீட்டிலேயே அவர் வாழ்ந்திருந்த போதும், அசாதாரண சூழ்நிலை காரணமாக இடம் பெயர்ந்து பின்னாளில் வன்னியில் சுதந்திரபுரத்திற் தங்கும்படி நேரிட்டது.
1997ல் தமது 83 வதுவயதில்கடவுள்அப்பாகாலமானார்.
கடவுள் அப்பா காலத்தில் கட்டில் கட்டுவதில் அவரோடு கூடவே ஒத்தாசையாக இருந்த பல பேரில் “ வெள்ளை அண்ணா ” முக்கிய நபராக இருந்தார். கடவுள் அப்பாவின் காலத்தின் பின்னா் “ வெள்ளை அண்ணா ” இந்தக் கைங்காரியத்தை மேற்கொண்டு வந்தார்.
கடவுள் அப்பாவின் பிள்ளைகளில் ஒருவரான “ திலகி ” எனப்படும் ஆனந்தராசா கடவுள் அப்பாவின் ஞாபகார்த்தமாக ஒரு நற்பணி செய்தார். கட்டில் கட்ட பிரதானமாகத் தேவைப்படுவது ஒரு சோடி காவுதடிகளே. சவுக்கு மரத்தில் ஒரு சோடியும் – பனை மரத்தில் ஒரு சோடியுமாகச் சீவி எடுத்து குறுக்குத்தடிகள் இட்டு – போல் நட்டு வைத்து இறுக்கி – பார்வைக்கு ஒரு “ ஸ்ரெச்சர்” மாதிரியான அமைப்பை ஒத்ததாக – மிக உறுதியான இரு சோடி காவு தடிகளைப் பாவனைக்குக் கொடுத்தார் திலகி.
கடவுள் அப்பா காலத்திற்குப் பிந்திய அந்த இடைக்காலத்தில் இந்தக் காவுதடிகள் கட்டில் கட்டப்பேருதவியாக இருந்தன.
இந்நிலையில், வல்வை ஒன்றியத்தினா், “ கடவுள் அப்பா ஞாபகார்த்தரதம் ” எனும் பெயரில் ஒரு இறுதியாத்திரைரதத்தினைத் தயார் செய்யத்திட்டமிட்டு, அதனைத் “ திலகி ” க்கும் தெரியப்படுத்தினா். “ கடவுள் அப்பா பெயரிலானரதம் , எவ்வித வேறுபாடுமின்றி தேவைப்படும் அனைவருக்கும் பயன்பட வேண்டும் ” எனும் “ திலகி ” யின் கருத்தினை ஏற்றுக் கொண்ட வல்வை ஒன்றியத்தினர், ரூபா 80,000/= வரை செலவு செய்து ரதத்தினை உருவாக்கினார்.
“ கடவுள் அப்பா ஞாபகார்த்தரதம் – அன்பளிப்பு : “ வல்வை ஒன்றியம். இறுதியாத்திராரதம் என எழுதப்பட்டிருந்த ரதம் மக்கள் பாவனைக்காக விடப்பட்டது. சரியான வேளையில் சரியான முடிவெடுத்துச் செயற்படுத்திய வல்வை ஒன்றியத்தினா் பாராட்டப்பட வேண்டியவர்கள். அவர்களுக்கு மக்கள் சார்பான மனமார்ந்த நன்றிகள்.
பழைய Delica வானை மாற்றம் செய்து இந்த ரதம் தயார் செய்யப்பட்டுள்ளது. மேற்தட்டு பிரேதம் வைப்பதற்கு ஏற்றப்படியாகவும், கீழ் தட்டு - ரதத்தினை அலங்கரிக்கும் பிளாஸ்ரிக் பூச்செண்டுகள், மாலை கொண்ட பெட்டிகள் வைப்பதற்கு ஏற்றதாயும் அமைக்கப்பட்டுள்ளது.
2003ல் உருவாக்கப்பட்ட இந்தரதம் ஏறக்குறைய ஒரு வருடம் ஊறணி வைத்தியசாலையைத் தரிப்பிடமாகக் கொண்டிருந்தது. ரதத்தினை ஒரு நிரந்தர தரிப்பிடத்தில் அமர்த்தும் தேவையை உணர்த்த கடவுள் அப்பாவின் மகன் “ திலகி ” வல்வை மகளிர் கல்லூரி விளையாட்டு மைதானத்தின் முன்பாக – வீதி ஓரமாக – இடு காட்டினுள் – நகர சபையின் அனுமதியுடன் – ரூபா ஒன்றரை லெட்சம் செலவு செய்து ஒரு நிரந்தர கட்டிடத்தை உருவாக்கியதும், 08-10-2014 முதல் ரதம் புதுமனை புகுந்து கொண்டது.
இறுதியாத்திராரதம் தரிப்பிடம்
ஏற்கனவே தயார் செய்யப்பட்டிருந்த இரண்டு சோடி காவு தடிகளும் ரதத்திற்கு பக்கத்துணையாக புதுமனை வந்து சேர்ந்தன. ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட மரணங்கள் ஏற்படும் போது இந்தக் காவு தடிகள் பெரிதும்பயன்படும்.
ரதத்தைப் பெறுவதிலும், ரதத்தை மீண்டும் உரிய இடம் கொண்டு வந்து சேர்ப்பதிலும் உள்ள குறைபாடுகளைத் தவிர்ப்பதற்காக அண்மைக்காலமாக எழுதப்படாத சட்டம் ஒன்று நடைமுறையில் தற்போது உள்ளது.
ஊறணி வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள விறகு காலையில் உள்ளவர்கள் ரதத்தினைத் தேவைப்படும் இடத்திற்கு “ லாண்ட்மாஸ்ரா் ” உதவியோடு கொண்டு வந்து சேர்ப்பார்கள். தேவை முடிந்ததும் சம்மந்தப்பட்டவர்கள் ரதத்தினை உரிய தரிப்பிடம் கொண்டு வந்து சோ்க்க வேண்டும். இதுவே விதிமுறை.
2003ல் செய்யப்பட்டு பாவனைக்கு விடப்பட்ட இறுதியாத்திரைரதம் இன்று 2015ல் மீண்டும் புனரமைக்க வேண்டிய ஒரு நிலைக்கு வந்துள்ளது. இந்த நிலை ஏற்பட்டமைக்கு கடல் நீா் ஒரு காரணமாக இருந்த போதிலும், பொதுமக்களாகிய நாமும் ஒரு காரணம் என்பதை மிகுந்த தயக்கத்தோடு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
ரதம் சுடலையடைந்ததும் – செய்து வந்த அலங்காரங்களைக் களைவதில் நாம் காட்டுகிற அவசர கோலம் ரதத்திற்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்துகிறது. அலங்காரங்களை அவசரமாக வெட்டித் தள்ளுவதும் – கொத்துவதும் – ரதத்தில் நிரந்தரமாக உள்ள பிளாஸ்ரிக் பூச்செண்டுகளை சேதப்படுத்துவதும் எல்லாம் எமது பொறுப்பற்ற செயலாகும். ரதம் பொதுவானது – எல்லோரும் பயன்படுத்த வேண்டியது – அதனை பாதுகாக்க வேண்டியது நமது கடமை என்கிற எண்ணம் நமக்கு வரவேண்டும்.
வல்வையூா்அப்பாண்ணா
அந்தப்பொறுப்புணர்வு வராத வரை ரதத்திற்கு அடிக்கடி புனர்வாழ்வு கொடுக்க வேண்டிய அவசியம் வரும்.
ரூபா ஒரு லெட்சம் செலவாகும் எனத் திட்டமிடப்பட்டுள்ள ரதத்தின் திருத்த வேலைகள் அடுத்த வாரம் ஆரம்பமாகிறது. இதற்கான முழுச்செலவையும் திலகியே ஏற்றுக்கொண்டுள்ளார். “ திருத்த வேலைகள் நிறைவு பெற்று புதிய தோற்றப் பெலிவுடன் வரவிருக்கும் “ இறுதியாத்திராரதம்” கடவுள் அப்பா ஞாபகார்த்தமாக வல்வை ஒன்றியத்தினால் அன்பளிப்பு செய்யப்பட்ட ரதமாகவே எப்பொழுதும் இருக்கும் ” எனப்பெருந்தன்மையோடு கூறிக்கொள்கிறார்“ திலகி ”.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
k.S.Thurai (Denmark)
Posted Date: November 23, 2015 at 21:54
இந்த ஆக்கம் படித்தபோது மனதிற்கு மகிழ்வு ஏற்படுகிறது.. இதுபோல எவ்வளவோ உண்டு செய்ய.. வல்வை மக்களின் புரிதல் போதாத காரணத்தால் சிறப்பாக வெளிநாடுகளில் உள்ளவர்களின் போட்டிகளால் பலத்த தடங்கல் ஏற்பட்டுள்ளது.. இதனாலலேயே பலர் ஒதுங்கிவிட்டார்கள்... துண்டுகளாக உடையும் வெளிநாடு வாழ் ஊரவருக்கு இந்த சவ வண்டிலாவது நல்ல புத்தி சொல்ல வேண்டும்... வல்வையின் அனைத்து ஒழுங்கைகளும் போகப்போவது ஊறணிதான் என்பதை உணர்த்துகிறது கடவுளப்பா சவ வண்டில்.. இதைப் புரிந்தால் நீங்கள் கோயில்களாகவும், கழங்களாகவும், ஒழுங்கைகளாகவும் பிளவுபட்டு நிற்க மாட்டீர்கள் என்று என்று கட்டுரையை முடித்திருந்தால் இன்னமும் சுவையாக இருந்திருக்கும். சமரசம் உலாவும் இடம் தெரியாதவர்களுக்கு பொது அறிவு தரும் கடவுளப்பாவும் வல்வையில்தான் வாழ்ந்தார்.. அவரைப்போன்ற வல்வையை பிளவுபடுத்தாதவர்களையே வரலாறு போற்றும் என்பதையும் அவர் வரலாற்றில் கண்டு மகிழ்கிறேன்.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.