தமிழக திருக்கோயில்கள் வரிசை- திருப்புன்கூா் - வல்வையூா் அப்பாண்ணா
பிரசுரிக்கபட்ட திகதி: 26/11/2015 (வியாழக்கிழமை)
தில்லைக் கூத்தனைத் தரிசிக்க “ நாளை போவேன் ……………….. நாளை போவேன் ”என்று கூறி நின்று, “ திருநாளைப் போவார் ” எனச் சிறப்புப் பெயர் பெற்ற நந்தனாருக்காக நந்தி விலகியிருக்கும் திருத்தலம் திருப்புன்கூா் ஆகும்.
திரு நாளைப் போவாரின் சொந்த ஊா் திருப்புன்கூரிலிருந்து 5 கி.மீதூரத்தே உள்ள சோழ நாட்டின் குக்கிராமமான “ ஆதனூா் ” ஆகும். இன்றும் அவ்வூர் அதே பெயரில் வழங்கப்படுகிறது.
இறைவன் மீதுள்ள தீராத அன்பினால், திருப்புன்கூர் சிவலோகநாதாரைத் தரிசிக்க எண்ணிக் கிழக்குப் பார்த்த வாசலின் வெளி வீதித்தேரடியில் நின்றபடி உள்ளே எட்டி எட்டிப் பார்க்கிறார் நந்தனார்.
வாசல் மண்டபத்திலுள்ள பெரு நந்தி மூலவரை மறைந்திருப்பது கண்டு மனம் மிக வருந்தினார். நந்தனின் உண்மைப் பக்தியை உலகுக்கு உணர்த்த எண்ணிய பரமன் நந்தியைச் சற்று விலத்தியிருக்குமாறு பணித்தார். இன்றுங்கூட அப்பெரிய நந்தியும் கொடிமரமும் இடது புறம் விலகிய படியே இருப்பதை நாம் காண்கிறோம்.
வெளி வீதியைச் சுற்றி வந்த நந்தனார், கோயிலின் மேற்குப் புறத்தே ஒரு பள்ளம் இருக்கக்கண்டு அதைத் தோண்ட ஆரம்பித்தார். “ எனக்கு உதவிட யாருமே இல்லையா? ” என்று வேதனையடைந்த நந்தனுக்கு, “ கணபதியை ” உதவிக்கு அனுப்பினார் கயிலை மலை நாயகர். அந்த இடம் தீர்த்தக்குளமாகச் சீா்பெற்றது. அக்குளம் “ கணபதி தீர்த்தம் ” என்றும் இங்குள்ள விநாயகர் “ குளம் வெட்டிய விநாயகர் ” என்றும் கோயில் வரலாற்றில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
கும்பகோணத்திலிருந்து மயிலாடு துறை ஊடாக சிதம்பரம் – சீா்காழி செல்லும் பாதையில் இடைநடுவில் இருப்பது மேற்குப் பார்த்த படியுள்ள “ வைத்தீஸ்வரன் கோயில் ” மேற்குக் கோபுர வாசலுக்கு செங்குத்தாகவுள்ள திருப்பனந்தாள் செல்லும் சாலையில் 3 கி.மீ தூரத்தில் “ திருப்புன்கூா் 1 கி.மீ ” என்கின்ற அறிவிப்புப் பலகையும், “ திருப்புன்கூர் சிவலோகநாத சுவாமி திருக்கோயில் ” என்கின்ற வீதியை மூடிய பெரிய வளைவும் வருகிறது. அந்த வீதியில் 1 கி.மீதூரத்தில் வருகிறது திருக்கோயில்.
இறைவன் :சிவலோகநாதர்
இறைவி : சௌந்தரநாயகி
தீர்த்தம்: கணபதிதீர்த்தம் (மேலே வரலாற்றுக் குறிப்புண்டு )
சிவனடியார்களை வணங்காது நேராக இறைவனைத் தரிசிக்கச் சென்ற சுந்தரரோடு முரண்பட்ட விறல் மிண்ட நாயனார் வந்து தங்கியிருந்து வழிபட்ட ஸ்தலம்.
ஐந்து நிலைகள் கொண்ட ராஜகோபுரம் திருப்பணிகள் செய்யப்பட்டு புதுப்பொலிவுடன் காணப்படுகிறது. துவார பாலகர்களைக் கடந்து உட்சென்றால் இடது பக்கம் சூரியன், நால்வருடன் கலிக்காமரும் சேர்ந்த சந்நிதி, சுந்தர விநாயகர் சந்நிதி உள்ளன. அடுத்துள்ள சோமஸ் கந்தரின் பெரிய திருவுருவம் மனதைக் கொள்ளை கொள்கிறது. மூலவர் மண் புற்றிலான சுயம்பு மூா்த்தியாகையால் இதன் மீது சாத்தப்பட்டிருக்கும் கவசத்தின் மேல் அபிஷேகம் நடைபெறுகிறது.
மூவர் திருப்பதிக மும்பளிங்குக்கற்களில் பொறிக்கப்பட்டு துலக்கமாகத் தெரிகிறது. திருநாளைப் போவார் பெயரில் ஒருநூல் நிலையம் இயங்குகிறது. தேரடியின் நந்தனார் நின்று தரிசித்த இடத்தில் நந்தனாருக்குத் தனிக்கோயில் கட்டியுள்ளார்கள்.
“முந்தி நின்ற வினைகள் அவைபோகச்
சிந்தி நெஞ்சே சிவனார் திருப்புன்கூா்
அந்தமில்லா அடிகளவா் போலும்
கந்த மல்கு கமழ்புன் சடையாரே” – சம்பந்தர் –
ஞானச்சுடர் – புரட் 2009
அடுத்தவாரம் : “ திருக்கடம்பூர் ” திருக்கோவில்
(1)“ நன்கடம்பனைப் பெற்றவள் பங்கினன் ” என அப்பர் பெருமான் பாடிப் பரவிய திருக்கோவில்
(2)கல்கியின் “ பொன்னியின் செல்வன்” நாவலின் கதை மையம் “ திருக்கடம்பூா் ”
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.