கப்பல் ஓட்டிய தமிழன் வீரகத்திப்பிள்ளையின் பேரன் ஏ.சு.வடிவேற்கரசனின் இழப்பு பேரிழப்பாகும்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/06/2013 (வியாழக்கிழமை)
வல்வெட்டித்துறைக்கும் எமது அயலூரான தொண்டைமானாறுக்குமான உறவு தாயின் தொப்புள்கொடி போன்றது. இரு ஊர் மக்களும் திரைகடல் ஓடித் திரவியம் தேடு என்பதற்கிணங்க கப்பல் வாணிபங்களில் சிறந்து விளங்கினார்கள்.
வடிவேற்கரசன் அவர்களின் பேரனார் வீரகத்திப் பிள்ளை அவர்களிடம் ஆறுக்கு மேற்பட்ட பாய்க்கப்பல்களும் 8500 மூடைகளை ஏற்றி இறக்கும் 'சிவசுப்பிரமணியபுரவி' என்ற பெரிய கப்பலும் இருந்துள்ளது. இவருடைய கப்பலில் வல்வெட்டித் துறையைச் சேர்ந்த மக்களே அதிகம் வேலை செய்தார்கள். இரு வருடங்களுக்கு முன்பு வரை வீரகத்திப்பிள்ளை அவர்களது வீட்டில் அவரது குடும்பத் தினரால், ஒட்டிப்பிறந்தவர்கள் போல இரு பெரிய நங்கூரங்களை பல வருடங்களாக பாதுகாத்து வைத்திருந்தனர்.
எமது வல்வை வரலாற்று ஆவணக்காப்பகம் வல்வையில் ஆரம்பித்தபோது நாங்கள் கேட்டதற்கிணங்க இதில் ஒன்றை பேரப்பிள்ளைகள், காப்பகத்திற்கு பொதுமக்கள் பார்வைக்காக அன்பளிப்பாக வழங்கியிருந்தனர். மற்றைய நங்கூரத்தை சென்றவருடம் செப்டெம்பரில் வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டுவிழா கொண்டாடிய போது அந்தப் பாடசாலையின் ஸ்தாபகர் வீரகத்திப்பிள்ளையவர்களின் நினைவுச்சின்னமாக வைத்துள்ளார்கள். இந்த நூற்றாண்டு விழாவை திரு.வடிவேற்கரசன் முன் நின்று ஒழுங்கு செய்ததோடு யாழ் இந்திய உதவித் தூதரை வரவழைத்து தனது பேரனாரின் முழு உருவச் சிலையையும் திறந்து வைத்திருந்தார்.
ஆவணகாப்பகத்தில் நங்கூரம்
இந்தியத் துணைத் தூதுவருடன்
ஆவணக்காப்பகத்தில்
'வீரகத்திப்பிள்ளை அன் சன்ஸ்' பின்பு 'இராசசேகரம் அன் சன்ஸ்' அதன் தொடராக 'வி.ஆர்.வடிவேற்கரசன்' நிறுவனமாக தேசிய நிறுவனமாக இயங்கி வந்த நிலையில் இவருடைய இழப்பு (1-06-2013ல்) அவரது குடும்பத்தினருக்கும் அவர் பிறந்தகமான தொண்டைமானாறுக்கும் பெரிய இழப்பாகும்.
தமிழரசுக்கட்சியின் தூண்களாக விளங்கிய குடும்பம் கட்சியின் நிதிவளத்தின் ஊற்றுக்களுள் வி.ஆர்.வடிவேற்கரசனின் குடும்பமும் ஒன்று. திரு அமிர்தலிங்கம் மீது அளவற்ற அன்பு வைத்தவர் திரு.வடிவேற்கரசன்.
திரு.வடிவேற்கரசன் அவர்களை இழந்து கவலையுற்றிருக்கும் மனைவி, பிள்ளைகள், சகோதரர்கள், குடும்பத்தினருக்கு எமது ஆறுதல்கள். செல்வச்சந்நிதி முருகன் பால் அயராத பக்தி கொண்ட அன்னாரின் ஆத்மா அம்முருகனின் பாதாரவிந்தங்களில் சாந்தியடைய வேண்டுவோமாக.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.