தமிழக முதல்வரிற்கு நன்றி தெரிவித்து தாயகம் செல்லவிரும்பும் மக்கள் அமைப்பினரால் சுவரொட்டிகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/02/2016 (வெள்ளிக்கிழமை)
சுற்றுலா விசாவில் தமிழ்நாடு வந்து வெளிப்பதிவில் தங்கியிருக்கும் ஈழத்தமிழர்களில் விருப்பத்தின் பேரில் இலங்கை செல்லவிரும்புபவர்களுக்கான விசாமுடிவு குற்றப்பண அறவீட்டினை நீக்குவது குறித்து மத்திய அரசுடன் இணைந்து செயற்பட்டு நடவடிக்கை எடுத்துள்ளமைக்காக தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு நன்றி தெரிவித்து தாயகம் செல்லவிரும்பும் மக்கள் அமைப்பின் சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.
நன்றி! நன்றி! நன்றி!
ஈழத்தமிழினம் விடுதலை வென்று, உலகத் தமிழினம் முகவரி கண்டிட உணர்வோடும் உளத் தூய்மையோடும் உழைத்த உன்னத மகான் 'பொன்மனச் செம்மல்' அவர்களின் வழித்தடத்தில் பயணிக்கும் எங்கள் தமிழ் குலத்தின் தலைமகளே வாழ்க! வாழ்க!! வெற்றிகொண்டு வாழ்க!!!
தாயகம் செல்லவிரும்பும் அகதிகளின் 'விசாமுடிவு குற்றப் பணத்தினை' இரத்துச் செய்ய மத்திய அரசோடு பேசி தீர்வுதந்த தமிழினத்தின் கருணைத் தாயே வாழ்க! வாழ்க! புகழோங்க வாழ்க!!
ஈழத்தில் பிறந்து தமிழகத்திற்கு நல்லாட்சி தந்த எங்கள் தெய்வத்திருமகன் கொடைவள்ளல் புரட்சித்திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் மறுவடிவமே வாழ்க! வாழ்க!! பல்லாண்டு வாழ்க!!!
மேற்கண்ட வாசகங்களுடன் 'தாயகம் செல்லவிரும்பும் மக்கள் அமைப்பின்' சார்பில் இச் சுவரொட்டிகள் சென்னை மற்றும் திருச்சி ஆகிய இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது.
விசாமுடிவு காலத்திற்கான குற்றப்பண அறவீடானது கடந்த ஒன்டரை ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் இருந்து வருகின்றது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் அறவிடப்பட்டுவந்த இக் குற்றப்பண அறவீட்டை நீக்குவதற்கு தாயகம் செல்லவிரும்பும் மக்கள் அமைப்பினர் முயற்சிகளை மேற்கொண்டுவந்தனர். இதன் விளைவாக மத்திய அரசு தரப்பில் இக்குற்றப்பண அறவீட்டை இரத்து செய்வதாக முடிவெடுக்கப்பட்டு அதனை நடைமுறைப்படுத்துமாறு தமிழ்நாடு அரசிற்கு தகவல் வழங்கப்பட்டது.
துறசார் நடவடிக்கைகள் செயல்பாட்டிற்கு வருவதற்கு தாமதமாகுமெனவும் அதற்கு இடைப்பட்ட காலத்தில் தாயகம் செல்லவிரும்புபவர்களது தகவல்களை சேகரித்து கொடுக்கும்பட்சத்தில் அவர்களுக்கு குற்றப்பண அறவீட்டில் இருந்து விலக்களித்து தாயகம் திரும்புவதற்கான ஏற்படுகளை செய்து கொடுக்க முடியுமென்று தமிழக அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளதாக தாயகம் செல்லவிரும்பும் மக்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
தமிழ்நாட்டில் இருந்து விருப்பத்தின் பேரில் தாயகம் செல்லவிரும்பும் ஈழத்தமிழர்களின் தொடர்பிற்காக தாயகம் செல்லவிரும்பும் மக்கள் அமைப்பின் மக்கள் தொடர்பாளர்களின் விபரங்களும் குறித்த சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.