களைகட்டி நின்ற அம்பாள் திருவிழா நிகழ்வுகள் 22.04.16 இல் நடந்த தீர்த்தோற்சவ விழாவுடன் நிறைவுக்கு வந்துள்ளது. பல்வேறு நாடுகளிலிருந்தும் வந்து குவிந்த பலநூறு பேர்களுடன், மட்டக்களப்பு – திருமலை – கொழும்பு என நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வந்திறங்கிய நம்மவர்களின் வருகையையும் சேர்த்து நாளுக்கு நாள் திருவிழாவிற்கு மக்கள் வெள்ளமாகக் குவிந்தனா்.
ஒட்டு மொத்த இடப்பெயர்வுக்கு முன்னர் ஒருகாலத்தில் இருந்த அதே கலகலப்பு – மகிழ்ச்சி - ஆரவாரம் - குசலம் விசாரிப்பு இருந்ததைப் பார்க்க முடிந்தது.
சுட்டெரிக்கும் வெய்யிலின் கொடுமை காரணமாக பகல் திருவிழாவிற்கு ஒரு அளவான பக்தர்களே காணப்பட்ட போதும் இரவுத் திருவிழாவிற்கு குறிப்பாக பாம்புத்திருவிழா (9ம் திருவிழா) முதல் இரவு வேளைகளில் வீதி நிறைந்த மக்கள் கூட்டத்தைக் காணமுடிந்தது.
22/04 தீர்த்தோற்சவத்தன்று காலையில், நெடியகாட்டிலிருந்து, அம்பாளை அழைத்துச் செல்ல வந்திருந்த பத்துக் கூட்டு பறை மேளங்களிலிருந்து எழுந்த ஊர் அதிரும் ஒலியுடன் ஊறணித் தீர்த்தக் கடற்கரை நோக்கிப் புறப்பட்ட அம்பாள், தீர்த்தமாடிக்கரையேறி, நெடியகாடு பிள்ளையார் கோவிலில் இளைப்பாறிக் கொண்டார்.
மாலை 7.30 மணி. நெடியகாடு பிள்ளையார் ஆலயத்திலிருந்து புறப்பட்டு, வடக்கு வீதியின் அலங்காரப் பந்தலுக்கு வந்ததுடன் தீர்த்தோற்சவத்தின் இரவு நேரவிழா கோலாகலமாகத் தொடங்கியது.
கிழக்கே ஊறணி தீர்த்தக் கடற்கரை முதல் மேற்கே சிதம்பரா மைதானம் வரையுள்ள 2km வரை நீண்ட வீதியெங்கும் வாழைகளும், தோரணங்களும், அலங்கார வளைவுகளுமாக வீதிகள் மின்னொளியில் ஜெகஜோதியாக மின்னின.
ஊறணி தீர்த்தக்கடற்கரை, மகளிர் மைதானம், பிள்ளையார் மோர் மடம், ரேவடி வி.க.மைதானம், உதயசூரியன் கடற்கரை மைதானம், அம்பாள் வீதியின் தென் மேற்கு மூலை, சிதம்பரா மைதானம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டிருந்த மேடைகளில் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடந்தபடியிருந்தன. வழிநெடுகிலும் வழங்கப்பட்ட சுவையான சுக்குக்காப்பி – தேநீர் – ஜஸ்கோப்பி – யூஸ் – சர்பத் இவைகளை அருந்தியபடி நடந்து திரிந்த, குடாநாட்டின் பல பக்கங்களிலிருந்தும் வந்திருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கூட்டம் ஆங்காங்கே இருந்தமேடைகளுக்கு முன்பாக அமர்ந்திருந்து ஆறுதல் பெற்றார்கள்.
வழமையான வளைவுகள், அலங்காரங்கள் வாழை தோரணங்கள் – இவற்றுக்கெல்லாம் அப்பால், வல்வைச் சந்நிதியில் – வட- கிழக்கு நோக்கிய படி – சிவஞானசுந்தரம் ஞாபகார்த்த பஸ்தரிப்பிடத்திற்கு முன்பாகக் காணப்பட்ட“ குருத்தோலை விநாயகரின் கருவறை அமைப்பும் – முகப்பும்” கலை உணர்வு கொண்ட அனைவரையும் கட்டிப்போட்டது.
சிதம்பரா சாரணீயத்தோடு இணைந்திருந்த காலத்தில், யாழ் பழைய பூங்கா சாரணா் போட்டிகளின் போது, எமது பாசறை முகப்பு வாயில்களை ஒவ்வொரு வருடமும் வித்தியாசமான முறையில் அமைத்து அனைவரையும் அசத்திய அனுபவமும் ஆர்வமும் என்னை அந்த இடம் நோக்கி நெருங்கிச் சென்று ஆய்வு செய்ய வைத்தது.
அதி அற்புதமான ஒரு முகப்பு வாசல், பின்புறம் தவிர்ந்த ஏனைய பக்கங்களிலிருந்து பார்த்து ரசிக்கக்கூடியதான 2 அடி உயரம் கொண்ட தென்னோலைச் சுவர் அமைப்பு, மையத்தில் மூலவராக“ குருத்தோலை விநாயகர்” – இதுவே அந்த அமைப்பின் விபரம்.
வெண்மையான தென்னம் குருத்தோலை – குருத்தோலைக்கு அடுத்துள்ள இளம்பச்சை ஓலை, மேற்புறமுள்ள கரும்பச்சைத் தென்னோலை மட்டுமே இந்தகண்கவா் அமைப்புக்கு பாவிக்கப்பட்டிருக்கிறது. மூன்று விதமான தென்னோலைக்கும் உள்ள நிறவித்தியாசம் தெளிவாகத் தெரிகிறது. இதைவிட தென்னம்பாளைக்கு உள்ளே உள்ள பூவும் பல இடங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
பனை – தென்னை ஓலைகளினால் செய்யப்படும் அலங்காரப்பொருட்கள் – அலங்கார வளைவுகள் நம்மவர்களுக்கு கைவந்த கலையாக இருந்தபோதும், நாளாக நாளாக இக்கலை அயற்கிராம மக்கள் பெட்டி, பாய், சுளகு செய்வதுடன் சுருங்கிப்போய்விட்டது.
இதனால் இவற்றினை ஆக்கி மக்கள் பார்வைக்கு அளிக்கின்ற கலைஞர்களும் குறைந்துபோய்விட்டனா். குருத்தோலை விநாயகரை ஆக்கித்தந்த இந்த அற்புதக்கலைஞன் “வெற்றிவடிவேல்இராஜேந்திரன் ” (ரகு) என்பவர் ஆவார். தீருவில் பாலம் அருகே வசித்துவரும் வெற்றிவடிவேல் ஆசிரியரைத் தெரியாதவர்கள் இருக்கமுடியாது.
நீண்டகாலமாகவே தனியார் கல்விக்கூடம் ஒன்றினை நடாத்திவரும் இவர் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்குப் பிள்ளைகளைத் தயார்செய்து பலவருடங்களாக வெற்றிகண்டு வருபவா். இவரது மகனே“ ரகு ” எனப்படுகின்ற “ இராஜேந்திரன்”. “ சித்திரமும் வடிவமைப்பும் ” பிரதான பாடமாகக் கொண்ட ஒரு நுண்கலைப் பட்டதாரி.
தற்போது வடமராட்சி கிழக்கு ஆழியவளை சீ.சீ.த.க வித்தியாலயத்தில் கற்பித்துவரும் ஆசிரியர் இவர். பல்கலைக்கழகத்தில் இவர் பெற்ற நுண்கலைப்பயிற்சி இவரது சிந்தனையைத் தூண்டி பலவற்றையும் ஆக்கிவெற்றிகளையும் தேடித்தந்திருக்கிறது.
ஏற்கனவே, இந்திரவிழா வேளையில் 2011ல் இவரது கைத்திறனில் உருவான“ பொய்கால் குதிரை ”, 2013 இல் சந்தியில் கட்டப்பட்டிருந்த 37 அடிஉயரமான “நர்த்தன விநயாகர்” போன்றவை பலரதும் பாராட்டுதலைப் பெற்றன.
தைப்பொங்கல் நாளை முன்னிட்டு வல்வை விக்னேஸ்வரா ச.ச.நிலையமும், உதயசூரியன் கழகமும் இணைந்து நடாத்திவரும் பட்டப்போட்டி விழாவில் 2012 ல் இவரது ஆக்கத்தில் தயாரன "விமானம் ”, 2013ல் “ சனிக்கிரகம்” ஆகியன முதற்பரிசைப் பெற்றுக்கொண்டதுடன் பார்வையாளார்களின் ஏகோபித்த பாராட்டுதலையும்பெற்று, ஒரு அற்புதக்கலைஞனை வெளிக்காட்டியது.
வடமாகாண முன்னாள் ஆளுனா் கௌரவ சந்திரஸ்ரீ அவர்களின் ஏற்பாட்டில் துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்ற பட்டப்போட்டியில் 2 ஆம் இடம்பெற்று கௌரவிக்கப்பட்டார்.
ஆசிரியர் மாநாடு, பௌர்ணமிவிழா, வலயமட்ட- மாகாணமட்டப் போட்டிகள் ஆகியவற்றில் தனது கல்லூரி மாணவர்களினூடாக “பொம்மலாட்டம்” காண்பித்து அனைவரையும் அசத்தினார்.
சிலை வடிப்பதிலும், ஓவியத்திலும் இவர் விற்பன்னா் என்பதை பல்வேறு இடங்களிலும் வெளிக்காட்டியுள்ளார். தொண். வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய மண்டப முகப்பிலுள்ள நிறுவனா்“ வீரகத்திப்பிள்ளை ”யின் முழு அளவிலான சிலையும், உடு.அ.மி.ஆரம்ப பாடசாலை வளாகத்தில் இவரது ஆக்கத்தில் உருவான சிலைகளும் இவரது திறமைக்குச் சான்று பகிர்கின்றன.
“ குருத்தோலை விநாயகர் ” மனக்கண்ணில் தோற்றம் பெற்றவுடனேயே இந்தக்கலைஞன் செய்தமுதற்காரியம் இதுதான். பனை ஓலைத்தயாரிப்புகள் நடக்கும் இடத்திற்குச் சென்று – ஓலைகளை ஒரே அளவாகக் கிழித்து எடுக்கவும், ஓலைக்குச் சாயம்போடுகிற அளவையும் நுணுக்கங்களையும் அறிந்துகொண்ட தேகலை ஆர்வமுள்ள இக்கலைஞனின் முதற்பணியாக இருந்தது.
சிலாகைகள், மூங்கில்கள், சீமெந்து கடுதாசி, நிறக்கடுதாசி ஆகியவற்றினைக் கொண்டு கட்டவுட்டுகள் – முகப்புகள் -நுழைவாயில்கள் ஆகியவற்றினை உருவாக்க எடுக்கும் கால அவகாசம் குருத்தோலைத் தயாரிப்பில் கிடைக்காது. ஆனாலும், “ குருத்தோலை விநாயகரின் ” ஆக்கத்தின் உட்புற அமைப்பு சில நாட்களுக்கு முன்பு தயாரான போதும், தென்னோலை வேலைகள்அனைத்தும் 2 பகலிலும் 1 இரவிலும் மட்டுமே செய்து முடித்தமை ஒரு சவாலானவிடயமாக அமைந்தது. (கூடுதலான காலம் எடுத்தால் குருத்தோலைகள் வாடி – நிறம்மாறி – சுருண்டு விடும் அபாயம் உள்ளது)
இவரும், இவருடன் கூடவே உதவி புரிந்த ஐந்தாறு பேர்களுடன் இந்தக் “குருத்தோலைவிநாயகர் ” பூரணத்துவம் பெற்றார். இவர்களைவிட சின்னஞ் சிறுசுகள் பலபேரும் இவரது ஆக்கத்திற்கு பேருதவி புரிந்தனா்.
மிகக் கடுமையான வெய்யில் கொழுத்திய திருவிழாநாட்களை யாரும்மறந்திருக்க முடியாது. அதனால் மாலை 5,6 மணிக்குப் பின்னரே முகப்பு வாசலின் பிரதான பகுதிகளை வெளிக்காட்ட வேண்டிய கட்டாயம்இருந்தது.
ஒருவாறாக தீர்த்தோற்சவ விழாவுக்கான மக்கள்கூட்டம் அலைமோத முன்னா்.“குருத்தோலைவிநாயகர்” உரிய இடத்தில் அமர்ந்துகொண்டார். இந்தவிநாயகரின் முகப்பு வாசலின் உயரம் 9’அகலம் 14’. முகப்புவாசல், கணபதியின் கருவறை இவற்றில் மேலதிகமாகச் செய்யப்பட்டிருந்த “கைவேலை” பார்வையிட்ட அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
கருவறைவிநாயரின் பின்புறச்சுவரில் (அதுசுவரல்ல.. அதுவும் தென்னோலைப்படல்களே) காணப்பட்ட ஒரு சோடி அன்னம், ஜொலிக்கும் நட்சத்திரங்கள் , மொட்டு விரியும் தாமரைப்பூ ஆகிய இவைகளெல்லாம் இவரது கற்பனை விரிவுக்கும் – கைவேலைத்திறமைக்கும் சான்றுபகர்ந்தன.
உள்ளே கருவறையின்மையத்தில் விநாயகனின் அற்புதக்கோலம். சாய்ந்த விழிகள் நெற்றியில் திலகம் அகன்றகாதுகள், திரண்ட இரண்டுகரங்களில் “எப்பொழுதும் நான் உன்னுடனேயே உள்ளேன் ”.எனக்கூறும் வலது அபயகரம், இடதுகையில் மோதகம் என அழகான“ குருத்தோலைவிநாயகர் ” அனைவரையும் வரவேற்கிறார்.
இத்தனை நுணுக்கம் நிறைந்த கணபதியின் கண்கவா் கருவறையை குருத்தோலையில் அமைத்து அசத்திய ஆசிரியா் இராஜேந்திரன், தன்னுடன் இந்த ஆக்கத்திற்குஉ தவிய இளவல்களின் பெயரில்,“ ஆக்கம்:குழவிகள்கலாமன்றம்” எனக் குருத்தோலையில் எழுதிவைத்தது இவரது பெருந்தன்மையைக் காட்டிநிற்கிறது.
சித்திரம்- சிலைவடிப்பு- ஓவியம் கைவேலை ஆகியன அனைத்தும் அறிந்த நம் கண்ணெதிரே உள்ள இந்த அற்புதக் கலைஞனை மேலும் மேலும் ஊக்கப்படுத்தி அவரது திறமைகளை வெளிக்கொணர நாம் முயற்சிக்க வேண்டும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.