இலங்கையில் நடைபெற்ற போர் காரணமாக பல்வேறு காலகட்டங்களில் வட கிழக்கைச் சேர்ந்த தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு புலம்பெயர்ந்து சென்றிருந்தார்கள்.
அவ்வாறு தமிழ்நாட்டில் அகதிகளாக தஞ்சமடைந்தவர்களில் ஒரு பகுதியினர் தமிழ்நாடு அரசின் அதிகாரத்திற்குட்பட்ட மறுவாழ்வுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள முகாம்களில் தங்கிவருகின்றார்கள்.
இவ்வாறு 113 முகாம்களில் 75ஆயிரத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் வசித்துவரும் நிலையில் தமது சொந்தச் முயற்சியில் வெளிப்பதிவு அகதிகளாக சுமார் 35 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றார்கள்.
அகதிகள் முகாமில் உள்ள தமிழர்களில் தாயகம் திரும்ப விரும்புபவர்களுக்கு மறுவாழ்வுத்துறை மற்றும் யு.என்.எச்.சி.ஆர். இணைந்து அனைத்து வசதிகளையும் செய்துவரும் நிலையில் வெளிப்பதிவு அகதிகளாக வசித்து வருபவர்கள் தாயகம் திரும்பும் போது பெருந்தொகை பணத்தை குற்றப்பண அறவீட்டின் பெயரால் செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டிருந்தார்கள்.
அகதி முகாம் பதிவில் இருப்பவர்கள் UNHCR மூலம் எதுவித குற்றப்பண அறவீடும் இன்றி தாயகம் திரும்பிவரும் நிலையில் சுற்றுலா விசாவில் சென்று தமது சொந்த முயற்சியில் வெளிப்பதிவில் தங்கியிருப்பவர்கள் புதிய நடைமுறையால் கடந்த 2 ஆண்டுகளாக பெரும் பாடுபட்டு வருகின்றார்கள்.
சுற்றுலா விசாவில் வந்தவர்கள் விசா முடிந்து தங்கியிருந்த காலத்திற்கு குற்றப்பணம் கட்டவேண்டும் என்ற நடைமுறையே கடந்த 2 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. இதன்படி 10 ஆண்டுகள் தமிழகத்தில் தங்கியிருக்கும் ஒருவர் இந்திய மதிப்பில் ஐம்பதாயிரத்திற்கு மேல் குற்றப்பணம் கட்டவேண்டும். அதுவே ஒரு குடும்பத்தில் 5 பேர் என்றால் இரண்டரை லட்சத்திற்கு மேலாகும்.
இந்திய மத்திய அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்ட இப்புதிய திட்டத்தால் பெரும்பாலானவர்கள் பாதிக்கப்பட்டார்கள். இது குறித்து தாயகம் செல்லவிரும்பும் மக்கள் அமைப்பினைச் சேர்ந்தவர்கள் மத்திய, மாநில அரசுகளின் பிரதிநிதிகளுடன் பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியதன் விளைவாக இந்த பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது.
இந்த நடைமுறை கடந்த சித்திரை மாதமே அமலுக்கு வந்திருந்தாலும் வெளிப்படையான அறிவுப்புகள் எதுவும் சம்பந்தப்பட்ட துறைகளின் சார்பில் வெளியிடப்பட்டிருக்கவில்லை. இதனாம் மக்களிடம் பெரும் குழப்பம் நிலவிவந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் பலர் குற்றப்பண அறவீட்டில் இருந்து விலக்களிக்குமாறு விண்ணப்பித்திருந்த போதிலும் சிலர் தெளிவான தகவல்கள் இல்லாத காரணத்தால் பெரும் தொகைப் பணத்தை செலுத்தியுள்ளார்கள்.
இந்நிலையில்தான், அகதிகள் மறுவாழ்வுத்துறை ஆணையாளர் அலுவலகத்தின் சார்பில் அதன் பொறுப்பதிகாரியும் சென்னை யு.என்.எச்.சி.ஆர். அலுவலகப் பிரதிநிதியும் கலந்து கொண்ட நிகழ்வு திருச்சி கே.கே.நகரில் நடைபெற்றுள்ளது.
திருச்சி கே.கே.நகர், கருமண்டபம், சுப்பிரமணிய புரம் ஆகிய பகுதிகளில் வெளிப்பதிவு அகதிகளாக வசித்துவரும் இலங்கைத் தமிழர்களை ஒன்றிணைத்து கடந்த (04/08/2016) வியாழன் அன்று கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
சென்னையில் இருந்து வருகை தந்திருந்த குறித்த அதிகாரிகள் விசா முடிவுகால குற்றப்பண அறவீட்டில் இருந்து விலக்குப்பெறும் வழிமுறைகள் குறித்து விளக்கமளித்திருந்தனர். முதல் முறையாக தமிழ்நாடு அரசதரப்பில் இருந்து இது குறித்து உத்தியோகபூர்வ அறிவிப்பினை இக்கலந்தாய்வுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளமை முக்கிய விடயமாகும்.
சுயவிருப்பத்தின் பேரில் தாயகம் திரும்ப விரும்புவோரிற்கு மட்டுமே இச்சலுகை வழங்கப்படும் என்றும் எக்காரணம் கொண்டும் கட்டாயப்படுத்தி யாரையும் திருப்பி அனுப்பும் நோக்கம் இல்லை எனவும் தெரிவித்திருந்தார்கள்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.