இலங்கை தொழில்துறை திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடமாகாண சபையும், மருதங்கேணி பிரதேச செயலகமும் இணைந்து கடந்த 16.08.2016 அன்று வடமராட்சி கிழக்கு உடுத்துறை பாரதி விளையாட்டுக் கழகத்தில் இளைஞர்களுக்கான மின்னிணைப்பு பயிற்சிநெறி ஒன்றினை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குறித்த பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வில் மருதங்கேணி பிரதேச செயலர் கனகேஸ்வரன், மருதங்கேணி தொழில் திணைக்கள உத்தியோகத்தர் யோகச்சந்திரன் பிரகலாதன், தொழில் திணைக்கள கணக்காளர் காண்டீபன், இப்பயிற்சி நெறியின் வளவாளர்களான கோகுலன், நிமல், பயிற்சிநெறியில் பங்கேற்கும் இளைஞர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
வேலைவாய்ப்பின்றி இருக்கும் இளைஞர்களின் தொழில் திறனை மேம்படுத்தும் முகமாகவும், அவர்களது வாழ்வாதாரத்தை பலப்படுத்தும் நோக்கிலும், சொந்த தொழிலொன்றை அவர்களே நடத்துவதற்கான திறன்களைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கிலும் மேற்படி பயிற்சி நெறியானது ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மின்னிணைப்பு பயிற்சி நெறி, மோட்டார் வைண்டிங், எலக்ரிக்கல், எலக்ரோனிக் தொடர்பான பயிற்சி நெறியினை வளவாளர்கள் சிறப்பாக போதித்து வருவதாக மகிழ்ச்சியுடன் கூறும் இளைஞர்கள் ஆரம்பத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை எனவும் கவலை தெரிவிக்கின்றனர்.
இப்பயிற்சி நெறி தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்களையும் அவர்கள் முன்வைக்கின்றனர்.
மூன்றுமாத காலம் உள்ள இப்பயிற்சியின் ஆரம்பத்தில் இப்பயிற்சி நெறிக்காக 15 இலட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், பங்கேற்கும் இளைஞர்களுக்கு 80 வீத வரவு இருக்கும் பட்சத்தில் நாளாந்த ஊக்குவிப்புத் தொகையான 200 ரூபாய் மாதாந்தம் வழங்கப்படும் என்றும், பயிற்சி நெறியின் முடிவில் அரச அங்கீகாரம் பெற்ற சான்றிதழும், 15000 ரூபாய் பெறுமதியான மின்னிணைப்பு, மோட்டார் வைண்டிங் வேலை செய்வதற்கான உபகரணங்களும் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கடந்த 8 ஆம் மாதம் தொடங்கிய பயிற்சி நெறி அடுத்தவாரத்துடன் நிறைவடைய உள்ளது. ஆனால், இன்னமும் அந்த இளைஞர்களுக்கான ஊக்குவிப்புத் தொகை எதுவும் வழங்கப்படவில்லை. ஆனால், பயிற்சி நெறி வளவாளர்களுக்கான வேதனம் ஒழுங்காக வழங்கப்பட்டு வருகிறது.
இதனால் பயிற்சி நெறியின் ஆரம்பத்தில் 15 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வருகை தந்துள்ளனர். பின்னர் 8 இளைஞர்களாக படிப்படியாகக் குறைவடைந்துள்ளது. வெவ்வேறு தொழில்களில் ஈடுபட்ட பல இளைஞர்கள் அதையெல்லாம் விட்டு விட்டு இப்பயிற்சி நெறியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொள்வதற்கான பிரயாணச் செலவுகளைக் கூட ஈடு செய்ய முடியாததனாலும், வாக்குறுதிகள் உரிய முறையில் நிறைவேற்றப்படாத காரணத்தினாலும் அவர்களின் வருகை குறைவடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இளைஞர்கள் இது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது, கடந்த வியாழக்கிழமை கணக்குகளில் பணம் வைப்பிலிடப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால், இன்னமும் அந்த மாணவர்களுக்கான பணம் வங்கியில் வைப்பிலிடப்படவில்லை.
இது தொடர்பில் மருதங்கேணி பிரதேச செயலாளர் கனகேஸ்வரனுடன் newsetv தொடர்பு கொண்டு கேட்ட போது,
குறித்த இளைஞர்களுக்கு ஊக்குவிப்புத்தொகை என்ன காரணத்துக்காக வழங்கப்படவில்லை என்பதனை உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரியை தொலைபேசியில் அழைத்து வினாவினார். அதற்கு குறித்த அதிகாரி தொழில்துறை திணைக்களத்தினால் நிதி இன்னமும் வழங்கப்படவில்லை என கூறியதாக தெரிவித்த பிரதேச செயலர், கூடிய விரைவில் அந்நிதியானது பெற்றுக் கொடுக்கப்படும் என உறுதியளித்தார்.
முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளிக்கும் அரச அதிகாரிகள்
குறித்த பயிற்சி நெறிக்கு தொழில் திணைக்களத்தால் நிதி வழங்கப்படவில்லை என எமக்கு கூறப்பட்டது. ஆனால், இளைஞர்கள் தொடர்பு கொண்டு கேட்ட போது கடந்த வியாழக்கிழமை நிதி வைப்பிலிடப்படும் என அதிகாரியொருவர் உறுதியளித்துள்ளார்.
நிதிக் கையாளுகை தொடர்பில் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளிக்கும் அதிகாரிகளால் விரக்தியடைந்துள்ள மாணவர்கள் இந்த திட்டத்துக்கான நிதிக் கூற்றினை பகிரங்கமாக வெளியிட வேண்டும் எனவும் கோருகின்றனர்.
இப்படியான தவறுகள் தொழில்துறை திணைக்களம், பிரதேச செயலகம் என்பவற்றுக்கு இடையே சரியான ஒத்துழைப்பு, தொடர்புகள் இல்லாமையாலேயே இடம்பெறுகின்றன. இதையும் தாண்டி சில அதிகாரிகளின் அலட்சியப் போக்குகள் இளைஞர்களின் மனதில் அவ நம்பிக்கையை விதைக்கின்றன. ஊக்குவிப்புத் தொகையைக் கூட வாக்குறுதி அளித்தபடி வழங்காதவர்கள் எப்படி இதற்கான சான்றிதழ்களையும், மின்னிணைப்பு தொழில் செய்வதற்கான உபகரணங்களை வழங்கப் போகின்றார்கள் எனவும் இளைஞர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்த விடயத்தில் தொழில்துறை திணைக்களம், வடமாகாண முதலமைச்சர் ஆகியோர் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.
இனி வரும் காலங்களிலாவது இளைஞர்களின் திறனை மேம்படுத்தும் இவ்வாறான பயிற்சிநெறிகளை வினைத்திறனுடனும், சிறப்பாகவும், வாக்குறுதிகளை உரிய காலப்பகுதியில் நிறைவேற்றிச் செயற்பட சம்பந்தப்பட்ட தரப்பினர் முன்வர வேண்டும் என்பதே அனைவரதும் கோரிக்கையாகும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Nandakumar (U.A.E)
Posted Date: November 06, 2016 at 21:16
Hi to all,
I need an electrical technician for my company in Dubai. We can offer you 60,000 Rs/month with accommodation, transport and other facilities for suitable candidate.
If anyone interested, Please ask them to contact with me.
Regards
K.Nandakumar
Managing Partner
Jernas Technical Services LLC
P.O.Box 183275
Dubai, U.A.E
Mob: 00971554604101
Email: jernasllc@yahoo.com
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.