யுத்தத்தில் உயிரிழந்தோரை நினைவுகூர அனுமதிப்பது குறித்து அரசு ஆராய்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 16/11/2016 (புதன்கிழமை)
ஜே.வி.பி கலவரத்தில் அரசாங்கத்திற்கு எதிராகப் போராடி இறந்தவர்களை நினைவுகூர இடமளித்திருப்பது போன்று யுத்தத்தினால் இறந்தவர்களையும் நினைவு கூர இடமளிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.
யுத்தத்தினால் அங்கவீனமுற்ற படையினருக்கு வாழ்வதற்கு வழியமைக்கப்பட்டுள்ளது. ஆனால் யுத்தத்தினால் அங்கவீனமுற்ற எல்.ரி.ரி.ஈ இளைஞர்களும், இறந்தவர்களின் குடும்பத்தினரும் அநாதரவாக உள்ளனர். இவர்களும் மனிதர்களே அவர்களுக்குச் செய்ய வேண்டிய சேவை குறித்து அரசாங்கம் கவனம் செலுத்திவருவதாகவும் அமைச்சர் கூறினார்.
வரவு- செலவுத் திட்ட இரண்டாவது வாசிப்பு மீதான மூன்றாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
1971, 1988, 1989, 1990 கலவரங்களின்போது அரசாங்கத்துக்கு எதிராகப் போராடி இறந்தவர்களை நினைவுகூர இடமளிக்கப்பட்டுள்ளது. யுத்தத்தின் போது இறந்தவர்களை நினைவுகூர இடமளிப்பது குறித்து கவனம் செலுத்தி வருகிறோம். கலவரம், யுத்தங்களின் பின் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரம் மேம்பாடு தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.
வன்னி பிரதேசத்தில் வெற்றிடமாக உள்ள கிராம உத்தியோகத்தர்களின் வெற்றிடங்களை டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மோதல் ஏற்படாத வகையில் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார். (தினகரன்)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.