பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்திற்கு எதிராக வழக்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 25/07/2013 (வியாழக்கிழமை)
வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் ஏற்பாட்டில் தீருவில் வயலூர் முருகன் ஆலயத்துடன் இணைந்த வெளியில் பொதுப் பூங்கா அமைப்பதற்கான அங்குரார்ப்பண வைபவம் கடந்த ஜூலை மாதம் 11 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு நகரசபை திரு.ந.அனந்தராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
அதே வேளை அன்றைய தினம் காலை பருத்தித்துறை நீதிவான் நீதி மன்றத்தில் நகராட்சி மன்றத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட மரநடுகைத் திட்டத்துடன் ஆரம்பிக்கப்பட்ட அங்குரார்ப்பண நிகழ்ச்சியைத் தடை செய்வதற்கான தடை உத்தரவு பிறப்பிக்கவேண்டுமென்ற மனு பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் கையளிக்கப்பட்ட பொழுது, நீதிமன்றில் சமுகமளித்திருந்த அனைத்துச் சட்டத்தரணிகளும் ஒருமித்த குரலில் பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் கையளிக்கப்பட்ட மனுவுக்கு எதிராகக் குரல் கொடுத்ததுடன், அதனை தள்ளுபடி செய்யவேண்டுமென்றும் கோரிக்கைவிடுத்ததை அடுத்து பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் சமர்ப்பிக்கப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
அதனை அடுத்து பொதுப் பூங்கா அமைப்பதை எதிர்த்து, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் முதலாவது பிரதிவாதியாக நகராட்சி மன்றத் தலைவர் திரு.நடராஜா அனந்தராஜ் அவர்களையும், இரண்டாவது பிரதிவாதியாக உப தலைவர் திரு.கந்தசாமி சதீஸ் அவர்களையும், மூன்றாவது பிரதிவாதியாக முன்னாள் நாடாளமன்ற உறுப்பினரும், தற்போதைய நகரசபை உறுப்பினருமான திரு.M.K.சிவாஜிலிங்கம்அவர்களையும் குறிப்பிட்டு வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.
இதில் மனுதாரர்களான பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் தமிழீழ விடுதலைப் புலிகளினால் சுவீகரிக்கப்பட்டு குமரப்பா, மற்றும் புலேந்திரன் ஆகியோரின் நினைவுத் தூபியாகப் பயன்படுத்தப்பட்ட காணியை வல்வெட்டித்துறை நகர சபை பொறுப்பேற்று பூங்காவை அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவது, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பாரிய குற்றம் எனக் குறிப்பிடப்பட்டே வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்திற்கு எதிராக பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால், வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேற்படி வழக்கு எதிர்வரும் 31ஆம் திகதி புதன் கிழமை காலை 9.00 மணிக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளதாக ஜூலை மாதம் 23 ஆம் திகதி பிற்பகல் நீதவான் நீதிமன்ற பதிவாளரினால் முதலாவது பிரதிவாதியாகக் குறிப்பிடப்பட்ட தவிசாளர் ந.அனந்தராஜ் அவர்களுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.