உடையாமணல் யோக நாயகி கல்வி மையத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள கணித ஏணி (MATHS LADDER), பெற்றோர்களுக்கும் அழைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 02/08/2013 (வெள்ளிக்கிழமை)
வல்வெட்டித்துறை உடையா மணல் பகுதியில் அமைந்துள்ள யோக நாயகி கல்வி மையத்தில் கணித ஏணி (MATHS LADDER) என்னும் புதிய பாட முறையினை, அக்கல்வி நிலையத்தினை நிர்வகித்துவரும் பேராசிரியர் திரு.சபா இராஜேந்திரன் அவர்கள் ஆரம்பித்துள்ளார். இது சம்பந்தமாக திரு.சபா இராஜேந்திரன் அவர்கள் வெளியிட்டுள்ள விபரம் பின்வருமாறு.
கணித ஏணி (MATHS LADDER)
எமது ஊரிலே கணிதப் பாடத்தின் தரம் மிகவும் குறைந்து காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது என்னவென்றால், ஒரு வகுப்பிலே படிக்கும் மாணவர்களுக்கு அந்தத் தரத்திலேயுள்ள கணிதப்பாடம் நன்றாக விளங்கமுன்னதாகவே அடுத்த வகுப்புக்கு உயர்த்தப்படுகிறார்கள். இதனால் மாணவர்கள் புதிய வகுப்பில் கணிதத்தைக் கற்பதற்குத் திணறுகிறார்கள். கணிதத்திலே அக்கறையை இழக்கிறார்கள்.
ஆகவே எந்த மாணவனும் முந்திய வகுப்புக்களுக்கான கணக்குகளை மிகத்திறமையாகச் செய்யக்கூடிய ஆற்றலை வளர்க்கவேண்டும். உதாரணமாக 8 ம் வகுப்பில் படிக்கும் மாணவன் 6 ம் 7 ம் தரத்திற்குரிய கணக்குகளை இலகுவாகச் செய்யக்கூடியவனாக இருக்கவேண்டும்.
தாங்கள் உண்மையிலே எந்தத் தரத்தில் இருக்கிறார்கள் என்பதை அறிவதற்காக கணித ஏணி (Maths Ladder) என்ற இந்தத் திட்டத்தை ஆரம்பித்துள்ளோம்.
ஏணியில் படிப்படியாக (தரம் தரமாக) மாணவர்கள் ஏறவேண்டும். கீழேயுள்ள படியில் நிலையாக நிற்கமுடியுமானால்தான் மேற்படியில் ஏற முயற்சி செய்யலாம்.
உதாரணமாக, 6 ம் தரத்திற்குரிய வினாத்தாளுக்குச் சரியான முறையில் விடையளித்த மாணவர்களே 7 ம் தரத்திற்குரிய வினாத்தாளுக்கு விடையளிக்க முயற்சிக்கலாம்.
6, 7, 8, 9, 10, 11ம் தரத்திற்குரிய வினாத்தாள்களை வைத்துள்ளோம். விருப்பமான மாணவர்கள் 6 ம் தரத்திலிருந்து ஆரம்பித்துக் கணித ஏணியில் ஒவ்வொரு தரமாக ஏறிச்செல்லலாம்.
11 ம் தரம் படிக்கும் மாணவர்களும் 6 ம் தரத்திற்குரிய வினாத்தாளில் இருந்து ஆரம்பித்துத்தான் ஒவ்வொரு படியாக ஏறவேண்டும். 11 ம் தரம் படிக்கும் பல மாணவர்கள் 6 ம் தரக் கணக்குகளைச் செய்வதில் சிரமப்படுவதைப் பார்த்துள்ளேன். ஆகவே வெட்கப்படாமல் 6 ம் தர வினாத்தாளில் இருந்து ஆரம்பித்து உங்கள் தரத்தை உறுதிப் படுத்துங்கள்.
· உடையாமணல் வீதியிலுள்ள யோகநாயகி கல்வி மையத்தில் வந்து, வினாத்தாள்களுக்குப் விடை எழுதலாம்.
· உங்களுக்குச் சௌகரியப்பட்ட நேரத்தில் எழுதலாம்.
· விடை எழுத நேரக் கட்டுப்பாடு இல்லை.
· வினாத்தாள்களுக்கு அங்கிருந்தே விடை எழுதவேண்டும்
· வேறு எவரினதும் உதவியைப் பெறக்கூடாது.
· ஒரு தரத்தில் நீங்கள் சரியான தகுதி பெற்றபின்னரே, அடுத்த தரத்திற்கான வினாத்தாள் தரப்படும்.
மாணவர்கள் மாத்திரமன்றிக் கணிதத்தில் ஆர்வமுள்ள அனைவரும் வயது வித்தியாசமின்றி, இந்தக் கணித ஏணியில் ஏறும் முயற்சியில் பங்கு பற்றுமாறு அழைக்கிறேன். பெற்றோர்களும் மற்றவர்களுமாகப் பெரும் திரளானவர்கள் பங்குபற்றும்போது, எமது ஊரிலே ஒரு கணித விழிப்புணர்வு ஏற்படும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.