60 லட்சம் ரூபா செலவிலான வல்வை சனசமுக சேவா நிலையம் எதிர்வரும் விஜயதசமி அன்று திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது?
பிரசுரிக்கபட்ட திகதி: 02/09/2013 (திங்கட்கிழமை)
வல்வெட்டித்துறைச் சந்தியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுவரும் 'வல்வெட்டித்துறை சனசமுக சேவா நிலையத்தை' எதிர்வரும் விஜயதசமி அன்று உத்தியோகபூர்வமாக திறக்கப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக அறியப்படுகின்றது. ஆனாலும் இது சம்பந்தமான இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை.
2000 ஆம் ஆண்டில் வல்வெட்டித்துறை சனசமுக சேவா நிலையத்தின் பழைய கட்டடம் இடிக்கப்பட்டு, அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர் திரு.சிவாஜிலிங்கம் அவர்களினால் புதிய கட்டத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டிருந்தது.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதியில் இருந்தும் மற்றும் நகரசபைக்கான சில சிறப்பு நிதிகளிலிருந்து கட்டடம் வேலைகள் பூர்த்தியாக்கப்பட்டுள்ளது. புதிய கட்டத்தின் கீழ் மாடியில் பேருந்து தரிப்பிட நிலையமும் மேல்மாடியில் வல்வெட்டித்துறை சனசமூக நிலையமும் கட்டப்பட்டுள்ளது. இதுவரை குறிப்பிட்ட கட்டுமானப்பணிகளுக்கு சுமார் 60 லட்சம் ரூபா வரை செலவிடப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. ஆனாலும் இது உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
தற்பொழுது தளபாட மற்றும் இறுதி வேலைகள் பொதுமக்களிடமிருந்து திரட்டப்பட்டுவரும் நிதியில் பூர்த்தியாக்கப்பட்டுவருகின்றது.
பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரனும் உதவி
வல்வை நகரசபைத் தலைவர் திரு.ந.அனந்தராஜ் அவர்களின் முயற்சியினால், புதிதாகக் கட்டப்பட்ட இந் நிலையத்தின் தளபாடத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக தளபாடக் கொள்வனவுக்காக பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்களாலும், பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதியில் இருந்து, ரூபா 75,000 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பாரம்பரியமுள்ள வல்வெட்டித்துறை சனசமூக சேவா நிலையம் 90கள் மற்றும் அதற்கு முன்னர் பல வருடங்களாக வல்வெட்டித்துறை மற்றும் அதனை அண்டியுள்ள மக்களுக்கு சிறந்த சேவையை ஆற்றிவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.