பெண் கப்பல் முதலாளியான சின்னத்தங்கமும், வாழ்ந்த காலத்திலேயே கட்டப்பட்ட அவரின் அரிய சமாதியும்.
பிரசுரிக்கபட்ட திகதி: 28/09/2013 (சனிக்கிழமை)
வல்வெட்டித்துறையின் மயிலியதனை ஊரிக்காடு பிரதேசங்களுக்கிடையிலமைந்துள்ள மண்ணாச்சி மணல் பகுதியில் அமைந்துள்ள பெண் கப்பல் முதலாளியான அமரர் திருமதி சரவணமுத்து சின்னத்தங்கம் என்பவருக்கு சமாதி ஒன்று உள்ளதையும், அதன் சீரமைப்புப்பணிகள் கடந்த சில வாரங்களாக அவரது உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வந்திருந்தது பற்றியும் நேற்றைய எமது செய்தியில் பிரசுரித்திருந்தோம். கீழே தெரிவிக்கப்பட்டுள்ளவை சின்னத்தங்கம் பற்றிய சிறு குறிப்பொன்றாகும்.
வல்வையின் இயற்றமிழ் போதகாசிரியர் சங்கர வைத்திலிங்கம் பண்டிதர் காலத்தில் கப்பல்கள் பல வைத்திருந்து தூரதேச பெரு வர்த்தகங்களில் ஈடுபட்டிருந்தவர்களில் ஒருவர் திரு.விஸ்வநாதர் அவர்கள். அன்னாரின் மறைவைத் தொடர்ந்து அதே கப்பல் வர்த்தகத்தையும், மேலும் வல்வையில் இந்துத்துவத்தையும் கட்டி எழுப்புவதில் பாடுபட்டவர் விஸ்வநாதரின் மகன் சரவணமுத்து அவர்கள்.
திரு. சரவணமுத்து அவர்களின் திடீர் மறைவைத் தொடர்ந்து, இப் பணிகளைப் பொறுப்பேற்று நடாத்தியிருந்தவர் தான் சமாதிக்குரிய சின்னத் தங்கம் அவர்கள். இவர் வல்வையின் பெரும் முதலாளிகளில் ஒருவரான வைரமுத்து அவர்களின் மகளும் சரவணமுத்து அவர்களின் மனைவியுமாவார்.
மதுரை மீனாட்சி, சுபத்திரையம்மா மற்றும் சோமசுந்தரம் போன்ற பல கப்பல்களைத் தன்னகத்தே வைத்திருந்து தூரதேச கப்பல் வாணிபத்தைத் தொடர்ந்திருந்தவர் சின்னத் தங்கம் அவர்கள்.
கப்பல் வாணிபத்துடன் மட்டும் நின்று விடாது, வல்வையில் இந்து சமயப் பணிகளிலும் அதிகம் ஈடுபட்டிருந்த இவர், தனது கப்பல்கள் வல்வெட்டித்துறைத் துறைமுகத்திலிருந்து புறப்படும் முன்னர் வழிபாட்டிற்காக தனது மனையிலிருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் நறுவிலடி விநாயகர் ஆலயத்தை கட்டுவித்திருந்தது மிகவும் குறிப்பிடத்தக்கது.
கப்பல் வாணிபம், இந்துசமயப்பணி என்று நின்று விடாது புணறுக்கலட்டி, சீராவரைக்கலட்டி, வெள்ளையன் கலட்டி, கொக்குத்திடல், மண்ணாச்சி மணல் வடக்கு, திக்கத்தியவரவை, புளயீட்டார், கணக்கரோடை, வடக்கு மணல் போன்ற இடங்களில் தோட்டங்களையும் நிர்வகித்து வந்திருந்தமை மேலும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன் ஊரிக்காட்டில், பருத்தித்துறை - காங்கேசன்துறை வீதியில் வழிப்போக்கர்கள் தங்கிச்செல்வதற்காக ஒரு மடத்தையும், சுமைதாங்கிக்கல் ஒன்றையும் அமைத்திருந்தார்.
இவ்வாறாக கப்பல் வாணிபம், சமயப்பணி, பொதுச்சேவைகள் என, பெண்களுக்கென தேவையற்ற கட்டுப்பாடுகள் நிறைந்திருந்த அந்தக்காலத்தில் ஒரு பெண்ணாக நின்று உதாரணம் படைத்த சின்னத் தங்கம் அவர்கள் 1933 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் காலமானார்.
காலமுற்ற பின்பும் சரித்திரம் படைக்கும் வகையில், அவரினாலேயே ஸ்தாபிக்கப்பட்ட சமாதியில் சின்னத்தங்கம் அவர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பு
படத்தில் காட்டப்பட்டுள்ள இச் சமாதியானது, சின்னத் தங்கம் அவர்கள் தான் வாழ்ந்த காலத்திலேயே நீதிமன்ற அனுசரணையுடன் கட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .
திருத்தியமைக்கப்பட்டுள்ள சின்னத் தங்கம் அவர்களின் சமாதி
சமாதி அமைந்துள்ள வீதி,
[இது வல்வெட்டித்துறைப் பிரதேசத்தில் ஒப்பீட்டளவில் கடல் மட்டத்திலிருந்து உயரமான நிலப்பகுதியாகும் (Higher Elevation)]
சமாதியின் பழைய தோற்றம்
ஊரிக்காட்டில், பருத்தித்துறை - காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள சுமைதாங்கிக்கல்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.