நெடியகாடு கலாமன்றத்தின் “வெள்ளைமலர்கள்” திரை நாடகம் - வல்வையர்களின் திறமைக்கு மற்றுமோர் சான்று
பிரசுரிக்கபட்ட திகதி: 17/10/2014 (வெள்ளிக்கிழமை)
நெடியகாடு கலாமன்றத்தின் “வெள்ளைமலர்கள்” திரை நாடகம்
முற்று முழுதாக வல்வை கலைஞர்களின் கலையாக்கத்தில் வல்வெட்டித்துறையில் ஒளிப்பதிவு செய்யப்பட்டு திரையில் மலரக் காத்திருக்கின்றது “வெள்ளை மலர்கள் “ திரை நாடகம். தற்போது உள்நாட்டிலும் புலத்திலும் வளர்ச்சியடைந்து வரும் குறும்படம், பாடல் தொகுப்புக்கள் மற்றும் முழு நீள திரைப்பட வரலாற்றில் சற்று வித்தியாசமானதோர் அவதாரம் இந்த திரை நாடகம்.
வல்வெட்டித்துறை.ORG யின் பா.தங்கத் தமிழனுடனான நேர்காணல்
வெள்ளை மலர்களைப்பற்றி மேலும் அறிய, இத் திரைநாடகத்தை கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள நெடியகாடு இளைஞர் கலாமன்றத்தை சேர்ந்த மூத்த கலைஞர் வல்வை பா. தங்கத் தமிழனுடனான சந்திப்பொன்றை நாம் மேற்கொண்டோம்.
வல்வையை பூர்வீகமாகக் கொண்டவர் பாலசுந்தரம் உதயகுமார், இவர் எழுத்து மற்றும் நடிப்புத்துறை மீது கொண்ட கலை ஆர்வத்தால், வல்வை பா. தங்கத் தமிழன் என்ற புனைப்பெயருடன் அழைக்கப்பட்டுவருகின்றார். இவரை தங்கம் அல்லது அவரது புனைப்பெயர் கொண்டே பலரும் அறிவர். இவரின் நாடக கலையானது, அன்றைய வல்வையின் புகழ்பெற்ற கலாமன்றங்களில் ஒன்றான கெலியன்ஸ் நண்பர்கள் கலாமன்றத்தின் மேடை நாடகத்துடன் ஆரம்பித்தது.
1979 களில் ஹெலியன்ஸ் நண்பர்கள் கலாமன்றத்தின் புகழ்பெற்ற மேடை நாடகமான “ ஜீவசமாதி “ என்ற மேடை நாடகமே இவரின் முதல் நாடக அனுபவமாகும். அதன் பின்னர் 1980 தொடக்கம் 1982 வரை முத்துச்சாமி, ரகுபதி, குமாரசெல்வன் ஆகியோருடனும் ஏனைய ஹெலியன்ஸ் நண்பர்களுடன் சேர்ந்து, புகழ்பெற்ற இயக்குனர் மரிசலின்பிள்ளை மற்றும் கதாசிரியரும் இயக்குனருமான K.N.சோதிசிவம் ஆகியோரினது பத்திற்கும் மேலான மேடை நாடகங்களில் நடித்துள்ளார்.
நெடியகாடு கலாமன்றத்தின் உதயம்
இது இவ்வாறிருக்க 1977 களில் வல்வையில் நெடியகாடு இளைஞர் கலாமன்றமானது உதயமாகியது. இவர்களின் முதலாவது மேடை நாடகமாக “தியாகச் சின்னம்” என்னும் நாடகம் அமைந்தது.
வல்வையின் முன்னணி கலாமன்றங்களாக விளங்கிய ஹெலியன்ஸ் நண்பர்கள், வல்வை முன்னோடிகள், கலாலயா கலாமன்றம், வல்வை பாரத் கலாமன்றம்,செந்தமிழ் கலாமன்றம் போன்றவற்றுடன் நெடியகாடு இளைஞர் கலாமன்றமும் தனது கலைப்பயணத்தை ஆரம்பித்தது.
ஆரம்ப நாட்களில் இவர் நெடியகாடு இளைஞர் கலாமன்றத்துடன் இல்லாவிட்டாலும், நெடியகாடு இளைஞர் கலாமன்றத்தின் இரண்டாவது மூன்றாவது கலைப்படைப்புக்களிலேயே தன்னையும் ஈடுபடுத்தியுள்ளார்.
வல்வையின் நாடகத்துறையின் போக்கிலே 1982 களின் பின்னர் பாரிய மாற்றங்கள் நிகழ்ந்தன. அதுவரை காலமும் மக்கள் மத்தியில் பிரபலமாயிருந்த சரித்திர கதைகளைக் கூறும் சரித்திர நாடகங்களை சற்று பின்தள்ளி, சமூக அவலங்களையும் சமூக சிந்தனைகளைக் கூறும் சமூக நாடகங்கள் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பையும் பாராட்டுக்களையும் பெறத்தொடங்கியன. மக்கள் அதிகளவில் சமூக நாடகங்களை விரும்பி ரசிக்க தொடங்கினார்கள்.
இந்த மாறுதல்களை உள்வாங்கிய நெடியகாடு இளைஞர் கலாமன்றம், K.N.தேவதாஸ் இயக்கத்தில் S.செல்வமோகன், A.S.மனோகர் போன்றோரின் கதை வசனத்தில் அநேக சமூக நாடகங்களை மேடையேற்றினர். இவை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதோடு, மன்றத்தின் பெயரையும் உயர்த்தியதேன்றே கூறலாம்.
சமூக அமைப்புக்களுக்கு நிதி திரட்டுவதற்கு வல்வையிலுள்ள பல்வேறு கலாமன்றங்களாலும் இதுபோன்ற பல்வேறு நாடகங்கள் ஊரில் மேடையேற்றப்பட்டுள்ளன.
1983 இற்கு பின்னர் ஏற்பட்ட நாட்டின் அசாதாரண சூழ்நிலையால் மேடை நாடகங்கள் மற்றும் களியாட்ட நிகழ்வுகள் நடாத்துவதில் இயல்பான தடங்கல்கள் ஏற்ப்பட்டன. இருந்த போதும் ஆங்காங்கே சில நாடகங்கள் மேடை ஏறத்தவறவில்லை
யோகநாயகி திரையரங்கில் மேடையேற்றப்பட்ட நாடகம் - 5 நாட்கள் தொடர்ந்தது
அந்தவகையில் 1987 களில் இந்திய அமைதிப் படையின் பிரசன்னத்தின் போது நாட்டில் காணப்பட்ட அசாதாரண சூழ்நிலைகள் மற்றும் கெடுபிடிகளுக்கு மத்தியிலும், நெடியகாடு இளைஞர் கலாமன்றத்தால் வல்வை சிவபுர வீதியில் அமைந்திருந்த யோகநாயகி திரையரங்கில் நாடகம் ஒன்று மேடையேற்றப்பட்டது.
நாடகம் மேடையேற்றப்படுவதற்கு முதல் நாள் நாடக கலைஞர்கள் இந்திய அமைதிப்படையால் பலமாக தாக்கப்பட்ட போதும் வல்வை பா.தங்கத் தமிழன் போன்றோரின் அயராத முயற்சியினால் பலத்த கெடுபிடிகளுக்கு மத்தியிலும் 5 நாட்களுக்கு அரங்கமே நிறைந்தது. நிதி சேகரிக்கும் பொருட்டு மேடையேற்றப்பட்ட இந்த நாடகத்திற்கு பலர் நுழைவுச்சீட்டு (Tiket) கிடைக்காதளவிற்கு கூட்டம் நிரம்பி வழிந்திருந்தது. அரங்க உரிமையாளரான யோகநாயகியம்மா அவர்கள், திரைப்படங்களுக்கு வருவது போன்ற ரசிகர் கூட்டத்தை பார்த்ததன் காரணமாக அரங்கத்திற்கான வாடகையை பெறவில்லை என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
வல்வையர்கள் பலரின் வாழ்வாதாரமாயிருந்த கப்பல் தொழிலின் காரணமாக பல கலைஞர்கள் கடலோடிகளாயிருந்தனர். இதன் காரணமாகவும் நாட்டின் தொடர்ந்து ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையினாலும் வல்வையில் இவ்வாறு மேடையேறிக் கொண்டிருந்த நாடகக்கலையும் சற்றே ஆட்டம் கண்டது. இது தங்கத் தமிழனையும் விடவில்லை, உழைப்பிற்காக பல வருடங்களை கடலோடியாக கடலிலே கழிக்க நேர்ந்தது. இதனால் இவரின் கலைப் பயணத்திற்கும் சற்று இடைவெளியேற்ப்பட்டது.
இதுபோன்ற சூழ்நிலைகளின் மத்தியிலும் நெடியகாடு கலாமன்றமானது, இவர்களுக்கு அடுத்த தலைமுறை கலைஞர்களால் 1994 இல் 4 நாடகங்களை மேடையேற்றியது. அதன் பின்னர் 2011 இல் வல்வையின் கலை இலக்கியப் பெருவிழாவில் “நாரதர்” என்ற மேடை நாடகம் மூலம் வல்வை பா.தங்கத் தமிழன் அவர்கள் மீண்டும் நாடகத்துறையில் தன்னை இணைத்துள்ளார். அந்த வகையில் இவரால் மேற்கொள்ளப்பட்ட சிறு முயற்சிதான் இந்த - திரை நாடகம்.
“வெள்ளைமலர்கள்” திரை நாடகம்
அன்று போல் இன்றைய வல்வையர் பலரின் வாழ்வாதாரமாக கப்பல் தொழில் இருந்து வரும் நிலையில் மேடை நாடகத்தை அரங்கேற்றவும் ஒத்திகைகளுக்கு நேரமில்லாததாலும், பலரின் வேலைச்சுமை, ஓய்வு நேரமின்மையாலும் குறுகிய காலத்தில் எடுக்க வேண்டிய சூழ்நிலையாலும் சற்று வித்தியாசமாக இத் திரைநாடகம் எடுக்கப்பட்டுள்ளது.
நெடியகாடு இளைஞர் விளையாடுக் கழகத்தைச் சேர்ந்த லண்டன் வாழ் கழக ஆதரவாளர்களான க.சதானந்தவேல், ச.சோதி, ஆ.நந்தகுமார், வே.பிறேம்ராஜ் மற்றும் ஞா.யோககுமார் ஆகியோரின் நிதியுதவில் நெடியகாடு இளைஞர் கலாமன்றத்தினரால் முற்று முழுதாக வல்வையிலே ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது - “வெள்ளைமலர்கள்” திரை நாடகம்
இத் திரைநாடகமானது நெடியகாடு இளைஞர் விளையாடுக்கழக ஆர்வலரும் வல்வை மாலுமிகள் சங்க வளர்ச்சியில் முன்னின்றவருமான K. ரஞ்சனதாஸ் , கணபதி படிப்பக ஆதரவாளர் மாணிக்கவேல் மற்றும் நெடியகாடு இளைஞர் விளையாடுக் கழக ஆதரவாளரும் அன்று தொட்டு கலாமன்ற பணிகளில் கலைஞனாக அன்றி ஆதரவாளராக ஈடுபட்டு வந்தவருமான S. ஜயந்தன் ஆகியோருக்கு நெடியகாடு இளைஞர் கலாமன்றத்தினரால் சமர்ப்பிக்கப்படுகிறது.
வல்வை பா. தங்கத் தமிழனின் கதை, வசனம் மற்றும் இயக்கத்தில் நெடியகாடு இளைஞர் கலாமன்றத்தினரால் தயாரிக்கப்படும் இத் திரை நாடகத்தில் நடன இயக்குனராக இளம் கலைஞர் தயா அவர்களும் அறிமுகமாகிறார்.
கெளரவ வேடங்களில் மறைந்த கலைஞர்களிற்கு கெளரவம்
மேலும் இத் திரைநாடகத்தின் சிறப்பு என்னவெனில், வல்வையின் நாடகக் கலைஞரும் வில்லன் நடிகருமான “குட்டிக் கிளி” அவர்களின் நினைவாக அவரது மனைவி இலங்கேசம்மா அவர்களையும், ஹீரோ நடிகராக புகழ் பெற்றவரான முருகதாஸ் அவர்களையும் மற்றும் இராஜேஸ்வரி அம்மா அவர்களையும் கௌரவ வேடங்களில் நடிக்க வைத்துள்ளனர் நாடகக் குழுவினர்.
அத்தோடு நடிகைகள் வேடமிட்டு கோகுலன், கஜமுகன், வினோதன் மற்றும் நிசாந்தன் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர், மேலும் நடிகர்களாக தங்கத் தமிழன், லிங்கம், விஸ்வா, நிதர்சன், சிவாக்குட்டி, தம்பா, கிரி,வினோதன், சுகிர்தன், ராஜா, குகேஸ், சந்துரு, செந்தில்குமரன் மற்றும் சிவரூபன் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர்.
அத்தோடு ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங்கில் கல்பனா ஸ்டூடியோவை சேர்ந்த வர்மன் மற்றும் சங்கரன் ஆகியோரின் பங்களிப்பும் முக்கியமானது.
“வெள்ளைமலர்கள்” நாடகக் குழுவினர்
கிட்டத்தட்ட ஒரு மணிநேர திரை நாடகமாக தயாரிக்கப்படும் இந் நாடகமானது வல்வையின் நாடகத்துறையில் ஓர் மைல் கல்லாக அமையும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகவுள்ளது. மேலும் இது போன்ற முயற்சிகளை எதிர் காலத்திலும் எடுக்க நெடியகாடு இளைஞர் கலாமன்றத்தினர் தயாரக்கவுமுள்ளனர்.
இவ் “வெள்ளை மலர்கள்” திரை நாடகமானது நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை ( 19.10.2014 )அன்று நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் ஆலய வீதியில் மாலை வேளையில் மக்களுக்கு திரையிடப்படவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.