உள்ளூராட்சி மன்றங்களின் செயற்றிறன் மதிப்பீட்டின் (PERFECT 2.0) அடிப்படையில் வல்வை நகர சபைக்கு கடந்த 25.07.2024 அன்று, பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) பிரதமர் தினேஸ் குணவர்த்தன அவர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான சுவர்ணபுரவர விருது வழங்கும் நிகழ்வில் ஸ்வர்ணபுரவர தங்க விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் முதலாம் இடமும் கிடைக்கப் பெற்றது.
நிகழ்வில் பிரதமரது உரையில் "வடமாகாணத்தின் தொலைதூரத்தில் இருக்கும் வல்வெட்டித்துறை நகரசபை முதலாம் இடம் பெற்றுள்ளது " என நினைவுகூர்ந்து பாராட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதுமுள்ள 41 நகரசபைகளிற்கிடையில் கட்டம் கட்டமாக நடாத்தப்பட்ட சபைகளின் செயற்றிறன் மதிப்பீட்டின் அடிப்படையில் வல்வை நகர சபையானது தேசிய ரீதியிலான மதிப்பாய்வுக்கு தெரிவுசெய்யப்பட்டிருந்தது.அதனடிப்படையில்
செயற்றிறன்
இணக்கப்பாடு
வினைத்திறன்
புத்தாக்கம்
நல்லாட்சி
ஆகிய பிரிவுகளின் கீழ் நடாத்தப்பட்ட தேசிய ரீதியிலான மதிப்பீட்டின் முடிவுகளின்படி சபையானது அதிகூடிய புள்ளிகளைப் பெற்று முதலிடத்தை பெற்றுக்கொண்டதுடன் இதற்கான விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டமை பெருமைமிகு தருணமாகும். அத்துடன் ஏனைய மாகாணங்களை விட வடமாகாணமானது அதிக விருதுகளைப் பெற்று (20 விருதுகள் ) முதலிடம் பெற்றிருந்தது .
மேலும் நிலைபேண் அபிவிருத்தி இலக்குகளுக்கு பங்களிப்பு வழங்கல்(Contribution for SDG ) ,உள்ளடக்கல் (Inclusion ) ஆகிய இரண்டு துறைகளில் அதிக புள்ளிகளைப் பெற்றமைக்கான விருதுகளும் கிடைக்கப்பெற்றன
இது சம்பந்த மாக வல் வை நகர சபை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு ஒன்றில்
எமது சபை இந்த கௌரவத்தை பெறுவதற்கு விருதுக்கான மதிப்பீடு நடைபெறும் நேரத்தில் சிறப்புடன் உத்தியோகத்தர்களை வழிநடாத்தி ஒன்றிணைத்து அர்ப்பணிப்புடன் செயலாற்றிய முன்னாள் நகரசபைச் செயலாளர் திருமதி தர்ஷினி நிதர்ஷன் அவர்களை நாம் இந்நேரத்தில் நன்றியுடன் நினைவுகூரக் கடமைப்பட்டுள்ளோம்.
இவ்விருது பெற அயராது உழைத்த எமது சபையின் சகல உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் எமது உளமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.நாம் இக்கௌரவத்தை பெற இவர்களின் அர்ப்பணிப்பும் ஒத்துழைப்பும் அளப்பரியது.
இறுதியாக சபையுடன் எப்போதும் பக்கபலமாக இருந்து சட்டதிட்டங்களை மதித்துச் செயற்படும் எமது அன்பான பொதுமக்களுக்கும் எமது உளமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்வதில் பேருவகை அடைகின்றோம்.
அத்துடன் இவ்விருது வழங்கும் விழாவில் எம்முடன் விருதுபெற்ற அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.