ஆதவன் பக்கம் (25) – யாழ்ப்பாணத்தாரின் ஒழுங்கைகளும் சுவர்களும்
பிரசுரிக்கபட்ட திகதி: 30/06/2018 (சனிக்கிழமை)
யாழ்ப்பாணத்து மனிதர்களின் மனங்கள், எண்ணங்கள் போலவே யாழ்பாணத்தில் ஒழுங்கைகளும் அமைந்துள்ளன - மிகவும் ஒடுங்கல்களாக. இதில் வடமராட்சியார், தென்மராட்சியார், வலிகாமத்தார் என வேறுபாடில்லை, சகலருக்குள்ளும் ஒற்றுமை.
புது துறைமுகங்களுக்குச் சென்றால் வெளியேசென்று - முடிந்தால் நகரத்தைவிட்டு வெளியே சென்று, நான் அவதானிக்கும் மற்றும் புகைப்டமாக்கும் விடயங்களில் ஒன்று அந்த இடங்களது ஒழுங்கைகள்.
காரணம் அந்தளவிற்கு எனக்குள் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன யாழ்ப்பாணத்து ஒடுங்கலான ஒழுங்கைகள்.
எனது இந்தக் கூற்றுடன் புலம் பெயர்ந்த நம்மவர்கள் பலரும் உடன்படுவார்கள். நாட்டைவிட்டுப் போய், பல ஆண்டு கழிந்து யாழ்ப்பணம் வருபவர்கள் வியந்துகூறும் விடயம் இதுதான் - ‘என்ன வீதிகள், ஒழுங்கைகள் எல்லாம் சிறுத்துள்ளன’ என்றுதான்.
எனது சகலனின் சகோதரர், ‘இந்தக் குறுகிய உலகுடையார் ஒழுங்கையிலா நான் சிறு வயதில் விளையாடினேன்’ என்று அண்மையில் இங்கு வந்தபோது வியந்து கூறினார். இருபது வருடங்கள் கழித்து அண்மையில் திருச்சியிலிருந்து திரும்பிவந்த என் வகுப்பு நண்பி ஒருவர், ‘ஏதோ மூடிய இடத்துக்குள் இருப்பதுபோல் இருக்கின்றது’ என்றார். இதுபோல் ஏராளமான உதாரணங்கள்.
பொதுவாகவே தலைநகர் உட்பட இலங்கை முழுவதும் சராசரியாக ஒழுங்கைகள் வீதிகள் ஒடுங்கல்கள் தான், ஆனால் யாழ்பாணத்தில் தான் இவை மிகவும் மோசம்.
கடந்தமுறை விடுமுறையில் நின்றபோது ஒருநாள் வதிரியிலிருந்து உட்பாதையால் காரில் வந்தேன் - சும்மா பார்ப்போம் என்று. என்னுடைய இலக்கு கந்தவனத்துக்கு தெற்காக உள்ள பாதையால் வெளியே வரவேண்டும் என்பது. அரைத்தூரம் வந்துவிட்டேன், இடத்தை அடையாளம் பிடிக்க முடியவில்லை. ஆனாலும் காலை ஆதலால், சூரியனை பிற்பக்கம் வைத்து காரை நகர்த்திக் கொண்டிருந்தேன்.
அவ்வாறு வந்து கொண்டிருந்த பொழுது ‘சாமி தீர்த்தம் ஆடவருகின்றது, இந்த வழியால் போகமுடியாது’ என்றார்கள். நான் வந்த பாதை இருவழிப்பாதை தான், ஆனால் வீதிதான் ஒடுங்கல் ஆச்சே, சாமி வரும்போது எங்கு காரை நிறுத்துவது, இடமில்லை. ‘வேறு எப்படிப் போகமுடியும்’ என்று கேட்க, ‘இப்படி....அப்படி......போகலாம்’ என்றார்கள்.
‘அட நம்ம இடம்தானே’ என்று காரைத் திருப்பினேன். சூரியன் இடம், வலம், முன், பின் என்று மாற, பல பாதைகளுக்குள் சென்றேன். அனைத்தும் ஒடுங்கல் பாதைகள். பல நிமிடங்கள் கழித்து ஒருவாறு ஒரு எல்லைக்கு வந்தேன், ஆனால் அதற்கு அப்பால் கார் போக முடியாதபடி தற்காலிக கட்டு ஒன்று – அது கந்தவனத்தின் தென்கிழக்குப் பகுதி.
‘தொடர்ந்து இந்தப் பக்கத்தால் போக முடியுமா?’ என்று கேட்க ‘போகலாம், ஆனால் உங்கள் கார் போகாது’ என்றார் ஒருவர்.
தெரிந்த ஒருவர், திறமையான சாரதி. சொந்தமாக வான் வைத்திருந்து தொழில்புரிந்து வந்தவர். ஒருநாள் நான் மேலே குறிப்ப்பிட்ட இதே இடம் ஒன்றில், அவர் தனது வானைச் செலுத்திவரும் போது, வானுடன் மோதி சிறுவன் ஒருவன் பலியானான். தவறு சிறுவனில். ஒடுங்கலான பாதை, சிறுவன் தான் திடீரென்று குறுக்கே பாய்ந்துள்ளான். ப்ரேக்கை போட்டாலும் திருப்பவதற்கு ஒடுங்கலான பாதையில் இடம் இருந்திருக்கவில்லை..
நீதிமன்றில் சாரதியான உறவினர் 'நிரபராதி' என்று விடுவிக்கப்பட்டார். ஆனாலும் அவர் அந்தச் சம்பவத்திலிருந்து சாரதித் தொழிலையே விட்டுவிட்டார்.
பல வருடங்கள் கழித்து இந்தப் பாதைகளுக்குள்ளால் வந்ததால், இங்கு கண்களுக்கு புதிதாக தென்பட்டவை பல புதிய சுவர்கள்.
யாழ்ப்பாணத்துக்காரருக்கு ஒரு பழக்கம் – வீட்டைச் சுற்றி மற்றும் காணிகளைச் சுற்றி சுவர் வைப்பது. இருக்கின்ற காசைப் பொறுத்து சுவரின் உயரமும் உயரும். காசு கொஞ்சம் சேர்ந்து விட்டால், இருக்கும் வேலியை வெட்டி சுவர் வைத்து விடுவார்கள். வேலி வீடு, சுத்து மதில் வீடு என்கின்ற ஸ்டேட்டஸ் வேறு உண்டு. வல்லிபுரக் கோயிலின் பெரும்பகுதி மண் இந்தச் சுவருகளுக்குள் தான் சங்கமம்.
என்னுடைய வீட்டின் ஒரு பக்கச் சுவர் 9 அடி உயரம். வீட்டு ஒழுங்கைச் சுவர் சரிந்து கொண்டிருந்ததால் அண்மையில் இடித்து புதிதாக வைத்தேன். அவ்வாறு வைக்கும் போது மேஸ்திரியார் என்னிடம் '9 வரியோ அல்லது 10 வரியோ என்றார். '8 வரி போதும்' என்றேன். வெளிநாடுகள் போல் 4 வரி வைக்கத்தான் ஆசை. முடியுமா என்ன?.
நண்பன் வீட்டு ஒழுங்கை ஒன்றில் ஒருபக்கத்தில் இருந்த 85 வயதுக்கு மேற்பட்ட வயதான தம்பதியினர், தங்களை அந்த ஒழுங்கையால் போய் வரும்போது பார்க்கின்றார்கள் என்று, 8 வரியை 10 வரி ஆக்கி விட்டார்கள்.
எனது உறவினரின் உறவினர் ஒருவர் தமிழ்நாட்டுப் பெண் ஒருவரை மணம் புரிந்துள்ளார். அண்மையில் அவர்கள் ஊர் வந்த பொழுது வேம்படியில் உள்ள எனது தம்பியாரின் வீட்டுக்கும் சென்றுள்ளார்கள். அப்பொழுது அந்தப் பெண்மணி 'ஏன் உங்க ஊரில் வீட்டு காம்பவுண்ட் எல்லாம் எவ்வளவு உயரமாக உள்ளது?' எனக் கேட்டுள்ளார்.
மதவடியில் இரு வருடங்கள் நண்பன் வீடு ஒன்றில் திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றது. விசாரணைக்கு வந்த போலிஸ் ஒருவர் 'எங்கள் இடங்களில் வீட்டைச் சுற்றி வெறுமையாக விட்டுள்ளதால், வீட்டுக்குள் என்ன நடக்கின்றது என்பது மற்றவர்களுக்கு தெரியும். இதனால் வயோதிபர்கள் உள்ள வீடுகளுக்குப் பாதுகாப்பு அதிகம். இங்கு யாழ்பாணத்தில் ஏன் இப்படி வீடுகளை மூடி கட்டுக் கின்றீர்கள்' என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
வன்னிச் சனம் இந்த விடயத்தில் பரவாயில்லை எனலாம். வன்னியில் ஒழுங்கைகள் மற்றும் வீதிகள் பொதுவாக அகலமானவை, அவர்களின் மனங்களைப் போல். ஓடிப்போய் பல ஆண்டுகள் வன்னியில் தங்கியிருந்த பலருக்கு இது தெரியும். (இங்கு யாழ்பாணத்தில் உள்ளூருக்குள் சனம் ஓடிக் கொண்டிருந்த காலங்களில், சில இடங்களில் கோயில்களை பூட்டி வைத்திருந்த சம்பவங்களும் உண்டு).
வன்னி வீதிகள் அகலமாக இருப்பதற்கு இயக்கமும் ஒரு காரணம். கிளிநொச்சி நகரின் பிரதான A9 நெடுஞ்சாலையின் ஒவ்வொரு பக்கத்திலும் வாகனங்கள் செல்ல 3 வழிகள், பாதசாரிகளுக்கும் தனி வழி. பாதை இன்று அகலமாகப் போடப்பட்டிருந்தாலும் வீதியை அகலாமாக்கி நிர்மாணத்தை ஆரம்பித்தது இயக்கம் தான் என்பது வெளிப்படையான ஒன்று.
இதுபோல் வன்னியில் பல இடங்களில்.
வல்வையில் மனம்மகிழ சைக்கிள் ஓட்டவேண்டும் என்றால் சிறந்த இடம் - சிவபுரவீதியின் தலைப்பில் உள்ள பெட்ரோல் நிலையத்திலிருந்து தீருவில் வழியாக தூபிவீதியூடு மருதடிவரை செல்வதுதான். ஒடுங்கலாக இருந்த வயலூர் முருகன் வீதியை (தூபி வீதி) அகலமாக்கி, வழியே இல்லாத சிவபுரவீதி - தூபிவீதியை இணைத்தது இயக்கம் தான். இதுபோன்று இனிமேல் ஊருக்குள் எவராலும் எக்காலத்திலும் செய்யமுடியாது.
அண்மையில் தீருவில் பூங்கா அபிவிருத்தி தொடர்பான கூட்டம் ஒன்றில் திரு.சிவாஜிலிங்கமும் இதையே கூறியிருந்தார்.
ஒருவர் ஒரு அடி கூட்டி எல்லையை வைக்க, அடுத்தவர் முன்னையவரை விட ஒரு அடி எனக்கூட்ட – இங்கு ஒழுங்கைகள் எல்லாம் சிறுத்துவிட்டன. வல்வையில் பழைய வல்வைக் கல்வி மன்றக் காணிக்கு பின்னால் உலகுடையார் பிள்ளையார் கோயிற்பக்கமாக ‘லட்சுமி வளைவுப் பாதை’ என்னும் பெயரில் ஒரு பாதை கடந்த வருடம்வரை இருந்தது. இதன் அகலம் வெறும் நான்கு அடிகள் தான்.
அட பின்னால் தானே பரவாயில்லை என்றால், வல்வைக் கல்வி மன்றத்துக்கு முன்னால் பாதையின் அகலம் மிக மோசம். அதுவும் பிரதான பாதை.
சரி நாங்களேனும் ஒரு முன்மாதிரியாக இருப்போம் என்று எனது சகோதரர் தொண்டைமனாற்றில், பருத்தித்துறை – தொண்டைமனாறு பிரதான வீதியில் காணி ஒன்றை வாங்கிய போது, எல்லையை சில அடிகள் உள்ளே வைத்தபோது சிலர் கேட்டார்கள் ‘ஏன் உங்கள் நிலத்தை வீணாக்கி எலையை உள்ளே வைக்கின்றீர்கள்’ என்று!.
அம்மன் கோவிலடியில் உள்ள எங்கள் உடைந்திருந்த வீட்டைத் திருப்பிக்கட்டும்பொழுது, பிற்பக்கம் (வாடி ஒழுங்கை) இருந்த இரட்டைக் கதவை சில அடிகள் உள்ளே (திருப்பிக் கூறுகின்றேன் சில அடிகள் உள்ளே - எங்கள் வீட்டுப் பக்கமாக) வைத்துக் கட்டினோம். உள்நோக்கத்துடன் நாங்கள் ஏதோ செய்கிறோம் என்று மெல்லிய முணுமுணுப்பு!
90 ஆம் ஆண்டு, சகடை தள்ளிய 300 கிலோக்குண்டு ஒன்று எங்கள் வீட்டுக்கும் அயலவர் பிரேம்குமார் மாமா வீட்டு எல்லையில் விழ எல்லைச்சுவர் அடியோடு பறந்து விட்டது. குண்டு விழுந்த இடத்தில் இருந்த சுவர் சற்று வளைந்திருந்த பகுதி. யாழ்ப்பாணத்தில் எல்லைச் சுவர் என்றால் சொல்லவா வேண்டும், சுவர் வேறு வளைந்திருந்தது எங்கள் போதாத காலம்.
நில அளைவையாளரிடம் சென்றால் காசு வீணாகிவிடும் என்று கருதி – நாங்கள் முன்னர் பூ மரங்களுக்குப் பக்கத்தில் நின்று எடுத்த படங்களை (முன்னர் இதுதானே பாஷன்) பாவித்து, நானும் தம்பியாரும் எல்லையைக் கண்டுபிடிக்க தீவிரமாக முனைந்தோம்.
இதைப் பார்த்த அயலவர் பிரேம்குமார் மாமா ‘ஏன்ரா தம்பிகள் கஷ்டப்படுகிறியள், ஓரளவு குத்துமதிப்பாக வைத்து விடுங்கள், போனால் இரண்டு மூன்று இஞ்சி நிலம்தானே போகும். நீங்கள் உங்களுக்கு பாதகம் இல்லாமல் வையுங்கள். எனக்கு சற்றுக் குறைந்தால் பரவாயில்லை, போகும்போது இதை என்ன கொண்டுபோகவா போகப்போகின்றோம்’ என்றார்.
இப்படியும் ஒரு சிலர் இருக்கின்றார்கள்.
சுமார் 12 வருடங்கள் முன்பு ஆலடியில் அமைந்துள்ள டிரான்ஸ்போமரின் தரத்தை உயர்த்துவதற்கு (என்று நினைக்கின்றேன்) சில மின்சாதனங்களை கொண்டுவர வேண்டியிருந்தது. வெளிநாட்டில் இருந்து இருபது அடி கொள்கலனில் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது அந்த சாதனம்.
ஆனால் ஆலடி ஒழுங்கையால் அதைக்கொண்டு வருவதற்கான ஒழுங்கையில் அகலம் போதுமானதாக இருக்கவில்லை என்று அந்த முயற்சி கைவிடப்பட்டது என்று சம்பந்தப்பட்ட ஒருவர் அப்பொழுது கூறியிருந்தார்.
கெருடாவில் பகுதியில் ஏராளமான பரந்தவெளிகள் உண்டு. ஆனால் இது போன்ற பகுதிகளில் பெரிய தொழிற்பேட்டைகளை அமைப்பது என்பது சாத்தியம் இல்லாத ஒன்று. ஏனெனில் பெரிய தொழிற்பேட்டைகளுக்கு தேவையான பொருட்களை 40, 45 அடி நீள கொள்கலன்களில் கொண்டுவரவேண்டும். சில வேளைகளில் இவை திறந்த கொள்கலன்களாக அதாவது அகலம் மற்றும் உயரம் என்பன பல அடிகளாக அமையும்.
இருப்பது எல்லாமே ஓடுங்கல் பாதைகள் எப்படிக் கொண்டு வர முடியும்?.
இங்கே சம்பந்தப்பட்ட அரச காணிச்சட்டங்கள் நீண்ட தொலை நோக்கில் தயாரிக்கப்பட்டதாகத் தெரியவில்லை, கடுமையாகவும் இல்லை. முன்னர் உள்நாட்டுப் பிரச்சனைகள் காரணமாக இது போன்ற பிரச்சனைகள் கவனிக்கப்படாததும் ஒழுங்கைகள் ஒடுங்க ஏதுவாகப் போய்விட்டது. பழைய காணிச் சட்டங்கள் தற்காலத்திற்கேற்ப திருத்தப்படும் போலும் தெரியவில்லை. காணி உரிமை மாகாணத்துக்கோ மத்திக்கோ என்ற பிரச்சனையும் வேறு.
குறையாகக் கூறவில்லை. இங்கேயே பிறந்து இங்கேயே வளர்ந்து இங்கேயே தொழில்புரியும் இது சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளாலோ அல்லது இன்றுவரை இங்கேயே வசிப்பவர்களாலோ இதன் தாக்கம்பற்றி அதிகம் அறிய வாய்ப்புக்கள் குறைவு. நான்கூட வெளியிடங்கள் செல்ல வாய்ப்பில்லாமல் இங்கேயே மட்டும் இருந்திருப்பேயானால் இன்று இந்த விடயத்தை எழுதியிருக்க சிந்தித்திருக்கவேமாட்டேன்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
RAJKUMAR PERIYATHAMBY (canada)
Posted Date: July 01, 2018 at 03:56
சிறப்பு
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.