'குப்பை' அதன் பெயருக்கு ஏற்ப எம்மைப் பொறுத்தவரை எறிந்தவுடன் மறக்கப்படும் அல்லது உதாசீனப்படுத்தப்படும் விடயம்.
இங்கு எமது ஊர்களில் நடுத்தரக் குடும்பம் ஒன்று நாள் ஒன்றுக்கு அகற்றும் குப்பைகளின் அளவு சுமார் 0.1 கன மீட்டர்கள் (0.1 Cu.m, 1 அடி நீளமான பை நிறைய என்று வைத்துக்கொள்வோம்).
இதன்படி கடந்த 50 வருடங்களில் ஒரு குடும்பம் எவ்வளவு குப்பைகளை வீசி இருப்பார்கள் என்று பார்த்தால்...
கனவளவில் - 50 x 365 x 0.1 = 1,825 Cu.m
பைகள் கணக்கில் – 50 x 365 x 1 = 9,125 பைகள்
மேல் உள்ள குப்பைகள் கிட்டத்தட்ட 5,000 பெரிய உழவு இயந்திர பெட்டிகளுக்குச் சமம்.
யாழ்தீபகற்பத்தை எடுத்துக்கொண்டால் (1 லட்சம் குடும்பங்கள்) வீசப்பட்ட குப்பைகள் சுமார் 5 கோடி உழவு இயந்திரங்களுக்குச் சமமாகவும், வல்வை நகரசபையை எடுத்துக்கொண்டால் (5,000 குடும்பங்கள்), இவை 25 லட்சம் உழவு இயந்திரங்களுக்குச் சமமாகவும் உள்ளது.
மிகையான ஒரு கணக்குப் போல் இவை தென்பட்டாலும் இவை ஒன்றும் மிகையான கணக்கல்ல. குப்பைகளின் கணக்கு இதைவிட அதிகமாகத்தான் சேரும்.
(சென்னை நகரில் நாள் ஒன்றுக்கு அகற்றப்படும் குப்பைகள் – மீள்சுழற்சிக்குரிய குப்பைகள் அகற்றப்பட்ட பின்னர் - தொன்கள் கணக்கில். தலைநகர் கொழும்பில் கனரக குப்பை லொறிகளில் நூற்றுக்கணக்கில்)
யாழ்ப்பாணம் குறிப்பாக எமது வல்வை நகரசபை பிரதேசத்துக்குட்பட்ட சொத்துக்கள் கடந்த கால உள்நாட்டுப்போரின் போது மிகக்கடுமையாக சேதமடைந்திருந்தன. இதனால் ஏராளமான சேதங்கள் அதாவது குப்பைகள் உருவாக்கப்பட்டிருந்தன.
உள்நாட்டுப்போரில் பாவிக்கப்பட்ட போர்த்தளபாடப் பொருட்கள் மற்றும் அவற்றிலிருந்து கழிவாக்கப்பட்ட பொருட்கள் போன்றவைபற்றி கணக்கில் எடுக்கவில்லை.
யுத்தசூழல் அற்றநிலையில் தற்பொழுது பலர் தமது வீடுகளை புணரமைத்துவருகின்றார்கள் அல்லது புதிதாக அமைத்து வருகின்றார்கள். இத்தகைய நிர்மாணங்களின் போதும் ஏராளமனான கழிவுகள் உருவாகுகின்றன. திருவிழா, விளையாட்டுப் போட்டிகள் போன்றவற்றிலும் ஏராளமான குப்பைகள் உருவாகுகின்றன.
மேற்குறித்தவை போன்ற விடயங்களில் உண்டாகும் குப்பைகள் பற்றியும் என் கணக்கில் சேர்க்கவில்லை.
விடயத்துக்கு வருவோம். இதுவரை நாம் எமது வீடுகளில் இருந்து அகற்றிய குப்பைகள் எங்கே சென்றுள்ளன?
யாழ்பாணத்தில் ஏன் தலைநகரில் கூட குப்பைகளை எரிக்கும் இயந்திரம் (Garbage Incinerator) என்பது இல்லை. யாழ்பாணத்தில் குப்பை மீள் சுழற்சி (Garbage Recycle) என்பது அறவேயில்லை.
எங்கள் வீட்டுக் குப்பைகள் எங்கள் வீட்டைவிட்டு வெளியேறினால் போதும் என்பதில் மட்டும் நாம் எல்லோரும் கவனம்.
நகரசபைகளைப் பொறுத்தவரை, அவர்கள் குப்பைகள் அதிகம் தமக்கு வருவதை விரும்பமாட்டார்கள். காரணம் குப்பை அகற்றும் தொழிலாளர் பிரச்சனை, குப்பை அள்ளும் வாகன வசதிகள், குப்பையைக் கொட்டுவதற்கான இடம், மட்டுப்படுத்தப்பட்ட நிதி போன்ற பல பிரச்சனைகள் - அதாவது மட்டுப்படுத்தப்பட்ட வசதிகள்.
ஆகவே தமக்கு பிரச்சனை வராமல் குப்பைகள் பக்கத்து வீட்டுக்காணிகளுக்குள் சென்றாலும் சரி, வெளிகளில் சென்றாலும் சரி, கடலுக்குள் சென்றாலும் சரி கண்டும்காணாமல் இருக்கவேண்டிய சூழ்நிலை.
நகரசபைகளுக்கு உள்ள பிரச்சனை பற்றி பலரும் சிந்திப்பதில்லை. அண்மையில் வீட்டுவரியைக் வல்வை நகரசபை கட்டிய போது பலர் வரியை உரிய நேரத்தில் கட்டினார்கள், சிலர் சிறுவாதம் செய்தார்கள்.
நகரசபை எமக்கு என்ன சேவைகள் செய்து வருகின்றது என்பதை அறிய ஆர்வம் காட்டுவதில்லை.
யாழில் நகர மற்றும் பிரதேசசபைகளால் கொட்டப்படும் குப்பைகள் சில வேளைகளில் திடீர் என்று தீப்பற்றி எரிவது ஒரு வழக்கம். ஊர்களின் ஒதுக்கப்புறத்தில் இவை இடம்பெறுவதால் பலருக்கு இதுபற்றி தெரியாது. எவ்வாறு எரிகின்றது. இதற்கு அனுமதியுண்டா, எரிப்பவர்கள் யார், வளிமண்டலம் மாசடைகின்றது?..............போன்றவை இதுவரை எவரும் ஆர்வம் காட்டாத பிரச்சனைகள்.
எங்கேதான் யாழ்ப்பாணத்துக் குப்பைகள் இதுவரை சென்றுள்ளன, தற்பொழுது செல்கின்றன?.
யாழ்மாவட்டத்தின் வெளிப்புறம் மூன்றுபக்கங்களும் கடலால் சூழப்பெற, உட்பகுதி ஒப்பீட்டளவில் மிகப்பரந்த ஆழம் குறைந்த உவர் நீரேரிகளால் சூழப்பட்டுள்ளது. அத்துடன் இவற்றையொட்டி உவர் தன்மை காரணமாக பரந்தவெளிகளும் அமைந்துள்ளன.
சத்தமில்லாமல் யாழ்ப்பாணக் குப்பைகள் செல்வதற்கும் மறைவதற்கும் ஏதுவாக, குறித்த இந்த நீர் மற்றும் நிலப்பரப்புக்கள் அமைந்துவிட்டன.
வெள்ளப்பெருக்கு, நிலத்தடிநீர் மாசு, நீர்ப்பற்றாக்குறை போன்றவற்றுக்கு பிரதான காரணியாக, சிதறி அமிழும் இந்தக்குப்பைகளும்தான் காரணம்.
சுற்றியுள்ள கடல் மற்றும் நீர்ப்பரப்புக்கள் மிகவும் ஆழம் குறைந்தவையாதலால், கடற்கரைகள் மற்றும் நீரேரிப்பகுதிகளில் கொட்டப்படும் கழிவுகள் குறிப்பாக பிளாஸ்டிக் குப்பைகள் அழியாமல் மண்படுக்கைகளில் (Sea bed) நிரந்தரமாக தேங்கிவருகின்றன. இவை இலங்கை போன்ற நாடுகளில் ஒருபோதும் திருப்பி எடுக்கப்படப்போவதில்லை. ரசயானக் கழிவுகளைக் கையாளும் முறைமைகளும் இங்கு இல்லாததால் பிளாஸ்டிக்கை விட ஏராளமான ரசாயன கழிவுகளும் எமது நீர்ப்பரப்புக்களில் கலக்கின்றன. இவையும் மீன்களின் பெருக்கத்தை குறைத்துக்கொண்டு வருகின்றன.
நகரசபைகள் குப்பைகளைக் கொட்ட தெரிவுசெய்துள்ள இடங்கள், நகர்களை அடுத்து அமைந்துள்ள வெளிகள்தான். மழைகாலங்களில் நோய்களைக் கொண்டுவருவதற்கு இவையும் பிரதான காரணிகளில் ஒன்றாக விளங்கிவருகின்றன.
வெள்ளங்கராயில் புகைக்கும் வல்வை நகரசபை குப்பை
வல்வை நகரசபையில் சேரும் குப்பைகள் தொண்டைமனாற்றில் வெல்லங்கராய் பகுதியில் கொட்டப்பட்டுவருகின்றன. அவ்வப்போது மெல்லிய எதிர்ப்புக் குரல்கள் – தவறில்லை. ‘நகரசபை தலைவராக நீங்கள்தான் இருக்கவேண்டும். ஆனால் குப்பை கொட்ட மட்டும் நாங்களா’ என்று கேட்பதில் என்ன தவறு இருக்கமுடியும்?. வரும்காலங்களில் இது ஒரு பாரதூரமான பிரச்சனையாக மாறக் கூடிய வாய்ப்புக்கள் உண்டு.
வல்வையில் பல ஒடுங்கலான ஒழுங்கைகளுக்குள் நகரசபை குப்பை டிராக்டர்கள் செல்ல முடியாது. அப்படியென்றால் அப்பகுதி மக்கள் குப்பைகளை என்ன செய்கிறார்கள்?.
வருடந்தோறும் மனைவியின் உலகுடையார் ஒழுங்கையில் உள்ள பிறந்த காலியான வீட்டில் குப்பைகள் தானாகச் சேர்கின்றன. அருகில் கோயில் என்பதால் தூய்மை வேண்டும் என்பது ஒருபுறம், அகற்றாவிட்டால் PHI தண்டம் போட்டுவிடுவார்கள் என்பது மறுபுறம் - நானும் தொடர்ந்து பணம் கொடுத்து அவற்றை அகற்றிவருகின்றேன். குப்பையும் தொடர்ந்தும் தானாகவே சேர்ந்துகொண்டேதான் இருக்கின்றது.
அபிவிருத்தியடைந்த நாடுகளில் குப்பைகளைக் கையாளுதல் (Garbage Management) என்பது முன்னுரிமை கொடுக்கப்பட்டு மிகவும் நேர்த்தியாகக் கையாளப்படும் ஒரு விடயம். எமது உடன் பிறப்புக்கள் பலர் இத்தகைய அபிவிருத்தியடைந்த நாடுகளில் தற்போது அந்த நாட்டவர்களாகவே வசித்துவருகின்றார்கள். குறித்த 'Garbage Management' பற்றியும் நேர்த்தியாக அறிந்துள்ளார்கள். ஆனால் இவர்கள் இங்கு ஊர்களுக்கு வரும்போது Garbage Management ஐ அறவே கடைப்பிடிப்பது இல்லை என்பது வியப்புக்குரிய ஒன்று இல்லாவிட்டாலும் இங்கு சுட்டிக்காட்டப்படவேண்டியவொன்று.
அண்மையில் வல்வை நகரசபையில் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டால் மட்டுமே அகற்றப்படும் என அறிவிக்கப்பட்டு, தற்பொழுது அது நடைமுறைப் படுத்தப்பட்டுவருகின்றது.
ஆனாலும் யாழ்பாணத்தில் முன்மாதிரியாக குப்பைகளைக் கையாள ஒரு திட்டத்தை (மீள்சுழற்சி, குறைவான குப்பை, குப்பை பற்றிய விழிப்புணர்வு போன்ற விடயங்களை) எமது நகரசபை முதலாவதாக முன்னெடுத்தால்................
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Lukxini (Srilanka)
Posted Date: September 14, 2018 at 13:07
குப்பைகளில் உள்ள சேதன பதார்த்தங்கள் உக்கலடையும்போது Methene (CH 4) கலந்த bio gas வெளியிடப்படுகின்றது.இந்த வாயு வின் எரிபற்று நிலை காரணமாக குப்பை மேடுகள் தாமாகவே எரிகின்றது.
RAJKUMAR PERIYATHAMBY (canada)
Posted Date: June 16, 2018 at 07:12
மிக முக்கியமான பதிவு .
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.