ஆடி அமாவாசை விரதமானது இந்து சமயத்தைச் சேர்ந்த அனைவராலும் பக்தியுடன் அனுட்டிக்கப்படும் விரதம்.நாளைய தினத்தில் இந்துக்கள் சமுத்திரத்தில் அல்லது புண்ணிய நதிகளில் தீர்த்தமாடி தம் மூதாதையர்களை முக்கியமாக பெற்ற தந்தையை நினைவு கூர்ந்து விரதமிருந்து பிதிர்க்கடன் செய்யும் நாள் ஆகும்.
சூரியனும், சந்திரனும் ஒன்றுபட்டுப் பூமிக்கு ஒரே திசையில் நேர்படும் நாட்கள் தந்தை வழி முன்னோர்களை நினைந்து வழிபட ஏற்ற நாட்களாக அமாவாசை நாள் இந்த ஆடி அமாவாசை திகழ் கின்றது.
ஆடி மாதத்தில் சூரியன் கடகராசியில் சஞ்சரிக்கின்றான். கடகராசி சந்திரனின் ஆட்சி பெற்ற வீடு. சக்தி அம்சமான சந்திரனும் சிவ அம்சமான சூரியனும் ஒன்று சேர்ந்து விளங்கும் நாள். அதுவும் ஆடி மாதத்து அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தது. நம் முன்னோர்களது தேவைகளைக் கவனிப்பதாகக் கருதப்படும் பிதிர்த்தேவதைகள் என்று கூறப்படும் தென்புலத் தாருக்கு உரிய திசை தெற்கு ஆகும். ஆடி மாதப் பிறப்பிலிருந்து சூரியன் தெட்சணாயகனாக தெற்கு நோக்கிச் சஞ்சரிக்கத் தொடங்குகிறான்.
ஆகையால் ஆடி அமாவாசை பிதிர்க் கடன் ஆற்றுவதற்குக் சிறந்த நாளாகக் கொள்ளப்பட்டு வருகின்றது. நல்வினைப் பயனாக தனு கரண புவன போக உடம்பை உருவாக்கிப் பராமரித்து அறிவூட்டி வாழ வைத்த தந்தையாருக்குப் பிள்ளைகள் கடைப்பிடிக்கும் விரதமே ஆடி அமாவாசை விரதமாகும். மாதந்தோறும் வருகின்ற அமாவாசை நாட்களுக்கு விரதம் இருக்க இயலாதவர்கள் ஆடி அமாவாசை விரதம் இருத்தல் கட்டாயமாகும். இறை வழிபாட்டோடு சேர்ந்து பிதிர் வழிபாடும் தானமும் நற்பலனைக் கொடுக்கும்.
ஆடி அமாவாசை விரத தினத்தில் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்வதோடு எம்மை வாழவைத்த தெய்வங்களையும் வழிபடவேண்டும். பிதிரர்களுக்கு முறையாக வழிபாடு செய்து வந்தால் அவர்களுடைய சந்ததி நல்ல புகழோடும் செல்வத்தோடும் நிறைந்த ஆயுளோடும் விளங்கும் என ஆகம நூல்கள் உரைக்கின்றன. தந்தையை இழந்தவர்கள் ஆடி அமாவாசை தினத்தில் நீராடி நம் முன்னோரை மனதில் இருத்தி அவர்கள் நற்கதியடைய வேண்டுமென்று தியானித்து எள்ளும் நீரும் கொண்டு பிதிர்த் தர்ப்பணம் ஆற்றுதல் வேண்டும். எள்ளும் தர்ப்பைப் புல்லும் விஷ்ணுவின் உடம்பிலிருந்து தோன்றியதாகக் கூறப்பட்டுள்ளது. துர்த் தேவதைகளுக்கு விஷ்ணு பரம வைரியாதலால் எள்ளைப் பயன் படுத்துவதன் மூலம் துர்த்தேவதைகளால் உண்டாகும் தீங்குகள் நீங்குகின்றன.
அன்று அமுது படைத்தலும் இயன்றளவு தான தர்மங்கள் செய்வதும் நன்மை பயக்கும். உடம்பிலுள்ள வாயுவை அகற்றும் காயாகிய காத்தோட்டிக்காய் அன்றைய படையலில் சிறப்பு அம்சமாகும். மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய தீர்த்தோற்சவம் ஆடி அமாவாசையன்று கீரி மலை தீர்த்தத்தில் நடைபெறும். யாழ்குடாநாட்டில் கீரிமலை வில்லூன்றி போன்றவற்றிலும், கேதீஸ்வரத்தில் பாலாவியிலும், கோணேஸ்வரத்தில் பாபநாசத்திலும், பொன்னாலை திருவடி நிலையிலும், மட்டக்களப்பு அமிர்த கழியிலும், முகத்துவாரத்தில் கடலிலும், கப்பலுடையவர் ஊறணி இந்து சமுத்திரத்திலும் தீர்த்தமாடுவதை இந்துக்கள் போற்றிக் கடைப்பிடித்து வருகின்றனர். இந்தியாவில் கன்னியாகுமாரியிலும் இராமேஸ்வரத்திலும் கங்கை, யமுனை, காவேரி, சரஸ்வதி, நர்மதா, கோதாவரி, துங்கபத்ரா, தாமிரபரணி, திரிவேணி, சங்கமம் போன்ற இடங்கள் புண்ணிய தீர்த்தங்களாக விளங்குகின்றன.
தந்தை சொல்மிக்க மந்திரமில்லை தாயிற் சிறந்ததொரு கோவிலுமில்லை’ எனப் போற்றப்படுகின்ற பெற்றோரே எமது கண்கண்ட தெய்வமாகையால் சித்திரா பெளர்னமி விரதம் தாய்க்கும் ஆடி அமாவாசை விரதம் தந்தைக்கும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. சமய குரவர்கள் இறைவனைத் தந்தையாகவும் தாயாகவும் பாடிப் பரவியுள்ளார்கள்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.