கத்தோலிக்கத் தேவாலயங்களில் திருநாட்களின்போது ஒலிபெருக்கியைக் கட்டுப்பாட்டுடன் பயன்படுத்துமாறு யாழ்.மறை மாவட்ட குரு முதல்வர் அருட்பணி ஜெபரட்ணம் அடிகளார் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
தேவாலயங்களில் இடம்பெறும் வழிபாடுகளின்போது பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிச் சாதனங்களினால் ஆலய சுற்றாடலில் வாழும் மாணவர்கள், நோயாளர்கள், வயோதிபர்கள் ஆகியோருக்கு இடையூறுகள் ஏற்படும்.
எனவே ஞாயிறு திருப்பலிகளின்போது தேவாலயங்களுக்குள் மட்டும் கேட்கும்படியாகவும் திருநாட்களின்போது, ஆலய
வளாகத்துக்குள் மட்டும் கேட்கும்படியாகவும் ஒலி பெருக்கிகளைப் பயன்படுத்துமாறு குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் ஆலோசனை கூறியுள்ளார்.
அடிகளார் முன்வைத்த கோரிக்கையை முதலில் வரவேற்க வேண்டும்.
இங்கு அவர் கத்தோலிக்க தேவாலயங்களுக்கு மேற்படி கோரிக்கையை விடுத்துள்ளாராயினும் ஒலிபெருக்கிப் பயன்பாட்டில் சைவ ஆலயங்களும் குறைந்தவையல்ல. ஆலயத் திருவிழாக்கள் தொடங்கிவிட்டால், வீதி நெடுகிலும் ஒலிபெருக்கிகளைப் பொருத்தி அந்தச் சூழல் முழுமையிலும் சத்தத்தை ஏற்படுத்துகின்ற நிலைமை உள்ளது.
குறிப்பிட்ட ஆலயங்கள் மிகவும் அடக்கமாக ஒலிபெருக்கியைப் பயன்படுத்தும்போது, கணிசமான ஆலயங்கள் ஒலிபெருக்கிகளைக் கண்டபாட்டில் பயன்படுத்துகின்றன.
இதன் காரணமாக, குருமுதல்வர் கூறியது போல மாணவர்களும் ஏனையவர்களும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
சில சந்தர்ப்பங்களில் ஒலிபெருக்கிப் பயன்பாட்டால் ஆலய நிர்வாகத்துக்கும் ஆலயச் சூழலில் வசிப்பவர்களுக்கும் இடையே முரண்பாடுகளும் ஏற்படுகின்றன.
உண்மையில் ஒலிபெருக்கியை அடக்கமாகப் பயன்படுத்தும்போது அஃது தெய்வீகத்தை மேலும் வலுப்படுத்துவதாக இருக்கும்.
என்ன செய்வது ஒரு காலத்தில் அடியார்கள் ஆலயத் திருவிழாக்களுக்குச் சென்று வழிபாடாற்றினர்.
ஆனால் இப்போது மந்திர உச்சாடனங்கள் ஒலிபெருக்கி மூலமாக அதிருகிறது. தவில் நாதஸ்வரங்கள் முழங்குகின்றன் .
ஆனால் அந்த ஆலயத்தில் வழிபடுவதற்கு அடியார்கள் எவருமே இல்லை. அந்தளவுக்கு நிலைமை வந்துவிட்டது.
ஆக, இப்போது திருவிழா என்பது ஒலி பெருக்கியில்தான் நடக்கிறது. இந்த நிலைமை மாற வேண்டும். ஒலிபெருக்கிப் பயன்பாட்டைக் கடுமையாக மட்டுப்படுத்த வேண்டும். இதைச் செய்யாதவிடத்து ஆலய நிர்வாகங்களும் அயலவர்களும் முரண்பட்டு மோதிக் கொள்கின்ற துர்ப்பாக்கிய நிலைமைகளும் உருவாகலாம்.
உண்மை. ஓர் ஊரில் ஒரு மதகுரு அந்த ஊர் முழுவதும் ஒலிபெருக்கிகளைப் பொருத்தி தனது போதனைகளை நாள்தோறும் ஒலிக்க விட்டிருந்தார். அதனால் மாணவர்கள் மிகவும் கஷ்டப்பட்டனர்.
இவ்வாறான சூழ்நிலையில் யாழ். மறை மாவட்ட குருமுதல்வரின் அறிக்கை குறித்து அனைவரும் கவனம் செலுத்துவது அவசியமானதும் கட்டாயமானதுமாகும்.
வலம்புரி பத்திரிகையின் இன்றைய ஆசிரியர் தலையங்கம் - 10.08.2025
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.