ஒரு நூலின் அதிசயமான மீள்பிறப்பு, ஏகாதசி புராணம் கண்டுபிடிக்கப்பட்டது.
ஈழத்து இலக்கியப்பரப்பு நூற்றாண்டுகளாகப் பல சிறப்பான புராணங்களையும் நூல்களையும் தந்துள்ளது. ஆனால் அவற்றுள் பல காலஓட்டத்தில் மறைந்து போய்விட்டன, சிலவற்றின் பெயர்களே மட்டும் நமக்கு மிஞ்சியிருக்கின்றன.
அவ்வாறு “மறைந்து விட்டதாக” கருதப்பட்ட நூல்களில் ஒன்று வட்டுக்கோட்டை நா. சிவசுப்பிரமணிய சிவாச்சாரியார் எழுதிய “ஏகாதசி புராணம்.”
1936 ஆடி 12 அன்று வெளியான ஈழகேசரி நாளிதழில், எழுத்தாளர் வட்டுக்கோட்டை முருகரம்மான் (மு. இராமலிங்கம்) அவர்கள் இந்த புராணம் அச்சாகியதாகச் செய்தி வெளியிட்டார்.
பின்னர் 1976 இல், பேராசிரியர் பொ. பூலோகசிங்கம் அவர்கள் திருக்கேதீஸ்வரம் திருக் குடத்திருமஞ்சன மலரில் எழுதிய “ஈழத்துப் புராணங்கள்” என்ற கட்டுரையில், அந்தப் புராணம் பதிப்பிக்கப்பட்டதாகப் பழைய குறிப்பைச் சுட்டிக்காட்டியிருந்தாலும், அதன் பிரதிகள் எங்கும் காணப்படவில்லை என்று குறிப்பிடுகிறார்.
அதனைத் தொடர்ந்து, 2025 ஆம் ஆண்டு ஆனி மாத ‘ஞானம்’ இதழில், ஞானம் பாலச்சந்திரன் அவர்கள் சிவாச்சாரியாரின் ஏகாதசி புராணம் “மறைந்து போன நூல்” என உறுதியாகத்தெரிவித்திருந்தார்.
இவ்வாறு பல்லாண்டுகளாக தேடப்பட்டு, கிடைக்காததாகவே கருதப்பட்ட அந்தப் புராணம் இப்போது முழுமையாகக் கிடைத்துள்ளது!
இது ஒரு சாதாரண நூல் கண்டுபிடிப்பு அல்ல ஈழத்தின் இலக்கிய மரபில் மறைந்து போன ஓர் ஒளிக்கீற்றை மீண்டும் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த மிகப் பெரிய நிகழ்வு இது.
வழமைபோல் கிடைத்தற்கரிய நூல்களினை அரும்பாடுபட்டு தேடி வழங்கிவரும் விருபா குரமரேசன் அண்ணாவே இந்த நூலினையும் வழங்கியிருந்தார். சதாவதானம் நா.கதிரைவேற்பிள்ளை அவர்களினது அனேக முதற்பதிப்புக்களையும், பின்னைய பதிப்புக்களையும் ஏலவே வழங்கியுள்ளார். நூலின் பெயரினையும், பதிப்பாசிரியரின் பெயர் விபரங்களை வழங்கினால் போதும், மறைந்து போனது என சான்றிதழ் பெற்று வைத்திருக்கும் நூல்களையும் தேடிக்கண்டுபிடிக்கும் ஆற்றல் மிக்கவர் விருபா குமரேசன் அண்ணா.
சதாவதானம் நா.கதிரைவேற்பிள்ளை ஆவணக் காப்பகத்தினர், நா.கவின் 1896 ல் வெளியான ஏகாதசிபுராணத்தினையும், சிவாச்சாரியாரின் 1905ல் வெளியான ஏகாதசி புராணத்தினையும் ஒன்றாக வெளியிட முயன்றுவருகின்றனர் என்று அறியக்கிடைக்கின்றது. (பிரதி)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.