ஆதவன் பக்கம் (27) – உண்மைச் சம்பவம் - ஐயாவும், ஆஞ்சநேயர் சாமியாரும்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/07/2018 (சனிக்கிழமை)
தந்தையாருக்கு பில்லி சூனியம் பித்தலாட்டம் சாத்திரம் மற்றும் மனிதச் சாமியார்கள் போன்றவற்றில் நம்பிக்கைகள் இல்லை. இவற்றை தர்க்கபூர்வமாக விவாதிக்கவும் செய்வார்.
93 ஆம் ஆண்டு தந்தையார் கொழும்பில் பணிபுரியும் காலம், நானும் முதன்முதலாக கொழும்புக்கு வந்து கப்பல் ஏறுவதற்காக காத்திருந்த நேரம்.
அப்போது உறவினர் வீடுகளுக்கு செல்வது வழக்கம். ஒருசில உறவினர் வீடுகளுக்கு அடிக்கடி செல்வது உண்டு. இவற்றில் ஒன்று வெள்ளவத்தை ஹம்டன் லேனில் உள்ள ஒரு உறவினர் வீடு. கணவர், மனைவி (‘அன்ரி’ என இங்கு அழைக்கின்றேன்) இருவரும் எமக்கு உறவினர்கள், நன்றாக வரவேற்று உபசரிப்பவர்கள்.
அன்ரி அப்பொழுது வெள்ளவத்தையில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு அடிக்கடி போவது வழக்கம். இப்பொழுது வெள்ளவத்தை விசாப்பிள்ளையார் உள்ளதுபோல், அப்பொழுது ஆஞ்சநேயர் கோயில் மிகப்பிரபல்யம். ஆஞ்சநேயர் கோயிலில் ஒரு மனிதச்சாமியார் இருந்தார். அவர் கூறும் வாக்குகளால் கோயிலும் பிரபல்யம், மனிதச்சாமியான அவரும் பிரபல்யம்.
பலருக்கு ஒரு பழக்கம் உண்டு. தாங்கள் ஒன்றைப் பழக அல்லது விரும்ப ஆரம்பித்தால் அதை மற்றவர்களுக்கும் கூறி, மற்றவர்களையும் தம்மைப் பின்பற்றவேண்டும் என்று நினைப்பது அல்லது வற்புறுத்துவது.
அன்ரியும் அவ்வாறுதான். கொஞ்சம் அதிகப்படி என்றே கூறலாம். வீட்டுக்குப்போகும் நேரம் எல்லாம் ஆஞ்சநேயர் கோயில் மற்றும் சாமியார் பற்றித்தான் பேசுவார்.
பூசைமுடிந்த பின்னர் ‘சாமியார் உருக்கொண்டு ஆடுவார் என்றும், அத்தருணங்களில் அங்கு சாதாரண கண்ணாடிகள்கொண்டு பிரேம்போட்டு மாட்டப்பட்டிருந்த சாமிபடங்களை தான் வைத்துள்ள கோல் ஒன்றைக்கொண்டு மிகப்பலமாக அடிப்பார், ஆனால் அவை ஒன்றும் உடைவதில்லை’ என்றார்.
மேலும் இதுபோன்ற வேறும் சில அசாதாரண செயல்களை பக்தர்கள் முன்னிலையில் நிகழ்த்தும் சாமியார், இறுதியில் அங்கு அமர்ந்துள்ள ஓரிரு பக்தர்களை நோக்கி அவர்களுக்கு உள்ள பிரச்சனைகளை சரியாகக் கூறி அவை தீருமா தீராதா, பிரச்சனைகளில் இருந்து விடுபட என்ன செய்யவேண்டும் என்றெல்லாம் கூறுவார்’ என்றார்.
‘சாமியாரின் செயல்களில் உண்மையில்லை அதாவது கண்ணாடி மேல் அடிப்பது போன்றவை வெறும் நடிப்பு’ என்று சிலர்கூற, அவர்களைக் கூப்பிட்டு கண்ணாடியை அடிக்கக் கூறியதாகவும், அவர்கள் மெதுவாக கண்ணாடி மேல் அடிக்க, கண்ணாடி உடனடியாக உடைந்ததாகவும்’ – அன்ரி உச்சத்தின் விளிம்பில் நின்று எங்களுக்கு விவரிப்பார்.
அன்ரி இவ்வாறு கூறும்போதெல்லாம், தந்தையார் அன்ரியின் பேச்சையும் சாமியாரின் செயல்களையும் தர்க்கரீதியாகவும், விஞ்ஞானரீதியாகவும் விமர்சனம் செய்தார். தந்தையாரின் விமர்சனம் - எப்படி இருக்கும் என்று கூறத்தேவையில்லை.
இடைக்கிடையே நானும், படத்துக்கு பின்னணி இசைபோல் எனது கருத்தையும் விட்டுக்கொண்டிருந்தேன்.
தந்தையார் இவ்வாறு விமர்சனம் செய்யும் போதெல்லாம் ‘மாஸ்டர் இப்படி எல்லாம் சாமியை விமர்சனம் செய்யாதீங்கோ, நீங்கள் நம்பவில்லை என்றால் ஒருமுறை கோயிலுக்குப் போய்ப்பாருங்கள்’ என்றார் அன்ரி.
சில நாட்கள் கடந்தன. இந்த விடயத்தை மறந்துவிட்டோம்.
வாரவிடுமுறை நாள் ஒன்று என நினைக்கின்றேன், நான் கணணி வகுப்புக்குச்சென்று திரும்பியிருந்தேன். தந்தையாரைக் காணவில்லை. சற்றுப்பிந்தி இருப்பிடம் வந்தார்.
முகம் மாறியிருந்தது, நடையில் செயல்களில் ஒரு தளர்வு தெரிந்தது. இப்படி முன்னர் ஒரு நாளும் தந்தையாரை நான் பார்த்ததில்லை.
‘என்ன ஐயா ஒரு மாதிரி இருக்கின்றீர்கள், என்ன நடந்தது எதுவும் சுகமில்லையா?’ என்று கேட்டேன். ‘ஒன்றுமில்லை’ என்றார்.
இவருக்கென்ன லவ் பெயிலியரா, குடும்பத் தகராறா அல்லது நண்பர்கள் பிரச்சனையா – அப்படி ஒன்று இருக்க வாய்ப்பில்லை. அப்படி என்றால் ‘சி.ஐ.டி பிரச்சனை’ ஏதாவது எனநினைத்து நானும் விடவில்லை. கேட்டேன்.
கூறினார், அன்றைய தினம் சற்றுமுன் நடந்த சம்பவத்தை.
25 வருடங்கள் கழித்து என்ன எழுதத் தூண்டும் அளவுக்கு இன்று நினைத்தாலும் ஆச்சரியப்பட வைக்கும் சம்பவம் அது.
‘தான் அன்று மாலை குறித்த ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்றதாகவும், அங்கு அன்ரி கூறியதுபோல், பூசை முடிந்தபின்னர் சாமியார் உருக்கொண்டு ஆடி கண்ணாடிகள் மேல் அடித்ததாகவும், அந்தவேளையில் சாமியார் இடைக்கிடையே தன்னை மாத்திரம் உற்றுப்பார்த்ததாகவும், இறுதியில் தன்னிடம் வந்து, ‘சாமியார் கண்ணாடிமேல் அடிப்பது ஒரு நாடகம் என்றீர், வாரும் நீர் வந்து அடியும்’ என்றாராம்.
‘புதிதாக ஒருவர் தன்னிடம் வந்துள்ளார், ஆகவே வந்தவரின் முகத்தைப்பார்த்து இவர் ஆழம் பார்க்க வந்துள்ளாரா அல்லது உண்மையான தனது பக்தரா’ என அறியக்கூடிய வல்லமை இது போன்ற சாமியார்களுக்கு குறைந்தது உள்ளது எனக்கருதலாம்.
ஆகவே மேலே சாமியார் கூறியதையிட்டு ‘தூக்கிவாரிப்போட்டது’ என்று கூற முடியாவிட்டாலும், தந்தையாரை தூக்கிவாரிப்போட வைத்த விடயம் சாமியார் இதற்குப் பின்னர் கூறியவைதான்.
அதாவது அன்ரி வீட்டில் சாமியாரைப்பற்றி தந்தையார் என்னெவெல்லாம் கூறினாரோ அவற்றை அப்படியே ஒன்றுவிடாமல் சாமியார் கூறினாராம்.
இதைக் கேட்க எனக்கு உண்மையிலேயே தூக்கிவாரிப்போட்டது. ஏனெனில் தந்தையார் இந்த விடயத்தில் எதனையும் கூட்டிக்குறைத்து சொல்லமாட்டார் என்பதே காரணம்.
அடுத்த நாள் அன்ரி வீட்டுக்குச் சென்றோம். தந்தையார் ‘வேண்டாம் விடு’ எனக்கூற நான்தான் அன்ரியிடம் விடயத்தைக் கூறினேன். அவர் அப்படியே ஆடிப்போய்விட்டார்.
இந்தச் சம்பவம் பற்றி தந்தையார் ஒருவரிடமும் பின்னர் கதைக்கவில்லை. திரும்பவும் ஆஞ்சநேயர் கோயிலுக்கும் சென்றதாகவும் எனக்குத் தெரியவில்லை. அன்ரியும் இப்பொழுது செல்வதுமாதிரித் தெரியவில்லை. நானும் இன்னும் ஒருமுறையும் அந்தக் கோயிலுக்கு செல்லவில்லை. ஒருமுறையாவது செல்லவேண்டும் என்று எண்ணுவதுண்டு.
மனிதச் சாமியார்கள் என்றவுடனே நித்தியானந்தா – ரஞ்சிதா போன்றவர்கள் தான் ஞாபகத்துக்கு வருவதால், பலருக்கு மனிதச்சாமியார்கள் என்றால் பகிடிதான். ஆச்சரியங்கள், அபூர்வங்கள் என்று மனிதச் சாமியார்கள் காட்டும் பல செயல்களை, சிலர் ஆதாரபூர்வமாக பொய் என்றெல்லாம் காட்டியுள்ளார்கள்.
எது எப்படியோ ஆஞ்சநேயர் சாமியார், தந்தையார் எங்கோ ஒரு இடத்தில் என்னவெல்லாம் பேசியிருந்தார் என்பதை சிறிதும் பிசறாது கூறியது இன்றும் என்னால் நம்பமுடியாத ஒரு சம்பவமாகவே இருந்துவருகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.