ஊர்ப் பிரச்சனை அல்லது ஊரின் வளர்ச்சி என்று கதைக்கும் போது, பலர் வெளியிடும் பொதுவான கருத்து ‘ஊரில் உள்ள கழகங்கள் முதலில் கலைக்கப்பட வேண்டும்’ என்பதாகும். இந்தக் கூற்றுக்கு ஆதாரமாக பல சம்பவங்களையும் முன்வைக்கின்றார்கள்.
84 - 85 ஆம் ஆண்டளவில் என்று நினைக்கின்றேன். சிதம்பரா கல்லூரி மைதானத்தில் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி ஒன்றின் இறுதி ஆட்டத்தில் நெடியகாடு விளையாட்டுக் கழகத்துக்கும், ரெயின்போ விளையாட்டுக் கழகத்துக்கும் இடையில், போட்டி மிகப் பலத்த ஆரவாரத்துக்கு மத்தியில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. மைதானத்தின் நான்கு பக்கங்களும் தற்காலம் போலன்றி ஆதரவாளர்களால் நிரம்பியிருந்தது.
போட்டிக்கு நடுவராக வல்வை ஒற்றுமை விளையாட்டுக் கழகத்தின் முன்னணி வீரர் ஒருவர் கடமையாற்றிக் கொண்டிருந்தார். போட்டியின் பிற்பாதியில் ரெயின்போ விளையாட்டுக் கழக முன்னணி வீரர் ஒருவர் சிவுப்பு அட்டை கொடுத்து வெளியே அனுப்பப்படுகின்றார். வெளியேற்றப்பட்ட வீர்ர் மைதானத்தின் பிரதான வீதியின் பக்கமாக வந்து உட்காருகின்றார். அப்பக்கத்தில் சிறுவனாக நானும் நின்றுகொண்டு போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
போட்டி தொடர்ந்து சமநிலையில் - மிகவும் பரபரப்பாக பலத்த சத்தத்துக்கு மத்தியில் இடம்பெறுகின்றது. மீண்டும் ரெயின்போ விளையாட்டுக் கழக வீரர் ஒருவருக்கு எதிராக நடுவர் விசில் ஊதுகின்றார்.
திடீரென்று ஏற்கனவே வெளியேற்றப்பட்டிருந்த வீரர் மைதானத்துக்குள் ஓடிச்சென்று நடுவரைச் சரமாரியாகத் தாக்குகின்றார். இத்தகைய சம்பவத்தை எவருமே எதிர்பார்த்திராததால் நடுவர் நிலைகுலைந்து விட்டார். ஆனாலும் வீரர்களும் அவர்களைத் தொடர்ந்து பார்வையாளர்களும், மேற்கொண்டு சண்டை தொடராமல் தடுத்து விட்டார்கள். சில நிமிடங்கள் மைதானம் ஒரு அசாதாரண சூழலில் சனக் கூட்டத்தால் நிரம்பியிருந்தது.
சற்று நேரம் கழித்து நடுவர் நெடியகாடு அணிக்கு வெற்றியை வழங்குகின்றார்.
கழகங்கள் சம்பந்தமாக நான், கண்ணால் கண்ட முதலாவது சண்டை இது.
தொடர்ந்தும் கழகங்கள் காரணமாக ஊரில் அவ்வப்போது சலசலப்புக்கள் வந்து சென்று கொண்டுதான் இருந்தது. ஆனாலும் 80, 90 களில் இயக்கத்தின் தோற்றமும், நாட்டுப் பிரச்சனையும் ஒரு அளவுக்கு மேல் கழகங்களின் செயற்பாடுகளுக்கு இடம் கொடுக்கவில்லை. ஆனாலும் ஒரு மட்டத்தில் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.
89 இன் ஆரம்பத்தில், ரேவடி விளையாட்டுக் கழகம் உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி ஒன்றை நடாத்திக் கொண்டிருந்தது. ‘அதனை நிறுத்துவது நல்லது’ என அப்போதைய வடமராட்சியின் அரசியல் துறைப் பொறுப்பாளர் தீபன் அவர்கள் தந்தையாரிடம் கூறினார். நிறுத்தக் கோரியதற்கு அவர் முன்வைத்த காரணம் ‘பிரதேசவாதம் கூடிக்கொண்டு போகின்றது’ என்பதாகும்.
90 களின் நடுப்பகுதி வரை கழகங்களின் செயற்பாடுகள் ஓரளவு அதிகரித்து, அதன் பின்னர் குறைந்து, 2009 வரை கிட்டத்தட்ட இல்லாமலேயே இருந்தது.
2009 இல் உள்நாட்டுப் பிரச்சனை முடிவுற்று மக்கள் மீண்டும் மெல்ல மெல்ல ஊர் வந்து சேர, கழகங்களும் மீண்டும் புத்துயிர் பெற வளர்ச்சிகளும் அவற்றின் கிளைகளாக பிரச்சனைகளும் ஆரம்பிக்கத் தொடங்கின.
இந்திரவிழாவில் மின் கம்பங்கள் நாட்டுவதில் 2 கழகங்களுக்கு இடையில் ஏற்பட்ட பாரதூரமான பிரச்சனையானது,இந்திரவிழாவை ‘வசந்தவிழா’ என்னும் பெயரில் ஒரு முறை கொண்டாடும் அளவுக்கு இட்டுச்சென்றிருந்தது.
கடந்த வருடம் யங்கம்னப்ஸ் மற்றும் வல்வை விளையாட்டுக் கழகங்களுக்கு இடையே இடம்பெற்ற உதைபந்தாட்டப் போட்டியில், வீரர்களிடையே இடம்பெற்ற கைகலப்பு ஆனது பின்னர் பரவி ஒருவர் மீது மற்றவர் மாறி மாறி தாக்கும் அளவுக்குச் சென்றது.
சில மாதங்கள் முன்பு மைதானக் காணி ஒன்று தொடர்பாக இரண்டு கழகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் பத்திரிக்கைகள் சமூக வலைத் தலங்கள வரை சென்று இறுதியில் போலிஸ், ஜெயில், நீதிமன்றம் என நீண்டு சென்றது.
இதே காலப் பகுதியில் வல்வை விளையாட்டுக் கழகத்துக்கு இடையே நடாத்தப்பட்ட உதைபந்தாட்ட போட்டி ஒன்றில் தீருவிலில் இரண்டு கழக வீரர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. (இதில் வேடிக்கை என்னவென்றால் எதிர் அணியில் நின்ற சிலர் கைகலப்பு முடிந்த பின்னர் ஒன்றாக வெளிக்கிடுச் சென்றதுதான்).
5 வருடங்கள் முன்பு அம்மன் கோவில் நிர்வாகத் தெரிவுக்கு இரண்டு பிரதான தரப்பினர் களம் இறங்கினார்கள். இங்கு பின்னணி என்பது மறைமுகமாக கழகங்களை அடிப்படையாக கொண்டிருந்தவை என்பது அனைவரும் அறிந்த விடயம்.
ரெயின்போ விளையாட்டுக் கழக மைதானத்தில் வளர்க்கப்பட்ட மரங்கள் தொடர்ச்சியாக இரண்டு தடவைகள் வெட்டி நாசமாக்கப்பட்டன.
அண்மையில் ரேவடி கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த இருக்கைகள் மற்றும் மின்குமிழ்கள் சேதமாக்கப்பட்டன. ‘என்ன ஏதாவது கழகப் பிரச்சனையா’ என்றுதான் எல்லோரும் கேட்டார்கள்.
இவை எல்லாவற்றுக்கும் மகுடம் வைப்பது - சில கழகங்களுக்குள் உள்ள உள்ளக பிரச்சனைகள்.
மேலே கூறப்பட்டவை வெறும் ஓரிரு உதாரணங்கள் தான்.
இந்தியா - பாகிஸ்தான் எல்லைபோல், வெள்ளைக் குட்டி அண்ணா கடையடி, வேம்படியின் இரு பக்கங்கள், மீனாட்சி அம்மன் கோவில், வாடி ஒழுங்கை என பலகை நாட்டப்படாத எல்லைகள் இங்கு. இதற்குச் சாட்சியாக எல்லைகளுக்குள் வெவ்வேறு நிறங்கள். இந்திரவிழாவின் போது தெளிவாக இதனைக் காணலாம் அல்லது கடலில் இருந்தும் பார்க்கலாம்.
கடந்த வாரம் பலாலியிலிருந்து பலர் கூடி வந்து சக்கோட்டையில் சண்டை இட முனையும் அளவுக்கு ஊரில் மட்டுமன்றி இதர இடங்களிலும் கழகங்களினாலான பிரச்சனைகள் உள்ளன.
பிரச்சனைகளுக்கு முன்னர் உள்ளூர் நிதியை மட்டும் நம்பி இயங்கிய கழகங்கள், தற்பொழுது பெருமளவு புலம்பெயர் நிதியைப் பெற்று செயற்படுவதால் செயற்பாடுகளும் அதிகம், விரயங்களும் அதிகம்.
சிங்கிரி என்று ஒரு விளையாட்டுக் கழகம் தோன்றி, அதன் முதலாம் வருடத்தை வீதி விளையாட்டுக் கழகாகக் கொண்டாடினார்கள். வினோத உடைப் போட்டியில் முதலாவது இடத்தில் கடன் சுமை தாங்காது தூக்கில் தொங்கிய நபரும் இரண்டாம் இடத்தில் சத்திர சிகிச்சை ஒன்றும் மூன்றவதாக அந்தக் காலத்தில் ஊரில் திரிந்திருந்த மன நிலை குன்றிய பெண் ஒருவரின் நடிப்பும் பெற்றன. நோட்டிஸ் மற்றும் ஒலி பெருக்கிக் காராக நெடியகாட்டைச் சேர்ந்த ‘இ’ என்பவரின் நீல நிறக் கார் ஒன்று ஈடுபட்டது. ஒரு புகைப் படம் கூட எடுத்திருப்பார்களா என்பது சந்தேகமே. சில ஆயிரம் தான் செலவழித்திருப்பார்கள்.
இன்று லட்சங்கள் செலவு செய்து இடம்பெறும் சிங்கிரி போன்றதொரு கழக போட்டியை இன்னும் 30 வருடங்கள் செல்ல யாரும் நினைவில் வைத்திருப்பார்களா என்பது சந்தேகமே. முன்பு உதயசூரியன் கடற்கரையில், ரேவடிக் கடற்கரையில், நெற்கொழுவில் செய்தது போன்ற பெயர் சொல்லக் கூடிய போட்டியை லட்சங்கள் செலவு செய்தும் இன்று நடாத்த முடியவில்லை.
ஏராளமான விளையாட்டுப் போட்டிகள்
அதீதமான போட்டிகளுக்கு புலம்பெயர் நிதிகளும் ஒரு காரணம். ‘நாம் நிதி கொடுக்கின்றோம் நாம் தான் முடிவெடுக்க வேண்டும்’ என்று சில புலம்பெயரந்தவர்கள் முனைவதால் சில நேரங்களில் சிக்கல்கள். மறுபுறம் புலம்பெயர்ந்தவர்கள் சிலர் கொடுக்கும் நல்ல நெறிப்படுத்தல்களை ‘கிளப்பை நடாத்துகின்றவர்கள் நாங்கள், எங்களுக்கு யார் சொல்வது’ என்ற மனோபாவதால் ஏற்க மறுக்கின்றார்கள் சிலர். ‘நிதி அனுப்புகின்றார்களே, இவர்கள் முன்னாள் தமது கழக உறுப்பினர்’ என்பதயும் ஏற்றுகொள்ள மறக்கின்றார்கள்.
இதுபோன்ற பல காரணங்களை முன்வைத்துதான் பலர் ‘ஊரில் கழகங்கள்தான் பிரச்சனைகளுக்கு வித்திடுகின்றன, ஆகவே கழகங்களை முதலில் இல்லாமல் செய்யவேண்டும்’ என்கின்றார்கள்.
இந்தக் கூற்றில் உண்மை இல்லாமலும் இல்லை.
ஆனால் கழகங்கள் அற்ற வல்வை என்பது நினைத்துப் பார்க்கப் பட முடியாத வொன்று - குறைந்தது இப்போதைக்காவது.
சிவன் கோயில் போன்ற ஒரு சில தனியார் கோயில்களைத் தவிர ஏனைய கோயில்கள் எல்லாம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கழகங்களால் தான் நிர்வகிக்கப்படுகின்றன.
அதுபோல் வல்வை சனசமூக சேவா நிலையம் போன்ற ஓரிரு சன சமூக நிலையங்கள் தவிர்ந்த ஏனைய சன சமூக நிலையங்கள் எல்லாம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கழகங்களால்தான் நிர்வகிக்கப்படுகின்றன.
முன்பள்ளிகள் கூட கழகங்களினூடாகவே மறைமுகமாக நடைபெற்று வருகின்றன.
பாடசாலை விளையாட்டுப் போட்டிகளின் போது கழகங்களின் நேரடி அல்லது மறைமுக உதவிகள் என்றும் கொடுக்கப்பட்டு வருகின்றன.
பல்வேறு போட்டிகள் நடாத்தப்பட்டு வருகின்றன. இவற்றுள் முதியவர்களும் உள்வாங்கப்படுகின்றார்கள்.
என்றும் இல்லாதவாறு விளையாட்டுப் போட்டிகளில் பெண்கள் குறிப்பிடக் கூடியோர் பங்கு பற்றுமளவுக்கு போட்டிகள் அமைந்து வருகின்றன.
பல சந்தர்ப்பங்கள் வாய்க்காத பலருக்கும் பல சந்தர்ப்பங்களை அள்ளிக் கொடுப்பதாக கழகங்களினால் ஏற்படுத்தப்படும் நிகழ்வுகள் ஏதுவாகிவருகின்றன.
புலம்பெயர் நாடுகளில் இருந்து சேர்க்கப்படும் நிதியின் மிகப் பெரும்பான்மையான பங்கு கழகங்களின் செயற்பட்டுகளின் ஊடாகவே வல்வைக்குக் கிடைத்து வருகின்றது. இல்லை என்றால் புலம் பெயர்ந்து சென்றவர்களிடம் நிதி பெற ஒரு சரியான வழி இல்லாமல் இருந்திருக்கும்.
மரணித்தவர்கள் சிலரையாவது விளையாட்டுக் கழகங்கள் மீட்டுப்பார்க்கின்றன.
இவ்வாறாக ரேவடி விளையாட்டுக் கழகம் முதன் முதலாக வல்வையில் ஆரம்பிக்கப்பட்டு, அதனைத் தொடர்ந்து ஏனைய கழகங்கள் உருவகம் பெற்று, கழகங்கள் இன்றுவரை இங்கு மேற்கொண்டுவரும் பணிகள் ஏராளம், குறைத்து மதிப்பிடக் கூடியவை அல்ல.
சிறந்த ஒரு உதாரணம் - அரச இயந்திரத்தால் ஆக்கப்பட்டிருக்க வேண்டிய ரேவடி கடற்கரைப் பூங்கா. ரேவடிக் கழக உறுப்பினர்களால் முற்று முழுதாக அமைக்கப்பட்டது.
கிராம சேவையாளர் அல்லது போலிஸ் பொறுப்பதிகாரி அல்லது ஊறணி வைத்தியசாலை DMO யார் என்று தெரியாது இருக்கலாம் - இவர்கள் முகங்கள் விழாக்களில் பெரிதாக அடிபடாது போகலாம். ஆனால் விளையாட்டுக் கழகத் தலைவர்கள் பெரிதாகவே வந்து போவார்கள். அந்தளவுக்கு கழகங்களின் தாக்கம் இங்கு மிக அதிகம்.
சமூக வலைத் தளங்களில் கோயில்களுக்கோ, பாடசாலைகளுக்கோ, வாசிக சாலைகளுக்கோ இல்லாத ‘பக்கங்கள்’ கழகங்களுக்கு மட்டும் உண்டு.
காரணம் அந்தளவுக்கு சமூகத்தில் கழகங்கள் ஏற்படுத்தியுள்ள தாக்கம்.
முடிவாக சுருங்கக்கூறின் கழகங்களால் உண்டாகும் ‘சண்டைகள்’ என்பது இரண்டு விதம்.
முதலாவது - (உதைபந்தாட்டப்) போட்டிகளின் போது ஏற்படுபவை. ஏற்றுக்கொள்ளக் கூடியவை என்று கூறமுடியாவிடினும், இவை திட்டமிட்டு இடம்பெறுபவை அல்ல. ஆகவே இவற்றை பாரதூரமான ஒரு விடயமாக கருதமுடியாது.
இரண்டாவது - திட்டமிடப்பட்டு வளர்க்கப்படுபவையாகும். இவை சமுதாயத்தின் வளர்ச்சிக்கு பாங்காகவே அமையும்.
வல்வையைப் பொறுத்தவரை கழகங்கள் என்பது ‘உணவு, உடை, உறையுள் – கழகம்’ என்ற வரிசைக்குள்ளே நீண்ட காலமாக இடம்பிடித்து வரும் ஒன்று.
ஆகவே கழகங்களின் சக்தியை ஒரு நேரான நல் வழிப்பதைக்கு மட்டும் மாற்றியமைக்க முடிந்தால் சாதகங்கள் மேலும் அதிகம்.
‘Generation cap’ கூடிவிட்டது என்கின்றார்கள் பெரியவர்கள். தமது கழகங்களுக்குள் சொன்னால் கேட்கின்றான்கள் இல்லை என்கின்றார்கள், பலர் ஒதுங்கியும் விட்டார்கள். மறுபுறம் கழகங்களுக்கு இடையேயான ஒரு சில பிரச்சனைகள் முற்றுகின்ற புற்றுநோய் வடிவில் உள்ளன. இவற்றுக்கு யார் சிகிச்சையை கொடுக்கப் போகின்றார்கள்.
ஊரில் நிலைமை இவ்வாறு இருக்க, யாழின் இதர பிரதேசங்களில் தற்பொழுது ஏராளமான கழகங்கள். இவற்றுள் பல அண்மைக் காலங்களில் புதிதாகத் தோன்றியவை. இவற்றுள் குறிப்பிடக்கூடிய எண்ணிக்கையான கழகங்கள் - பிரதேச சபை, நகரசபைகளின் எல்லைகள் மற்றும் வாட்டுகள் பிரிக்கப்பட்டதுபோல் தத்தமது சமூகம் சாரந்தவையாகவே அமைந்துள்ளன. அனுகூலங்கள் இல்லை என்று கூறமுடியாவிடினும், யாழ்பாணத்து சாபக்கேடுகளில் ஒன்று இவற்றின் பின்னால் சத்தமின்றி ஒளிந்திருக்கின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Thurailingam (UK)
Posted Date: September 16, 2018 at 14:17
ஆதவன்,
பிரச்சினைகளை நன்கு அலசியுள்ளீர்கள்.
கழகங்கள் தங்கள் நல்ல நோக்கம் (aim), திறமான கொள்கை (Policy), ஒழுக்கக் கட்டுப்பாடு (charter), என்பன போன்றவற்றை பகிரங்கமாக வெளிப்படுத்தி அவற்றை கடைப்பிடிகக முற்படும் போது கோஸ்ரிச் சண்டைகளும் பிரச்சினைகளும் மிகக் குறைந்து விடும். சண்டை சச்சரவுகளுக்கு செலவழிக்கும் நேரம் சக்தி பணம் என்பவற்றை கழகத்தின் வளர்ச்சிக்கு செலவழிக்கும் போது அவற்றின் பெருமையையும் வளர்ச்சியும் வானைத் தொடும் என்பதில் ஜயமில்லை.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.