சடாசிவம் மேஸ்திரியார் – வல்வையில் வள்ளங்கள் கட்டுவதில் பெயர் போன மேஸ்திரிகளில் ஒருவர், பரம்பரை பரம்பரையாக இத்தொழிலை செய்து வந்திருந்தார். சடாசிவம் மேஸ்திரியார் குடும்பத்தினரின் வாடி, வாடி ஒழுங்கையில் ஆதிகோவில் பக்கமாக ராக்கிச்சியம்மன் கோவிலிலிருந்து கடற்கரை வரை நீண்டிருந்தது. முற்பக்கமாக பெரிய வீடு ஒன்று நீங்கலாக இதர பகுதிகளில் வள்ளங்கள் செய்யும் மர வாடி அமைந்திருந்தது. குறித்த இந்த வாடி பல ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டு 90 வரை இயங்கி வந்தது. பல்வேறு தேவைகளுக்குமான வள்ளங்கள் பல்வேறு அளவுகளில் இங்கு வடிவமைக்கப்பட்டன. இத்தகைய வாடி அமைந்திருந்தமையினால் இந்த ஒழுங்கை வாடி ஒழுங்கை என்றும் அழைக்கப்பட்டு வந்தது.
வாடியிலிருந்து சில மீற்றர் தொலைவிலேயே எங்கள் வீடு அமைந்திருந்தமையினால் சிறுவயதில் வாடிக்குள் சென்று பார்க்கும் பல சந்தர்ப்பங்கள் கிடைத்திருந்தது.
வல்வையில் இறுதியாக செய்யப்பட்ட வள்ளம்
2002 சமாதான ஒப்பந்த காலத்தில் ஊர் சென்று போது கமெராவுடன் சென்று பல முக்கிய இடங்களை படமாக்கினேன். Face book, Whatapp இல்லாத அந்த காலத்தில் நண்பர்களுக்கான குருப் மெயிலில் படங்களப் போட்டிருந்தேன். இதற்கு நண்பர்கள் வட்டரத்திளிருந்து வரவேற்பும் கிடைத்திருந்தது. அவ்வாறு அன்று நான் படமாக்கியவைகளில் ஒன்று தான் கீழே காட்டப்பட்டுள்ள மாயமான வள்ளம்.
இந்த வள்ளம் தான் வல்வையில் கட்ட ஆரம்பிக்கப்பட்டு பின்னர் இடையில் கைவிடப்பட்டிருந்த கடைசி வள்ளம். நீளம் சுமார் 60 அடிகளாக இருந்திருக்கலாம். 2002 இல் நான் அப்பகுதிக்குச் சென்ற போது ஆள் அரவம் அற்ற பகுதியில் மேஸ்திரியாரின் வீடு மற்றும் வாடி முற்றாக அழிந்த நிலையில் வெளியில் தன்னந்தனியாக கம்பீரமாக காட்சி கொடுத்துக் கொண்டிருந்தது இந்த வள்ளம்.
ஆண்டுகள் கடந்து யுத்தமும் உக்கிரமடைந்தது. அவ்வப்போது நான் இந்த வள்ளத்தைப் பற்றி எண்ணுவது உண்டு. வல்வையின் வரலாற்றுச் சின்னமாக விளங்கிய இந்த வள்ளத்தை மற்றவர்கள் பார்க்கும் வகையில் நிரந்தரமாக காட்சிப்படுத்த வேண்டும் என்பதாகும்.
காங்கேசந்துறையில் எமது சின்னம்
காங்கேசன்துறையில் நம்மவர்கள் விட்டுசென்ற 1 ஸ்ரீ, 2 ஸ்ரீ பழைய கார்களையும், பழைய மரத்திலான மாடு வண்டிகளையும் தற்பொழுது காங்கேசன்துறை நகரப்பகுதியில் இலங்கை அரச படையினர் அழகாக காட்சிப்படுத்தியுள்ளார்கள்.
யுத்தம் முடிந்த பின்னர் குறித்த வள்ளம் இருந்த இடத்திற்கு சென்றேன். வள்ளத்தையும் காணவில்லை. வாடி இருந்தற்கான தடயங்களும் எதுவும் இல்லை. சடாசிவம் மேஸ்திரியார் வீடு, வாடி இருந்த ஒரு பகுதியில் ஏராளமாக சிறுவீடுகள் கட்டப்பட்டிருந்தது.
வள்ளத்தைக் காணாதது மிகவும் ஏமாற்றமாக இருந்தது. வள்ளத்தை இனங்கண்டால் என் முயற்சியினாலாவது அதை அப்புறப்படுத்தி ஒரு பொது இடத்தில் கொண்டு வந்து காட்சிப்படுத்த வேண்டும் என்ற அவாவில் பலரிடம் வள்ளம் பற்றிக் கேட்டேன். அப்படி ஒன்று இருந்ததா என்றார்கள் சிலர். ஜெனரேசன் கப் தாண்டிய விடயம் போல் தெரிந்தது எனக்கு.
மாயமாகிவிட்டது வள்ளம் – நாம் பேணிப் பாதுகாக்க தவறிய வரலாற்றுச் சான்றுகளில் இதுவும் ஒன்று.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.