Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

ஆதவன் பக்கம்(54) – அந்தக்கால ஊரடங்குச்சட்டம்

பிரசுரிக்கபட்ட திகதி: 20/04/2020 (திங்கட்கிழமை)
காலை 4, 5 மணிக்கு பிறகு ஒரு விதமான அமைதி. 
 
வல்வை அம்மன் கோவிலடியில் அமைந்துள்ள எமது வீட்டுக்கு அருகில் அமைந்துள்ள, மணல் கிணற்றில் கப்பி உருளும்  சத்தம் இல்லை. 
 
காலை 4 மணிக்கு செல்லும் ‘மலை’ பஸ்ஸும், அதனைத் தொடர்ந்து செல்லும் 752 யாழ்பாணம், 763 கீரிமலை பஸ்களின் சத்தம் இல்லை. 
 
வாடி ஒழுங்கையை ஒட்டி அமைந்துள்ள கடற்கரையில் படகுகளின் இயந்திரங்களின் சத்தம் இல்லை.
 
சிவன் கோயில், அம்மன் கோயில் கோபுர மணி ஓசைகள் இல்லை. 
 
நாய்களின் அசாதாரானமான குரைப்புக்கள். 
 
இவற்றை தொடர்ந்து ஆங்கிலப் படங்களில் வருவது போல் டிரக் வண்டிகள், ஆமற் கார்கள், பூட்ஸ் சத்தங்கள் ஊரடங்குச் சட்டத்தை உறுதிப்படுத்திவிடும். 
 
அறையின் ஜன்னலை 1 இஞ்சி திறந்து அதனூடு பிரதான வீதியை தொடர்ந்து உற்று நோக்கினால் ஒலி வடிவில் கேட்டவை ஒளி வடிவுக்கு மாறிவிடும்  
 
இவை போன்று ஏராளமான வழமைக்கு மாறான நிகழ்வுகள் 80 – 90 களில் இடம்பெற்ற ஊரடங்குச்சட்டங்களின் அறிவிக்கப்படாத அறிவிப்புக்களாக அமைந்திருந்தன. 
 
விரல்விட்டு எண்ணக்கூடிய சில நாட்களைத் தவிர ஏனைய எல்லா நாட்களும் உத்தியோகப் பற்றற்ற ஊரடங்குச் சட்டங்கள் தான்.  
 
இலங்கை இராணுவம் மற்றும் இந்திய இராணுவம் என இரண்டு இராணுவ ஊரடங்கைச் சட்டங்களை அனுபவித்த பாக்கியம் உலகில் பலருக்கு இல்லை. 
 
இன்று உலகின் பல பாகங்கள் கொரோனா வைரசால் ‘ஊரடங்குச்சட்டம்’ (Curfew) அல்லது லொக் டவுன் (Lock down) என்று முடங்கிக்கிடக்கின்றன. 
 
83 ஜூலைக்குப் பின்னர், இராணுவ ஊரடங்குச்சட்டம் முதன் முதலாக  எமது பகுதிகளில் மெதுமெதுவாக ஆரம்பித்தது. அவ்வாறு முதலாவதாக அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் எது என்று பிரத்தியேகமாக ஞாபகம் இல்லை. 
 
ஆனாலும் 1985 ஆம் ஆண்டு மே மாதம் 12 ஆம் திகதி வல்வெட்டித்துறை மற்றும் அதனை சூழ்ந்திருந்த வல்வெட்டி, இலக்கணாவத்தை, சமரபாகு, பொலிகண்டி என்ற ஒரு அகன்ற பிரதேசத்தில் இடம்பெற்ற பாரிய சுற்று வளைப்பையிட்டு ஊர் அடங்கியிருந்தது. 
 
இந்த ஊர் அடங்கையும் அதனைத் தொடர்ந்து ஊரணி மடத்தில் இடம்பெற்ற துயரச் சம்பவத்தையும் அன்று இப்பகுதிகளில் குடிகொண்டிருந்த எவருமே தமது வாழ்நாளில் மறக்க மாட்டார்கள்.  
 
அன்று அமுல் படுத்தப்பட்ட அனைத்து ஊரடங்குச் சட்டங்களும் இயக்கத்தை  மையப்படுத்தியே போட்டதாகவே அமைந்திருந்தன. 
 
விடுதலைப் புலிகளின் பின்னணி, அவர்களின் செறிவு, பொது மக்களுடனான அவர்களின் தொடர்பு மற்றும் ஊர்களுக்குள் நடமாட்டம் போன்றவற்றை அடிபடையாகக் கொண்டு ஊரடங்கின் எல்லை மற்றும் காலம் அமைந்திருந்தன.
 
தமிழர் விடுதலைப் போரின் முன்னோடிகளான தமிழீழ விடுதலை இயக்ககத்தின் தலைவர்களான குட்டிமணி, தங்கத்துரை, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் அவரின் சகாக்கள் என பலரின் பூர்வீகம் வல்வெட்டித்துறை என்றமைய, இந்தியாவின் தமிழகத்துக்கான பிரதான தொடர்பு மையமாகவும் வல்வெட்டித்துறை விளங்க, அன்றைய காலகட்டத்தில் இங்கிருந்த மக்கள் போராளிகளுக்கு கொடுத்ததாகக் கூறப்படும் ஆதரவு எனப்போன்ற  பல காரணிகள் – தமிழர் பகுதிகளில் ஏனைய இடங்களை விட, வல்வெட்டிதுறை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில்  அதிக ஊரடங்குச் சட்டங்களுக்கு வித்திட்டிருந்தது. 
 
அப்போது இடம்பெற்ற ஊரடங்குச் சட்டங்கள் சில மணித்தியாங்களிலிருந்து ஒரு சில நாட்கள் மட்டுமே இடம்பெற்றன. அதிக பட்சமாக 87 இல் ‘Operation Liberation’ இராணுவ நடவடிக்கையை முன்னிட்டு அமுல் படுத்தப்பட்ட  ஊரடங்கு சட்டமும், அதன் பின்னர் 90 இல் வல்வையில் 4 நாட்கள் தொடச்சியாக இடம்பெற்ற விமானக் குண்டு வீச்சின் போதான ஊரடங்குச் சட்டமும் நீளமானவை எனக் கூறலாம். 
 
அத்துடன் உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்ட மிகச் சில ஊரடங்குச் சட்டங்களில் இவை இரண்டும் அடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
மாவட்ட ரீதியிலான – வடமராட்சி, தென்மராட்சி என பிரதேச மட்டத்திலான – சில ஊர்கள் என்ற ரீதியிலான – ஒரு ஊர் – அல்லது ஊரின் ஒரு பகுதி - என பல்வேறு சதுர அளவில் ஊரடங்குச் சட்டங்கள் அமைந்திருந்தன. 
 
ஊரடங்குச் சட்டம் பொதுவாக அதிகாலையில்தான் ஆரம்பிக்கும். வானொலியில் அறிவிப்பு, வீதி வழியே வாகனத்தில் அறிவிப்பு, ஹெலியிலிருந்து அறிவிப்பு (துண்டுப் பிரசுரம்) என ஊரடங்கு சட்ட்த்தின் அறிவிப்பும் சில விதம். 
 
85 வரை - புலிகள், இலங்கை இராணுவம் என இரு தரப்பினரதும் கட்டுப்பாடன்றி பிரதேசம் இருந்த நேரம்,
 
85 லிருந்து 87 மே மாதம் ‘Operation liberation’ வரை – இலங்கை இராணுவத்தின் விடுவிக்கப்படாத – அதாவது விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் வடமராட்சி இருந்த நேரம், 
 
பின்னர் 87 ஜூலையிலுருந்து 89 இறுதி வரை - இந்திய அமைதிப் படையினர் இருந்த நேரம், 
 
அதன் பின்னர் 90 லிருந்து 96 வரை யாழ்பாணம் மீண்டும் - இலங்கை இராணுவத்தின் விடுவிக்கப்படாத – அதாவது விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த நேரம், 
 
இறுதியாக 96 இன் பின்னர் - யாழ்பாணம் இலங்கை இராணுவத்தினர் கட்டுப்பாட்டில் இருந்த நேரம், என வெவ்வேறு காலங்களில் ஊரடங்கு சட்டத்தின் தன்மை பெரிதும் மாறுபட்டிருந்தது.
 
மேற்குறித்த காலப்பகுதிகளில், அதிகளவிலான ஊரடங்குச் சட்டமானது இந்திய இராணுவம் நிலைகொண்டிருந்த 87 – 89 காலப்பகுதிகளில் தான் இடம்பெற்றிருந்தது. 
 
வல்வெட்டித்துறையில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டங்களின் போது, ஊரின் ஏனைய இடங்களை ஒப்பிடுமிடத்து, சட்டத்தின் தாக்கம் எமது வீடு அமைந்திருந்த அம்மன் கோவிலடிப் பகுதியில் சற்று அதிகம் என்றே கூறலாம். 
 
நகரசபை, தபால் அலுவலகம் என ஊரில் அமைந்திருந்த இரண்டு அரச அலுவலகங்கள் எமது வீட்டை ஒட்டி அமைந்திருந்ததும்,
 
எமது வீடானது வல்வைச் சந்தி – இராணுவ முகாம் ஆகிய இரண்டுக்கும் இடையில் அமைந்திருந்ததும்,
 
மேலும் வீட்டை ஒட்டி பருத்தித்துறை காங்கேசந்துறை பிரதான வீதி அமைந்திருந்ததும்,
 
அம்மன் மற்றும் சிவன் கோயில்கள் – பெரும் எடுப்பிலான சுற்றி வளைப்பின் போது இராணுவ வாகனங்களை கோயில் வீதிகளில் நிறுத்தக் கூடிய வகையில் விசாலமாக இருந்ததும்,
 
இடப்பக்கதில் விடுதலைப் புலிகள் தலைவர் வீடு.........
 
என்ற பட்டியல் எமது வீட்டுக்கு முன்னால் எப்பொழுதும் ஊரடங்குச் சட்டத்தின் போது அதிக இராணுவ பிரசன்னத்துக்கு இடமளித்திருந்தது. 
 
88 ஆம் ஆண்டு ஜூனியர் நண்பன் ஒருவன் இந்தியன் ஆமி பக்கம் போக, அதனைத் தொடர்ந்து சில தினங்கள் கழிந்து அமுல் படுத்தப்பட்ட உத்தியோகப் பற்றற்ற ஊரடங்குச் சட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட பாரிய சுற்றுவளைப்பில், அனைத்து வல்வெட்டித்துறை மக்களும் அம்மன், சிவன் கோயில் முற்பக்க வீதிகளுக்கே கொண்டுவரப்பட்டார்கள். 
 
இவ்வாறான நேரங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பது என்பது மிகவும் சாதாரான ஒன்றாக அமைந்திருந்தது. நலன்புரிச் சங்ககங்களும் இல்லை, நிவாரணங்களும் இல்லை, ஜி‌எஸ் மாருக்கு தலையிடியும் இருக்கவில்லை. ஏதோ எப்படியோ அனைவரும் சமாளிக்கப் பழகியிருந்தோம். 
 
அவ்வாறு நிவாரணம் என்ற ஒன்றை எதிர்பார்க்காமல், ஒருவாறு சமாளித்து பல படிப்பினைகளையும்  பெற்றுக் கொண்டோம். 
 
அன்று இடம்பெற்ற ஊரடங்குச் சட்டங்கள் எனக்கு பயத்தை ஏற்படுத்தியது என்பதே உண்மை. அதுவும் இரவில். காரணம் 80 களின் முற்பகுதியில் எமது தந்தையாருக்கு ஏற்பட்டதொரு சம்பவம். 
 
‘இதுவரை உள் ஒழுங்கைகளினூடு  ஓடித் திரிந்தவர்கள் இனி பிரதான வீதி வழியே திரியப்போகின்றார்கள்’ என, இன்று யாழில் தளர்த்தப்படும் ஊரடங்குச் சட்டத்தையொட்டி ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். கூற்றை மறுப்பதற்கில்லை.
 
அன்றைய ஊரடங்குச் சட்ட காலங்களில் இவ்வாறு திரியக்கூடிய வாய்ப்புக்கள் இருக்கவில்லை. தெரிந்தும் தெரியாமலும் ஊரடங்கு சட்டங்களின் போது வீட்டுக்கு வெளியே சென்று வேதனையான அனுபவங்களைப் பெற்றவர்கள் பலர். காணாமல் போனவர்களும் உண்டு. (எனது மனைவியின் தந்தையார் உட்பட)
 
அன்றைய ஊரடங்கு சட்டம் நிசப்தம், பயம், சுற்றி வளைப்பு, அரைப்பட்டினி, பம்பல், சூடு, குண்டடி, ஓட்டம், தலையாட்டி, கைது, என பல திசைகளைக் கொண்டமைந்திருந்தது. 
 
பயம் ஒரு புறம் என்றாலும் பம்பல்களுக்கும் குறைவில்லை. முற்பக்க பிரதான வீதி கதவு மூடியிருக்க , வேலி வழியே ஓட்டை போட்டு பக்கத்து வீடுகளுக்கு போய் விளையாடுதல், பிற்பக்கமாக ஆமி வராத ஒழுங்கைகளில் விளையாடுதல், அயல் வீடுகளில் தொலைக் காட்சி பார்த்தல் என்று - இன்று போல் ‘Phone’ இன்றி, ‘Whats up Home work’ இன்றி நாட்கள் கழிந்திருந்தன. 
 
தவளை கூட்டடங்களின் சத்தம், மின்மினிப் பூச்சிகள், பனைகள் சூழ்ந்திருந்த ரம்மியமான சூழலில் தீருவிலில் மனோகரா அன்ரி வீடு (குமரகுரு வாத்தியார் மகள்), அண்ணாச்சி மகாலிங்கம் அப்பா வீடு என , ஊரிக்காட்டில் தோட்ட நிலப்பரப்புக்களுக்கு மத்தியில் அமைந்திருந்த அம்மாச்சி வீடு என - ஒரே ஊரில் வேறு வீடுகளில் தங்க வழிவகுத்தவை இந்த ஊரடங்குச் சட்டங்கள் தான்.
 
மண்டபத்தில் கல்யாணம். கல்யாணம் முடிந்து அரை மணித்தியாலம்  சென்றால் அனைவரும் காலி. தகனக் கிரியைகள் முடியமுன்னரும் அவசரம்.... என ஊரே இன்று மாறிப் போயிருக்க – ஒரே ஊரில் உள்ள  உறவினர் வீட்டில் இன்று ஒரு நாள் தங்குவது என்பதே நடைபெறாத ஒன்று. அன்று ஊரடங்குச் சட்டங்கள் இதற்கு வழி வகுத்திருந்தன. உண்மையான உறவினர்களை அறியவும், அவர்களிடையே நற்பிணைப்பை பேணவும், வித்தியாசமான சூழலை அறியவும் இந்த நாட்கள் உதவியிருந்தன.
 
மனோகரா அன்ரி வீட்டிலும் எம்மைப் போல் நான்கு பிள்ளைகள். பக்கத்திலும் சில குட்டிப் பிள்ளைகள். 
 
எட்டுக்கோடு, கிட்டிப்புல், கிளித்தட்டு, பேணிப்பந்து, கீஸ், கயங்குண்டு, டக்கோ டிக்கோ டொஸ்............................................ என்று  ஒரு கிராமத்தில் விளையாடப்படும் செலவற்ற பெரும்பாலான விளையாட்டுக்களை அன்று விளையாடினோம். 
 
அண்மையில் மனோகரா அன்ரியின் மகள் - ரேணுகா அக்காவை சந்தித்த பொழுது, ‘எப்பொழுது ஊரடங்கு சட்டம் வரும், நீங்கள் எல்லோரும் எப்பொழுது எங்கள் வீட்டுக்கு வருவீர்கள் என்று காத்திருந்த தருணங்கள்’..............என்றும் மறக்க முடியாத ஒன்று எனக் கூறியிருந்தார்.  
 
அன்றைய இவ்வாறான ஊரடங்கின் போது தமிழர் பகுதிகளில் வசித்த ஒவ்வொருவருக்கும் வெவ்வேறான அனுபவங்கள் நிறைய உண்டு. 
 
தலைநகரிலிருந்து தப்பி, தற்பொழுது ஊரில் நிற்கும் எனது பிள்ளைகள் ‘What’s App Home work’ இல் மாட்டிக் கொண்டாலும், தலைநகரில் நினைத்தும் பார்க்க முடியாத விளையாட்டுக்களை விளையாடிக் கொண்டிருக்கின்றார்கள் ( வீட்டுக்குள்ளே).
 
இன்னும் 40 வருடங்கள் பின், மற்றொரு அரோனா வைரஸ் வரும்போது. இன்றைய நாட்களை எனது பிள்ளைகளும் என்னைப்போல் அன்று நினைவில் கொள்வார்கள். 
 

கப்டன் அதிரூபசிங்கம் ஆதவன்

TP – 00 94 777 64 99 55 (Viber, Whats up)

Email - marinerathava@yahoo.com

Face book – athiroobasingam.athavan  

 

 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 
Thivagaren (Sri Lanka) Posted Date: April 29, 2020 at 13:19 
இன்றுதான் இந்தப் பக்கத்தை பார்த்தேன் ஆதவன். அருமையான நடையில் எழுதி அந்த நாட்களை மீண்டும் ஞாபகமூட்டியுள்ளீர்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

PERIYATHAMBY RAJKUMAR (canada) Posted Date: April 21, 2020 at 21:41 
வராலாற்று பதிவு சிறப்பு


எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.


பிந்திய 25 செய்திகள்:
யாழ் தீவுகள் உருவான வரலாறு : ஒரு ஆய்வு ரீதியான கண்ணோட்டம்.
பிரசுரிக்கபட்ட திகதி: 02/01/2025 (வியாழக்கிழமை)
இறுதிக்கிரியை பற்றிய விபரம் - திருமதி சந்திரவதனம் (செல்லக்கிளி) கந்தசாமித்துரை
பிரசுரிக்கபட்ட திகதி: 02/01/2025 (வியாழக்கிழமை)
விளம்பரம் - வீடு வாடகைக்கு தேவை
பிரசுரிக்கபட்ட திகதி: 01/01/2025 (புதன்கிழமை)
மரண அறிவித்தல் - திருமதி சந்திரவதனம் (செல்லக்கிளி) கந்தசாமித்துரை
பிரசுரிக்கபட்ட திகதி: 01/01/2025 (புதன்கிழமை)
சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் விருது
பிரசுரிக்கபட்ட திகதி: 31/12/2024 (செவ்வாய்க்கிழமை)
புகையிரத இருக்கைகள் முன்பதிவு
பிரசுரிக்கபட்ட திகதி: 31/12/2024 (செவ்வாய்க்கிழமை)
ஒரு வாரத்தில் இடம்பெற்ற 5 விமான விபத்துக்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 31/12/2024 (செவ்வாய்க்கிழமை)
வல்வை நகர அபிவிருத்தி திட்டம் பொது மக்கள் பார்வைக்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 30/12/2024 (திங்கட்கிழமை)
மரண அறிவித்தல்-செல்வி மைதிலி முருகவேள்
பிரசுரிக்கபட்ட திகதி: 30/12/2024 (திங்கட்கிழமை)
ஆதவன் பக்கம் (73) – விழிஞ்சம்
பிரசுரிக்கபட்ட திகதி: 29/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)
ஈழத்தின் மூத்த படைப்பாளியும் ஊடகவியளருமான யோகேந்திரநாதன் காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 29/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)
தனியார் பேரூந்து சாரதிக்கு எதிராக நடவடிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 29/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)
திருப்பிறப்பு வாழ்த்துகள். (ஆறுமுகம் ராஜ்குமார் )
பிரசுரிக்கபட்ட திகதி: 25/12/2024 (புதன்கிழமை)
ரேவடி வி.க யாப்பு வெளியிடும் நிகழ்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 25/12/2024 (புதன்கிழமை)
மாவிட்டபுரத்தில் பிரமாண்ட திருக்குறள் வளாகம்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/12/2024 (செவ்வாய்க்கிழமை)
இலங்கையின் வெளிநாட்டு நாணய மதிப்பீடு உயர்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 24/12/2024 (செவ்வாய்க்கிழமை)
பொன்னாலை பருத்தித்துறை வீதியை திருத்தக் கோரி அடையாள உண்ணாவிரதம்
பிரசுரிக்கபட்ட திகதி: 22/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)
மூத்த ஊடகவியலாளர் மதியழகனுக்கு உயர் விருது
பிரசுரிக்கபட்ட திகதி: 22/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)
கொரிய நாட்டின் உதவியுடன் கல்விமாணி பாடநெறி
பிரசுரிக்கபட்ட திகதி: 21/12/2024 (சனிக்கிழமை)
வல்வை வீதியை திருத்தக் கோரி அடையாள உண்ணாவிரதம்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/12/2024 (வெள்ளிக்கிழமை)
பொது வீதியில் கழிவுப்பொருட்களை வீசியமைக்கு தண்டப்பணம் விதிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 19/12/2024 (வியாழக்கிழமை)
முல்லைத்தீவில் அகதிகள் வள்ளம்
பிரசுரிக்கபட்ட திகதி: 19/12/2024 (வியாழக்கிழமை)
யாழில் வெள்ளி, ஞாயிறுகளில் தனியார் வகுப்புக்கள் இல்லை
பிரசுரிக்கபட்ட திகதி: 18/12/2024 (புதன்கிழமை)
2025 செப்டெம்பரில் மாகாணசபைத் தேர்தல்!
பிரசுரிக்கபட்ட திகதி: 16/12/2024 (திங்கட்கிழமை)
பிள்ளையார் பெருங்கதை விரதம் ஆரம்பம்.
பிரசுரிக்கபட்ட திகதி: 16/12/2024 (திங்கட்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Nov - 2064>>>
SunMonTueWedThuFriSat
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30      
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai