88, 89 களில் இந்திய இராணுவம் வடக்கு கிழக்கில் நிலைகொண்டிருந்த காலங்களில், இங்கு வல்வையிலும் பல அசாதாரன் சம்பவங்களுகள் இடம்பெற்றன. இவற்றை முடிந்தவரை கையாளும் வகையில் வடக்கு, கிழக்கின் ஏனைய பிரதேசங்களில் எங்குமே இல்லாதவாறு ஒரு அமைப்பு ஒன்று இங்கு வல்வையில் மிகவும் சிறப்பாகச் செயற்பட்டுக் கொண்டிருந்தது.
‘வல்வை பிரஜைகள் குழு’ என்னும் பெயரில் இயங்கியிருந்த இந்த அமைப்பை, இன்றும் பலருக்கும் நினைவில் உள்ளது. அதன் தலைவராக, கடந்த வல்வை நகரசபைத் தேர்தலில் சுஜேட்சைக் குழுவின் தலைவராகப் போட்டியிட்டு, தற்போது வல்வை நகரசபை உறுப்பினராக உள்ள திரு.ச.செல்வேந்திரா அவர்கள் விளங்கினார்.
வல்வை பிரஜைகள் குழுவில் திரு.செல்வேந்திரா அவர்களுடன் அமரர் நடனசிகாமணி, திரு.ஜோகேந்திரி, அமரர் தில்லையம்பலம் உட்பட்ட ஐவர் பங்காற்றியிருந்தனர்.
அண்மையில் திரு.செல்வேந்திரா அவர்களுடன் கதைத்துக் கொண்டிருந்த பொழுது, 'வல்வை பிரஜைகள் குழு' பற்றி அவர் கூறிய இரண்டு விடயங்கள் என்னை ஆச்சரியப்பட வைத்தது.
முதலாவது விடயம், வல்வைப் பிரஜைகள் குழுவின் முதலாவது தலைவர் பேராசிரியர் சிவத்தம்பி என்பதும்,
இரண்டாவது விடயம், வல்வைப் பிரஜைகள் குழுவின் உருவாக்கத்தில் பிராதான பங்காளியாக இருந்தவர் அமரர் குமாராசாமி அவர்கள் என்பனவேயாகும். (கணக்காய்வளராக சீமெந்து தொழிற்சாலையில் பணிபுரிந்ததால் ‘அக்கௌன்டன்ட் குமாராசாமி’ எனப் பரவலாக இவர் அழைக்கப்பட்டார்).
நான் புரிந்துகொண்டிருந்தது போன்றல்லாமல், 'வல்வைப் பிரஜைகள் குழு' என்பது, இந்திய இராணுவம் இங்கு வருவதற்கு முன்னைய - 85 இன் நடுப்பகுதியில் முதன்முதலில் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப உருவாக்கத்தின் போது பேராசிரியர் சிவத்தம்பி அவர்களுடன், துணைத் தலைவர்களாக அமரர் திருநாவக்கரசு மற்றும் திரு.செல்வேந்திரா ஆகியோரும் இதர உறுப்பினர்களாக அமரர் ஆடியபாதம், திரு.சிவகுருதாசன் போன்றோருடன் அமரர் குமாரசாமியும் இடம்பெற்றுள்ளார்.
அன்றைய காலகட்டத்தில் 'அக்கௌன்டன்ட் குமாராசாமி' அவர்கள் பிரஜைகள் குழுவின் செயற்பாட்டுக்கு வழங்கியிருந்த பணி மிகவும் மகத்தானதாக விளங்கியிருந்தது எனக் குறிப்பிட்ட திரு.செல்வேந்திரா அவர்கள், இவர் சிறந்த ஒரு 'ஓர்கனைசர்' என்றும் இவருடன் தொடர்புபட்ட முக்கிய சம்பவம் ஒன்றையும் கூறினார்.
80 களின் நடுப்பகுதியில் கைது செய்யப்பட்டு பூசாவில் பலர் அடைக்கப்பட்டபோது, சம்பந்தப்பட்டவர்களின் சுமார் 25 குடும்பங்கள் சகிதம், யாழில் அமைந்திருந்த அரச அதிபரின் காரியாலத்துக்குள் திடீரென நுழைந்த அக்கௌன்டன்ட் குமாராசாமி அவர்கள், அரச அதிபரிடம் உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரினார் என்றும், இதன் பிரகாரம் அந்த இடத்திலேயே அரச அதிபர் அரச அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு பலரின் விடுதலைக்கு வழி வகுத்திருந்தார்' என்றார்.
சிறந்த உதைபந்தாட்ட வீரரான அக்கௌன்டன்ட் குமாராசாமி, 50 களின் நடுப்பகுதியில் ஊரிக்காடு நெற்கொழு விளையாட்டு மைதானத்தில் மிகப் பிரமாண்டமாக வல்வை விளையாட்டுக் கழகத்தால் நடாத்தப்பட்டிருந்த உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் பங்கெடுத்துள்ளார். பழையவர்களால் இன்றும் பேசப்படும் குறித்த இந்த போட்டியை அமரர் முருகுப்பிள்ளை (தற்போதைய வல்வை வல்வை விளையாட்டுக் கழகத் தலைவர் பிறேம்குமார் அவர்களின் தந்தையார்) ஒழுங்குபடுத்தி நடாத்தியிருந்தாராம்.
அக்கௌன்டன்ட் குமாராசாமி அவர்களைப் பற்றி நேரடியாக அறியும் ஒரு வாய்ப்பு எனக்கும் கிடைத்திருந்தது.
89 அல்லது 90 ஆம் ஆண்டாக இருக்கும் என்று நினைக்கின்றேன். வல்வை ரேவடிப் பகுதியில் அமைந்துள்ள மீனாட்சி அம்மன் கடற்கரையில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தேன். குறித்த கடற்பகுதியை 'வெள்ளை' என்று கூறுவது வழக்கம். காரணம் அப்பகுதியில், கடலின் அடிப்பகுதி பெரும்பாலும் மண்ணாலும், சிறு பகுதி கற்களாலும் அமைந்திருந்தது.
ஆனாலும் குறித்த பகுதிக்கு என்று சரியான பாதையோ, அல்லது முழு கடற்பகுதியும் மண்ணாலோ அமையப் பெறவில்லை. அத்துடன் திறந்த கடலின் ஒரு பகுதியாகவே குளிக்கும் பகுதி பாதுகாப்பற்று விளங்கியிருந்தது.
நாம் அன்று அங்கே குளித்துக் கொண்டிருந்த சமயம், அதே இடத்தில் அக்கௌன்டன்ட் குமாராசாமி அவர்களும் தனது நண்பர்கள் சிலருடன் குளித்துக் கொண்டிருந்தார்.
அப்பொழுது அவர் ‘ஏன் நாங்கள் இந்தப் பகுதியை முழுவதுமாக கற்களை அகற்றி, ஒரு பாதுகாப்பு வேலி அமைத்து, ஒரு பாதுகாப்பான நீச்சல் பகுதியாக மாற்றக் கூடாது? இளைஞர்கள் முன் வந்தால் இப்பணியை தான் முன்னெடுப்பேன்' என்று எங்களிடம் கூறியிருந்தார்.
பிரச்சனைகள் தொடர்ந்து, பலர் ஊரை விட்டு ஓடிக் கொண்டிருந்த காலம் அது. அந்த முயற்சி கை கூடவில்லை. பின்னர் அவரை நான் ஊரில் பார்த்தாக ஞாபகம் இல்லை.
விளம்பரம் இன்றி - சேவை நோக்குடன் - சமூகத்துக்கு பங்காற்றிய - அக்கௌன்டன்ட் குமாராசாமி போன்ற பலர் பற்றி தற்போதைய இளம் மற்றும் எதிர்கால சந்ததியினருக்குத் தெரியாமலேயே காலம் நகர்ந்து கொண்டுள்ளது. பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் மறைந்தபோது எந்தவொரு இடத்திலும் அவர் 'வல்வை பிரஜைகள் குழு'வின் தலைவராக விளங்கியிருந்தார் என்று குறிப்பிடப் பட்டதாக எனக்குத் தெரியவில்லை. வருத்தப்படக் கூடிய விடயங்கள் இவை.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
k.s.thurai (Denmark)
Posted Date: July 22, 2018 at 16:40
எக்கவுண்டன் குமாரசாமியை எடுத்துக் கொண்டமைக்கு வாழ்த்துக்கள்.. இறப்பதற்கு முன் டென்மார்க் வந்திருந்தார். அத்தருணம் அந்தப் பெருமகனார் என்னைப்பார்க்க வந்தது எனக்கு ஆச்சரியத்தை தந்தது. அதேவேளை அவர் கூறிய கருத்துக்கள் என்னை திகைக்க வைத்தன. வல்வையின் பின்னடைவிற்கான காரணங்களை எல்லாம் கூறினார். காலம் வரும் எழுதுவேன்.. அவர் சொன்னதில் பிழை எதுவுமே இருக்கவில்லை. அத்தனையும் பதிவதற்கான செய்திகள். அத்தருணம் எப்படி வாழ வேண்டும், என்ற கருத்துக்களை எனக்கு சொல்லி சென்றிருந்தார். ஒவ்வொரு காலடி வைக்கும் போதும் அதை நான் கடைப்பிடிக்கிறேன். இறைவன் அனுப்பிய தூதுவராகவே அவரை போற்றுகிறேன். நான் கண்ட வல்வையரில் அவர்தான் என் மனதில் இன்றுவரை எவரெஸ்ட்..!
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.