ஜெயா என்னை விட சில மாதங்கள் இளையவன். வல்வை ரேவடி விளையாட்டுக் கழகம் வழி என்னுடன் நெருக்கம். வல்வெட்டித்துறை மீன் மார்க்கெட் ஒழுங்கையில் 90 களில் TV, Deck வாடகைக்கு விடப்பட்ட வீடுதான் ஜெயாவின் வீடு.
93 ஆம் ஆண்டுக்கு பின்னர் கப்பல் ஏறிய பின் பல வருடங்கள் அவனைச் சந்திக்கவில்லை. சமதான காலத்தில் யாழ்ப்பாணம் சென்றபோது, கழக நண்பர்கள் ஜெயா பற்றிக் கூறினார்கள். வன்னியில் இருப்பதாக கூறினார்கள். ஆனாலும் அப்பொழுதும் சந்திக்க சந்தர்ப்பம் அமையவில்லை.
ஊரவர்களும், தான் சார்ந்த வட்டமும் பேசுமளவுக்கு ஜெயாவும் அந்தக் காலத்தில் இருந்தான்.
8 வருடங்கள் முன்பு திருச்சிக்குச் சென்றபோது, ஒருவாறு ஜெயாவின் தொலைபேசி இலக்கத்தை பெற்றுத் தொடர்பு கொண்டேன். சில நிமிடங்களிலேயே ‘என்ன ஆதவன் அண்ணை’ என்று கூறி நான் தங்கியிருந்த வீட்டுக்கு வந்தான் ஜெயா.
(‘அண்ணை’ என்ற பதம் இன்றும் இவர்கள் மற்றவர்களைப் பார்த்து அழைப்பது தனி அழகு).
பின்னர் அவனுடன் அவனுடைய வீட்டுக்குப் போனபொழுது, நான் கண்டதும் கேட்டதும் - அதுவரை எதிர்பார்த்திருந்திருக்காத ஒன்று. போராட்டத்தில் ஈடுபட்டு கீரோவாக பேசப்பட்ட பலர் இன்று அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் வாழ்கின்றார்கள் - சமூகத்தில் காணப்படும் அடிமட்ட கூலிவேளைகளை செய்து வருகின்றார்கள் – இதைப் பலரும் சமூக வலைத்தளங்களில் போட்டு வருகின்றனர்.
குடும்பத்தைக் கவனிப்பதற்காக ‘தான் பெயிண்ட் அடிக்கும் வேலைக்கு செல்வதாக’ ஜெயா கூறினான். இன்று இந்த விடயம் ஒரு சாதாரண விடயமாக பார்க்கப்பட்டாலும், அன்று இதைக் கேட்டபோது என்னால் ஜீரணிக்க முடியவில்லை.
‘ஊரவர்கள், உறவினர்கள் தன் வீட்டுக்கு வரப்பயப்படுகின்றார்கள், நீங்கள் வந்துள்ளீர்கள்’ என்று சந்தோசமாகக் கூறினான்.
மனைவி, ஒரு மகள் – தனுஜா. அப்போது மகளுக்கு 5 வயது. ‘நீச்சலில் நல்ல ஈடுபாடு காட்டுகின்றாள்’, தொடர்ந்து மகளுக்கு நீச்சல் பழக்க விருப்பம்’ என்றான்.
ஜெயா நீச்சலில் மிகவும் கெட்டிக்காரன். முன்னர் இங்கு நடைபெற்ற பல நீச்சல் போட்டிகளில் முதலாவது இடத்தைப்பெற்றுள்ளான்.
அன்றைய சந்திப்பின் பின்னர், அவ்வப்பொழுது கதைப்பது வழக்கம். அப்படிக் கதைக்கும் பொழுதெல்லாம் ‘மகள் தனுஜா நீச்சலில் முன்னேறிவருவதாக’ கூறுவான்.
இன்று பல வருடங்கள் கழிந்த பின்னர், தனுஜா இந்தியாவில் நூற்றுக்கு மேற்பட்ட போட்டிகளில் கலந்துகொண்டு நூற்றுக்கு மேற்பட்ட பதக்கங்கள் வாங்கியுள்ளாள். தொடர்ந்து ஒரே போட்டி – அதே பதக்கங்கள் – ஒரே மாதிரியான செய்தி...... எந்தளவுக்கு நம்வர்கள் தனுஜாவின் வளர்ச்சியைப் பார்க்கின்றார்கள் என்று சரியாகத் தெரியவில்லை.
ஆனாலும் எனக்குத் தெரிந்தவரை தனுஜாவின் சாதனை என்பது அளப்பெரியது. இங்கும் சரி புலம் பெயர் தேசங்களிலும் சரி தனுஜாவின் லெவெலுக்கு எம்மவர்கள் எவரும் இந்தளவு விளையாட்டில் சாதித்தாக தெரியவில்லை.
ஆரம்பத்தில் போட்டிகளில் கலந்து கொண்டபோது ஏராளமான தடைகள். அகதி – சொல்லாவே வேண்டும். ஒரு கட்டத்தில் மருத்துவ சான்றிதழில் பரிசோதனைகளின் பிரகாரம் 2 வயது கூட என்றார்கள். இப்படி ஏராளம் தடைகள்.
ஜெயா அதிகம் படிக்கவில்லை. ஆனாலும் விடவில்லை. சென்னையில் நீதிமன்றம் வரை சென்று வென்றான். ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுப்பவர்கள் எனக் கூறிக் கொள்பவர்கள் பலரிடம் சட்ட ரீதியாக உதவி கேட்டான். பலர் கை விரித்தார்கள். ஆனாலும் டைரக்டர் கெளதம் போன்ற ஓரிருவர் உதவி செய்தார்கள்.
கோடிப் பேர்கள் உள்ள இந்தியாவில் போட்டியில் கலந்து கொள்வதே சாதனை, அதில் வெல்வது என்பது தனுஜா போன்றோருக்கு இமாலயச் சாதனை தான்.
சுற்றுவட்டத்தில் பலர் எள்ளி நகையாடினார்கள். வேண்டாத வேலை என்றார்கள். சாதித்துக் காட்டி விட்டான் நண்பன்.
சட்டப்படி வென்று திருச்சி மாவட்டம், தமிழக மாநிலம் என்று தாண்டி மகாராஸ்டிரா, டெல்லி, மத்திய பிரதேசம் என்று மகளை போட்டிகளுக்கு அழைத்துச் சென்று வெற்றி பெற்றுள்ளான்.
எவ்வாறு ஜெயாவால் இப்படி முடிகின்றது? மாநிலத்துக்கு மாநிலம் வேறு மொழிகள். ஒரு நாள், இரண்டு நாள் என்ற புகையிரதப் பயணம் – வசதியான பிள்ளைகள் போல் விமானத்தில் செல்ல முடியாத வசதியீனம் –இன்றும் எனக்குள் வியப்பு.
பொதுவாக எதையும் நேர்வழியாகவே சிந்திக்கும் எனக்கு, தனுஜா தொடர்ந்து இந்தியாவில் போட்டிகளில் பங்கு கொள்வது சரியாகத் தென்படவில்லை. காரணம், இந்தியாவில் தனுஜா போட்டிகளில் தற்பொழுது பங்கேற்க முடிந்தாலும், வெளிநாடு ஒன்றில் ஒரு போட்டியில் பங்கேற்க போகும் போது குடியுரிமைச் சிக்கல் கண்டிப்பாக வரும். இதை ஜெயாவிடம் கூறினேன்.
ஆனாலும் மறு பக்கத்தில், தனுஜாவிற்கு இங்கு இலங்கையில் ‘இந்தியாவில் கிடைக்கும் போட்டிகள் போல் பலமான போட்டிகளுக்கான சந்தர்ப்பம் அந்தளவாக இருக்குமா என்பதும் சந்தேகம் தான்’ என்பதையும் கூறினேன்.
எனது ஆதங்கத்தைக் கூறிய போது, ‘விரைவில் தனக்கும் இலங்கை வரத்தான் விருப்பம்’ என்றும், ‘மகளை ரேவடிக் கடற்கரையிலிருந்து கோடியாக்கரைக்கு பாக்கு நீரினை வழி நீந்த வைப்பதே தனது இறுதி நோக்கம்’ என்றான்.
முன்னர் சமூக வலைத் தளங்களில் எம்மூரின் இரண்டு கழங்கள் தனுஜாவின் வெற்றிச் செய்திகளை ‘தமது கழக வீராங்கனையாக’ இரண்டு தரப்பாக படத்தில் கொமடி வருவதுபோல் போட்டார்கள். இதற்குக் காரணம் தாய் ஒரு கழகம், தகப்பன் இன்னொரு கழகம்.
கிட்டு அவர்கள் இறந்த பொழுதும், இங்கு ஊரில் இரண்டு கழகங்கள், “தமது கழக உறுப்பினர்” என்று அஞ்சலியைப் போட்டார்கள்.
(இது போன்ற சிக்கலான முடிச்சுகளுக்கு முடிவு கட்ட ஊருக்கே என்றே ஒரு சிறப்பு யாப்பு எழுத வேண்டும்).
தனுஜாவை தமது கழக வீராங்கனையாக உரிமை கொண்டாடும் குறித்த இரண்டு கழகங்களும் எந்தளவுக்கு ஜெயாவுக்கு பொருளாதார ரீதியில் உதவினார்கள் என்பது வேறு விடயம்.
இதுவரை தனிப்பட்டவர்கள் எவரின் உதவியையும் ஜெயா நாடவில்லை. ஆனாலும் ஒரு சில வருடங்கள் முன்னர் ஒன்றியத்துக்கு உதவி கோரி கடிதம் எழுதியிருந்தான். உதவி கிடைக்கவில்லை.
தற்பொழுது பட்டைக் கிடங்குக்குள்ளும் தண்ணி இல்லை என்றளவுக்கு தனது முழு சக்தியையும் மகளுக்காக செலவழித்துவிட்டான்.
நாளை ஜெயாவின் மகள் இலங்கை ரீதியாக சாதனைப் படைக்கும் பொழுதோ, பாக்கு நீரிணையைக் கடக்கும் பொழுதோ ஆளுக்கு ஆள் ஓடோடி விருது வழங்க முண்டியடிப்பதற்குப் பதிலாக – முடிந்தால் செய்ய வேண்டியது ஒன்று – முடிந்தவரை இப்பொழுது உதவுவதுதான்.
தனுஜாவின் வெற்றிகள் அனைத்தும் ஜெயாவினது வெற்றிகள் தான் - Hats off ஜெயா
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
ThanuMuhun (Sri Lanka)
Posted Date: August 21, 2018 at 16:46
எம்மூர் குழந்தைகள் பல்வேறுபட்ட திறமைகள் உடையவர்களாக பலரும் இருப்பார்கள். வல்வெட்டித்துறைக்கென ஒரு அறக்கட்டளை ஆரம்பிகிகப்பட வேண்டும். இது கல்வி கேள்விகளுக்கான ஊக்குவிப்பு நிதியமாக , வரைமுறைகள் துல்லியமாக வகுக்கப்பட்ட தகைமைகள் நிர்ணயத்துடன் கூடிய யாப்புடன் அமையவேண்டும். நம்போல உலகளாவிய ரீதியில் சிறப்புறப்பணியாற்றும் அனைவரும் இணைந்தால் இதை நிறுவி முகாமை செய்யலாம்......... சிந்திப்போம்......
RAJKUMAR PERIYATHAMBY (canada)
Posted Date: August 21, 2018 at 03:55
சிறப்பான பதிவு உண்மைதான் எம்மவர்கள் தேவையில்லாத பலநிகழ்வுகளுக்கு லட்ச்சகணக்கில் செலவழிப்பார்கள் ஏதற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டுமோ உதவி செய்யவேண்டுமோ அதற்கு பின் நிற்பதோடு உதவி செய்ய நினைப்பவர்களையும் குழப்புவார்கள் 2009 ம் ஆண்டுக்கு பின்னர் புலம்பெயர்ந்த நாடுகளில் எம் ஊரவர்களின் செயல்பாடுகள் தூரநோக்கம்ற செயல்பாடுகளே நிறைந்திருக்கின்றன . நீங்கள் சொல்வதுபோல் இந்தியாவில் ஒருகட்டத்திற்கு மேல் திறமையை வெளிகொன்டற முடியாது இதே வேறை நாடாக இருந்திருந்தால் தனுயாவின் நிலை வேறு ஜெயாண்ணாவின் பொருளாதார நிலையம் உயர்ந்திருக்கும்
கழகங்களுக்கு உரிமை கொண்டாடுபவர்கள் அவரது வெற்றிக்கு திறமைக்கு உறுதுணையாக இருக்கவேண்டும் அல்லது கழகங்களுக்கு உரிமைகொண்டாடுவதை நிறுத்தவேண்டும் .
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.