கண்டன் ஆச்சியும் கண்டன் ஆச்சி இருந்த வீடும் அந்தக்கால தமிழ் நாவல்களிலும் கதைகளிலும் வருவதைப்போல்தான் எனக்குத் தெரிகின்றது.
புதிய தலைமுறையினர் கண்டன் ஆச்சியின் பெயரைக் அதிகம் கேட்டிருக்க வாய்ப்பில்லை. என்னை ஒத்த வயதினருக்குத்தான் கூடியது கண்டன் ஆச்சியைத் தெரியும். மற்றவர்களை விட எனக்கு சற்று அதிகம் தெரியும் எனலாம். காரணம் கண்டன் ஆச்சி வீடு எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்ததும், அவர் எங்கள் ஒரு உறவுக்காரர் என்பதும் தான்.
வெள்ளை நிற இறவக்கை, மெல்லிய பச்சை நிற புடவை, சிறிய உருவம், வயதான தோற்றம், குழி விழுந்த கண்கள். வீட்டுக்குள்ளே சற்று கூனியபடியே நடப்பார், நின்றால் நெஞ்சை நிமிர்த்தி நிற்பார்.
கண்டன் ஆச்சி
அதிகம் கதைக்க மாட்டார். ஊர் வம்பு பேசியதே இல்லை. அதனால் அவருக்கு முன்னாள் மெல்லிய அடக்கம் எங்களுக்கு.
நான் சிறு பராயமாக இருந்தபோது, எனக்குத் தெரிந்த சீனியர் மூதாட்டி கண்டன் ஆச்சி.
கண்டன் ஆச்சி இருந்த வீடு அம்மன் கோயில் வடக்கு வீதியில் தற்பொழுது ஆதிகோவில் கலா மன்றமாக இயங்கும் கட்டடத்துக்குப் பின்னால் இருந்தது. அவரின் வீட்டுக்குப் போவதற்கான பிரதான வாசல் ஆதி கோவில் கலாமன்றத்தையொட்டி இடப்பக்கமாக இருந்தது.
சீமெந்திலான நிலமும் 3, 4 அடி உயர தடுப்புச் சுவர்களும் மீதம் கிடுகுகளால் அமையப்பெற்ற குட்டிவீடாக இருந்தது கண்டன் ஆச்சியின் குடிமனை. பட்டி ஒன்று இருந்தது ஞாபகம். இரவில் மூடப்பட்டிருக்கும் காலையில் அதை அவர் திறப்பது வழக்கம்.
அவரின் வீட்டையண்டி இடப்பக்கம் காணி, அதில் செண்பகங்கள் வந்துபோகக் கூடியளவுக்கு மரங்கள், முற்பக்கம் பழைய மடம், வலப்பக்கம் சிறு வீடு, அந்த வீட்டுக் காணியில் ஒரு குளமும் இருந்ததாம், அதற்குப் பிற்பக்கம் காணி, கண்டன் ஆச்சியின் வீட்டுக்கு நேர் பிற்பக்கமாக சற்றே தள்ளி எனது தற்போதைய வீடு – கண்டன் ஆச்சியின் மனை மிகவும் அமைதியான, ரம்மியமான ஒரு சூழலில் அமைந்திருந்தது.
இப்பொழுது முன்னுக்கு இரண்டு தட்டு மாடிக் கட்டடம், அழகான மோர் மடம், வலப்பக்கம், இடப்பக்கம் வீடுகள் என சேரனின் ஆட்டோகிராப்பில் வருவது இடமே மாறிவிட்டது.
எனது பக்கங்களில் எனக்குத் தெரிந்த, நான் இயல்பாக அறிந்த விடயங்களையே முடிந்தவரை எழுத விரும்புகின்றேன். விபரங்களைக் செயற்கைத் தனமாகத் தேடி எழுதினால், எழுத்துக்களில் எனது எண்ண ஓட்டங்கள் மாற்றம் பெற்று, ஏற்கனவே Whats up, Face book, Viber போன்ற சமூக வலைத் தளங்களில் உள்ள விடயங்களே எனது பக்கங்களில் பகுதியாகத் தோற்றம்பெறலாம் என்ற அச்சம்.
அத்துடன் மற்றவர்களின் கருத்துக்களுக்குள் உள்வாங்கப்படுவதையும் நான் விரும்பவில்லை.
கண்டன் ஆச்சி பெயர் பெறக் காரணம் அவர் செய்து வந்து தொழில். அவர் பெற்ற பெயர் ‘பால்காரக் கண்டன் ஆச்சி”. காலையிலும் மாலையிலும் கம்பர்மலை, கொம்மந்தறை, கெருடாவில் போன்ற பகுதிகளிலில் இருந்த வரும் பால்கார யாவாரிகளிடம் இருந்து மொத்தமாக பால் வாங்கி சில்லறையாக யாவாரம் செய்து வந்தார்.
பாலிருந்து மோர், தயிர், வெண்ணெய் போன்றவை தயாரித்து அவற்றையும் விற்பனை செய்து வந்தார்.
கண்டன் ஆச்சி வீட்டுக்கு நான் அதிகம் போவது வெள்ளிகிழமை மற்றும் திருவிழாக் காலங்களில். காரணம் மரக்கறிச் சாப்பாடு, அதனுடன் கூட்டாக ஆச்சியின் மோர், தயிர் மற்றும் வெண்ணை. ஓய்வான நேரங்களில் முன்னுக்கு விறாந்தையில் இருந்த லீச்சாரில் இருப்பார்.
வாங்குவதும் விற்பதும் ஒன்றும் பிரத்தியேக விடயமல்ல. என்ன இருக்கின்றது இவரைப் பற்றி எழுத என்று தோன்றக் கூடும்.
காரணங்கள் இவைதான்
சுறுசுறுப்பான பெண்மணி. அதிகாலையில் எழுந்து விடுவார். முதல் நாள் பலர் அம்மன் மற்றும் சிவன் கோயில்களுக்கு பால் கொடுக்கச் சொல்லி காசும் கொடுத்து விடுவார்கள். நேரத்திற்கு கோயில்களுக்கு பால் கிடைத்துவிடும்.
ஆச்சி பாவித்த பொருட்கள் பித்தளை, செம்பு அலுமினியம், மற்றும் செம்மண் கொண்டு ஆக்கப்பட்டவை மட்டும் தான். பிளாஸ்டிக் கோப்பைகளை நான் அறவே பார்த்ததில்லை.
தூய்மை – வீடும் சுற்றமும் எப்பொழுதும் சுத்தமாக இருக்கும்.
நீரை சிக்கனமாகப் பாவித்த விதம். யாழ்பாணத்தின் நீர் பற்றி நான் அதிகம் அல்லட்டிக் கொள்வதுண்டு. சிக்கனம் என்று வரும்போது ஆச்சி நீரைப் பாவித்த விதம் தான் ஞாபகத்துக்கு வரும்.
பாற்பொருட்களை சேமித்து வைத்திருந்த விதம், சிறிதும் சிந்தாமல் சிதறாமல் அவற்றை அவர் கையாளும் விதமே ஒரு தனி அழகு.
நான் ஏற்கனேவே கூறியது போன்று வந்து போகின்றவர்களுடன் மற்றவர்கள் போல் வரம்பு மீறி பேசியதை நான் கண்டதேயில்லை.
யாவரத்தில் நாணயமாக இருந்தார். அதனால் தான் பல பத்தாண்டுகள் பால் யாவாரத்தை அவரால் தொடர முடிந்திருந்தது.
வல்வையில் பெயர் சொல்லக் கூடிய, பலராலும் அறியப்பட்ட மறைந்த பெண்மணிகள் பெயர் பட்டியல் ஒன்றை தயாரிக்க முயற்சியுங்கள், அதில் கண்டன் ஆச்சியின் பெயரும் கண்டிப்பாக இருக்கும்.
அப்பொழுது கண்டன் ஆச்சி கோயிலுக்குக் கொண்டுபோய் பால் கொடுத்து போல், எவரும் தற்பொழுது செய்வதில்லை. யாராவது முன்வந்து செய்தால் ஒரு பகுதி தொழில் அவர்களுக்குக் கிடைத்த மாதிரி இருக்கும்.
அன்னபூரணிக் கப்பல், ஆழிக்குமரன் போன்ற செய்திகளை யாராவது ஒருவர் திடீர் என்று ஏவி விட்டால், ஏதோ அன்னபூரணியும் ஆனந்தனும் திரும்பி வந்ததுபோல், ஒரிஜினல் செய்தியை வெவ்வேறு விதமாக உல்டா பண்ணி திருப்பிப்போடும் நாம், கண்டன் ஆச்சி போன்ற பலரை ஆவணப்படுத்தாது ஒரு பெரிய குறை.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.