சிதம்பரக் கல்லூரி - தேசிய மட்ட சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 10/10/2026 (சனிக்கிழமை)
யாழ் வல்வை சிதம்பரக் கல்லூரியின் தேசிய மட்ட சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வு நேற்றய தினம் காலை, கல்லூரி அதிபர் திரு வே. பரமேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வுக்கு வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் திரு க. சத்தியபாலன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார். முன்னதாக கல்லூரி முன்றலில் அமைக்கப்பட்ட பதாகையை கல்லூரி அதிபரும் வலயக் கல்விப் பணிப்பாளர் அவர்களும் திரைநீக்கம் செய்தனர்.
நிகழ்வில் விருந்தினர்களும் பாராட்டுப் பெறும் மாணவர்களும் மாலையிட்டு மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர். கல்லூரி மாணவர்களின் சாதனைகளை கல்லூரி அதிபர், பிரதி அதிபர், வலயக்கல்விப் பணிப்பாளர், பழைய மாணவர் சங்கத் தலைவர் ஆகியோர் பாராட்டிப் பேசினர். தொடர்ந்து மாணவர்களுக்கான கௌரவம் வழங்கப்பட்டது.
கடற்கரைக் கரப்பந்தாட்டத்தில் தேசிய மட்டத்தில் பங்குபற்றி மூன்றாம் இடம்பெற்ற க. அபிஷாந், பீ.மதிவதன்; மாகாண மட்டத்தில் கடற்கரைக் கரப்பந்தாட்டத்தில் 2ஆம் இடம்பெற்று தேசிய மட்டத்தில் பங்குபற்றிய ர. கனிநிலா, ஜெ.திலக்சனா; தேசிய மட்டத்தில் பளுதூக்குதல் போட்டியில் பங்குபற்றிய கா.ஹரிதரன், இ.கிரிசாந்தி ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் உடற்கல்வி ஆசிரியர் திரு கு. கோபிநாத், ஆசிரியர் இ. அபினேஸ், பயிற்சியாளர் க. கவிசனன்; தேசிய மட்ட அணியினருக்கு உறுதுணையாகச் செயற்பட்ட ஆசிரியர் திருமதி சுதர்சினி சிவகுமார் ஆகியோரும் நினைவுச் சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
கல்லூரியின் விளையாட்டுத்துறைப் பொறுப்பாசியர் திரு கு. கோபிநாத் ஏற்புரை நிகழ்த்த; கல்லூரி சிரேஷ்ட ஆசிரியர் சு. குணேஸ்வரன் நன்றியுரை நிகழ்த்தினார். வடமராட்சி வலயக் கல்வி உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் - வளவாளர், அயற்பாடசாலை அதிபர்கள், பழைய மாணவர் சங்கப் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து நிகழ்வைச் சிறப்பித்தனர். மேற்படி நிகழ்வுக்கான அனுசரனையை 2020 இல் உயர்தரப்பிரிவில் கல்வி கற்ற பழைய மாணவர்கள் வழங்கியிருந்தனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.