வடக்கு மாகாணத்தில் நாளுக்கு நாள் இடம்பெறும் தற்கொலை மரணங்களை நினைக்கும் போது இதயம் கருகிப்போகிறது.
ஏன் தான் இப்படி என்ற கேள்வி நீள்கிறதாயினும் அதற்கான பதில் இன்னமும் கிடைக்கவில்லை.
அதிலும் பாடசாலை மாணவர்களிடையே தற்கொலை எண்ணம் எங்ஙனம் ஏற்பட்டது? அவர்கள் இத்துணை தூரம் துணிவதன் பின்னணி என்ன? என்ற விடை தெரியாத கேள்விகளோடு நீள் துயரம் எல்லோரையும் வாட்டுகிறது.
உண்மை. கடந்த சில தினங்களில் பாடசாலை மாணவர்கள் தற்கொலை செய்ததான செய்தியறிந்தவர்கள் உண்மையில் அதிர்ந்து போயினர்.
குடும்ப சூழலில் தாய், தந்தை, சகோதரர்கள், உறவுகள் என்ற பாசப்பிணைப்பு. பாட சாலைச் சமூகத்தில் அதிபர், ஆசிரியர்கள், சக மாணவர்கள் என்ற கூட்டிணைவு.
இதற்கும் அப்பால், நண்பர்கள் குழாம் என ஒருபெரும் சமூகக்கட்டமைப்பு பிள்ளைகளுக்குப் பாதுகாப்பாகவும் உறுதுணையாகவும் இருக்கிறது.
தீர்மானங்களை எடுக்க முடியாத நேரங்களில் இவர்களின் உதவியைப் பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் இருந்தும் இவற்றையெல்லாம் தாண்டி தங்கள் உயிரை மாய்ப்பதுதான் பிரச்சினைக்கான தீர்வு என எண்ணுகிறார்கள் என்றால், அதைவிட்ட கொடுமை வேறு எதுவுமாக இருக்க முடியாது.
உண்மை. சமகாலத் தகவல் தொழில்நுட்ப யுகம், கட்டுப்பாடான - இறுக்கமான குடும்ப சூழலில் வாழ்ந்த எங்கள் பிள்ளைகளின் ஆளுமையில் - தன்னம்பிக்கையில் பாதகமான விளைவை ஏற்படுத்திவிட்டது.
இது தவிர, சிறுவர் உரிமை சாசனத்தில் நம் நாடு கையெழுத்திட, ஆசிரியர் -- மாணவர் என்ற பெறுமதியான - மதிப்பான உறவு நிலை பாழடைந்து போயிற்று. உண்மை. மாணவர்களை ஆசிரியர்கள் தண்டிக்கவும் கண்டிக்கவும் கூடாது என்ற சட்டக்கட்டுப்பாடு என்று நடைமுறைக்கு வந்ததோ,
மாணவனைத் தண்டித்த ஆசிரியர் பொலிஸாரால் கைது. அவருக்கு பதினான்கு நாட்கள் விளக்கமறியல் என்ற செய்தி ஊடகங்களில் என்று முதன்மையுற்றதோ அன்று தொட்ட நாசம், ஆசிரியர்கள் தங்கள் கடமைக்குப் படிப்பித்தல் என்ற முடிவுக்கு வந்தனர்.
மாணவர்களில் ஏற்படுகின்ற மாற்றங்களை ஆசிரியர்கள் அவதானித்தாலும் அதில் தலையிட்டு வில்லங்கத்தை விலைக்கு வாங்குவானேன் என ஆசிரியர்கள் எப்போது நினைத்தார்களோ அன்று தொட்ட கேடு இப்போது எங்கள் அருமந்த மாணவர்களின் வாழ்க்கையில் சுயபரிசோதனை செய்கிறது.
இது ஒருபுறமென்றால், நாளுக்கு நாள் நம் மண்ணில் நடக்கும் விபத்துக்கள் காவு கொள்கின்ற உயிர்கள் கொஞ்சமா என்ன?
என்ன செய்வது எங்கள் அரசியல்வாதிகளுக்கு இவையெல்லாம் பொருட்டல்ல. ஆகையால் அவர்கள் இது பற்றிப் பிரஸ்தாபிக்கப் போவதில்லை.
ஆக, தற்கொலை மரணங்கள் மற்றும் விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகள் தொடர்பில் அரச சார்பற்ற நிறுவனங்கள் களத்தில் இறங்கி அவற்றைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆசிரியர் வலம்புரி பத்திரிகை 14.10.2026
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.