பிரபல நாகசுர வித்வான் எஸ்.ஆர்.டி. வைத்தியநாதன் காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/11/2013 (புதன்கிழமை)
பிரபல நாகசுர வித்வான் எஸ்.ஆர்.தட்சிணாமூர்த்தி பிள்ளை வைத்தியநாதன் நேற்று முன்தினம் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானார். இவருக்கு வயது 84. தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தின் மாயாவரம் பகுதியைப் பிறப்பிடமாகக் கொண்டுள்ள இவர் நாகசுரத்தில் ‘ரக்தி மேளம்’ வாசிப்பதில் புகழ் பெற்றிருந்தார்.
புகழ்பெற்ற நாகசுரக் கலைஞரான செம்பொன்னார்கோயில் தட்சிணாமூர்த்தி பிள்ளையின் மகனான இவர், மாயவரம் ராமையா பிள்ளையிடமும், திருவிழந்தூர் கணேசபிள்ளையிடமும் நாகசுர பயிற்சி பெற்றிருந்தார்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும் சென்னை தமிழ் இசைச் சங்கத்திலும் ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். தருமபுரம், திருவாவடுதுறை, திருப்பனந்தாள் ஆகிய ஆதீனங்களின் ஆஸ்தான வித்வானாக இவர் இருந்துள்ளார்.
வைத்தியநாதன் தில்லி சண்முகானந்த சபாவின் "நாத பிரதி பிம்பம்' (1957) விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது (1981), முத்தமிழ்ப் பேரவையின் "ராஜ ரத்னா' விருது (1987), கிருஷ்ண கான சபாவின் "சங்கீத சூடாமணி' விருது (2006), ரசிக ரஞ்சனி சபாவின் "கலா ரத்னா' விருது (2004), நாத கலாமணி பட்டமும் (2006), மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி விருது (2006), தமிழ் இசைச் சங்கத்தின் இசைப்பேரறிஞர் விருது ஆகிய விருதுகளைப் இவர் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.