வல்வை மகளிர் மகா வித்யாலயத்திக்காக உருவாகும் புதிய மைதானம், பழைய மாணவர் சங்கத்தின் வேண்டுகோள்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/12/2013 (வெள்ளிக்கிழமை)
யாழ்ப்பாண குடா நாட்டின் வட விளிம்பில் பருத்தித்துறை முனையில் இருந்து மேற்கு நோக்கி, ஐந்து மைல் தொலைவில் அமைந்துள்ளதே வல்வெட்டித்துறை என்னும் வளம் மிகு நகர் ஆகும். இவ் வல்வை நகரின் பெண்களுக்கென தனித்துவமான பாடசாலையாக யா/வல்வை மகளிர் மகா வித்தியாலயம் விளங்குகிறது.
இவ் வித்தியாலயத்தில் ஆரம்ப காலம் முதலே பாடசாலைக்கென விளையாட்டு மைதானம் ஒன்று இல்லாமை பாரிய ஒரு குறைபாடாக இருந்து வந்துள்ளது. வல்வை நெடியகாட்டு இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்திலேயே இல்ல மெய்வன்மைப் போட்டிகள் இதுவரை நடாத்தப்பட்டு வந்தன.
குறித்த இம்மைதானம் பாடசாலையில் இருந்து 1.0 km ற்கு அப்பால் அமைந்துள்ளது. இதனால் இம்மைதானத்திற்கு சென்று வருதலில் மாணவர்கள் பாரிய இடர்களை எதிர்நோக்கியிருந்தனர். அத்துடன் தேவைப்படும் பொருட்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்களைக் கொண்டு செல்வது என்பது பாரிய பிரச்சினையாக காணப்பட்டது.
அக்காலப்பகுதியில் நடைபெற்ற அனைத்து விளையாட்டு நிகழ்வுகளும் நெடியகாட்டு இளைஞர்களின் பங்களிப்புடனும்,
நலன்விரும்பிகளின் துணையுடனேயே நடாத்தப்பட்டு வந்துள்ளன.
பாடசாலைக்கு அருகாமையில் ஒரு விளையாட்டு மைதானம் அவசியம் என்பதை பழைய மாணவர் சங்கத்தினர் உணர்ந்து, மைதானத்தைப் பெறுவதற்கு பல முயற்சிகளில் ஈடுபட்டனர். 1992 ஆம் ஆண்டு பழைய மாணவர் சங்கத்தினரால் நாடக விழாவும் காணிவேல் விழாவும் 03 நாட்கள் நடாத்தப்பட்டன. அதன் மூலம் சேகரிக்கப்பட்ட ஒரு தொகை பணத்தில் பாடசாலைக்கு அருகே இருந்த மைதானம் திரு.ஆறுமுகக்கடவுள் (பழனி அப்பா) அவர்களிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்டது.
காணியை வாங்கிய பின் மிகுதிப்பணம் 35000/= ரூபா, 1992 ஆம் ஆண்டு நிலையான வைப்பில் இடப்பட்டது.
அதன் பின்பு அதற்கு அருகே அமைந்த சிறுவர் பூங்கா பகுதியினை நகரசபையிடம் இருந்து உத்தியோக பூர்வமாக பெறுவதற்கு பல வருடங்களாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போதைய நகரசபை முதல்வரும் உறுப்பினர்களும் தமது முதலாவது அமர்விலே, இக்காணியினை வல்வை மகளிர் மகா வித்தியாலய மைதானத்திதிற்கு வழங்க ஏக மனதாக தீர்மானத்தை நிறைவேற்றி, மைதானத்தை பாடசாலைக்கு மனமுவந்து கையளித்தனர்.
அதேவேளை திரு.ஆறுமுகக்கடவுள் (பழனி அப்பா) அவர்கள் இம் மைதானத்தின் கிழக்கு மூலையில் இருந்த தனது காணித்துண்டையும் (மினி இராணுவ முகாம் இருந்த பகுதி) நன்கொடையாக பாடசாலைக்கு வழங்கி தனது பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளார். இப் பங்களிப்பினைச்செய்வதற்கு அவரது குடும்ப உறுப்பினர்கள் பக்கபலமாகச் செயற்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்க விடயமாகும்.
இதன் பின்பு பாடசாலை மைதானத்திற்கு பெயர்ப்பலகை மற்றும் எல்லை சுவர் அமைக்கும் செயற்பாடுகளுக்கு வலயக்கல்வி பணிமனை, வல்வெட்டித்துறை நகரசபை, நெடியகாட்டு இளைஞர்கள், அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் என அனைவரும் பக்கபலமாக இருந்து செயற்பட்டனர்.
மைதானத்தின் எல்லைக் கல்லினை அமைப்பதற்குரிய நிதியானது, 1992 ஆம் ஆண்டு பழைய மாணவர்களினால்
தேசிய சேமிப்பு வங்கியில் நிலையான வைப்பிலிடப்பட்ட ரூபா 35,000 நிதியிலிருந்தே பெறப்பட்டுள்ளது. (கடந்த 21 வருடங்களில் இந்த நிதி, அதன் வட்டியுடன் இன்று 200000/= ஆக வளர்ச்சியடைந்திருந்தது). இதனைக் கொண்டே எல்லை அமைக்கும் பணி பகுதியளவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
மேலும் இம்மைதானத்தை பூரணப்படுத்த 130 கற்தூண்கள், கதவு, மைதானம் ஒழுங்கமைப்பு போன்றவற்றுக்கென
மேலும் ரூபா 200000/= தேவைப்படுகின்றது. இவ் எல்லை அமைக்கும் பணிக்கென, வெளிநாடுகளில் உள்ள வல்வையின்
பல நலன்புரி சங்கங்களுக்கு பல சந்தர்ப்பங்களில் கோரிக்கைகள் விடப்பட்ட போதும் இதுவரை எதுவித சாதகமான பதிலும் கிடைக்கப்பெறவில்லை.
வல்வையின் பெண்கள் கல்வியில் அக்கறை கொண்டவர்கள், இப்பணியினை முழுமை பெறச் செய்ய உதவி புரியுமாறு,
பழைய மாணவர் சங்கம் தனது கோரிக்கையினை இதனூடாக முன்வைக்கின்றது.
எம்மை நேரடியாகத் தொடர்பு கொள்வதற்கு:-
1) 00-94-21 22 64 746 திங்கள் வெள்ளி மு.ப 7.15 பி.ப 2.00 மணி வரை, அல்லது
2) 00-94-778 431 204 பொருளாளர் அல்லது
3) 00-94-776 167 040 செயலாளர்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.