தென்னாபிரிக்காவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதி நெல்சன் மண்டேலா காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/12/2013 (வெள்ளிக்கிழமை)
உலகில் அதிகம் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவரான தென்னாபிரிக்காவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதி நெல்சன் மண்டேலா (Nelson Mandela) நேற்று தென்னாபிரிக்காவின் தலைநகரான ஜோஹனஸ்பெர்க்கில் (Johannesburg) அமைந்துள்ள அவரது இல்லத்தில் காலமானார். இவருக்கு வயது 95.
இவரது மரணச் செய்தியானது தென்னாபிரிக்கா அரசு தொலைக் காட்சியில் தற்போதைய அதிபர் ஜேக்கப் ஸூமா (Jacob Zuma) அவர்களினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாடு தனது பெறுமதிமிக்க மகனை இழந்துள்ளதாக அதிபர் ஜேக்கப் ஸூமா தனது அறிக்கையில் தெரிவிதுள்ளார்.
கடந்த ஒரு சில மாதங்களாக நோய் வாய்ப்பட்டிருந்த திரு.நெல்சன் மண்டேலா மருத்துவமனையில் இருந்து ஆவணி மாதம் வீடு திரும்பியதிலிருந்து, அவரது இல்லத்திலேயே மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நெல்சன் மண்டேலா பற்றி
1918 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் திகதி பிறந்த நெல்சன் மண்டேலா தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் ஆவார். அதற்கு முன்னர் வெள்ளையர்களின் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்தார்.
தொடக்கத்தில் அகிம்சை வழியில் நம்பிக்கை கொண்டிருந்த இவர், பிறகு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் இராணுவப் பிரிவுக்கு தலைமை தாங்கினார். இவர்கள் மரபுசாரா கெரில்லாப் போர்முறைத் தாக்குதலை அப்போதைய நிறவெறி அரசுக்கு எதிராக நடத்தியிருந்தனர்
நெல்சன் மண்டேலாவின் 27 ஆண்டு சிறைவாசம், நிறவெறிக் கொடுமையின் பரவலாக அறியப்பட்ட சாட்சியமாக விளங்குகிறது. 1990 இல், மண்டேலாவின் விடுதலைக்கு பிறகு, அமைதியான முறையில் புதிய தென்னாப்பிரிக்கக் குடியரசு உதயமானது.
அகிம்சைவாதியாக, ஆயுதப் போராட்டத் தலைவனாக, தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்ட குற்றவாளியாக, 27 ஆண்டுகள் சிறையில் வாடி, பின்னர் விடுதலையாகி அந்த நாட்டின் அதிபராகி, அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவராக இவரின் வெற்றிப் பயணம் தொடர்ந்திருந்தது.
நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாளான ஜூலை 18 ஆம் திகதியை சர்வதேச நெல்சன் மண்டேலா தினமாக ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா) அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.