இன்று பங்களாதேஷ் மிர்பூர் மைதானத்தில் பகல் மற்றும் இரவுப் போட்டியாக இலங்கை மற்றும் பாக்கிஸ்தான் அணிகளிடையே இடம்பெற்ற ஆசியக்கிண்ண இறுதிப்போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்களால் பாக்கிஸ்தானை தோற்க்கடித்து கிண்ணத்தை தமதாக்கி கொண்டுள்ளது.
நாணயச்சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய பாக்கிஸ்தான் அணி ஆரம்பத்திலையே மலிங்கவிடம் 3 விக்கெட்களை இழந்து தடுமாறினாலும் பின்னர் வந்த பவத் அலாம்,மிஸ்பாஹ் ஆகியோரின் நிதானமான இணைப்பாட்டமும்,இறுதியில் வந்த உமர் அக்மலின் அதிரடியும் கைகொடுக்க 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 260 ஓட்டங்களை பெற்றது.
அலாம், மிஸ்பாஹ் மற்றும் அக்மல் முறையே 114, 65, 59 ஓட்டங்களை பெற்றனர். மலிங்கா 5 விக்கெட்களை கைப்பற்றினார்.
அடுத்து களமிறங்கிய இலங்கை அணிக்கு திரிமானே மற்றும் குஷால் பெரேரா சிறந்த ஆரம்பத்தினை வழங்கினர். பின்னர் 11 ஆவது ஓவரில் அடுத்தடுத்து பெரேரா,சங்கக்காராவை இழந்தாலும் அடுத்து வந்த மஹேல ஜெயவர்த்தன, திரிமானே இணைப்பாட்டத்தின் மூலம் இலங்கை அணி வெற்றி இலக்கினை அண்மித்தது.
இறுதியில் அணித்தலைவர் மத்தியூஸ் வெற்றி ஓட்டத்தினை 22 பந்துகள் மீதமிருக்கையிலையே பெற்றார். இலங்கை அணி சார்பாக திரிமானே,மஹேல முறையே 101, 75 ஓட்டங்களை பெற்றனர். பாக்கிஸ்தான் அணி சார்பாக மற்றைய பந்துவீச்சாளர்கள் ஓட்டங்களை விட்டு கொடுத்தாலும் அஜ்மல் தனது 10 ஓவர்களில் 2 ஓட்டமற்ற ஓவர்கள் உள்ளடங்கலாக 26 ரன்களுக்கு 3 விக்கெட்களை கைப்பற்றினார்.
போட்டியின் ஆட்டநாயகனாக மலிங்கவும்,போட்டி தொடரின் ஆட்டநாயகனாக திரிமானேயும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.