இறந்தும் இறவாதமனிதர் ஆசிரியர் குமாரசிறீதரன் ஒருகாலத்தின் சிரிப்பொலி..
சிறீதரன் ஆசிரியர் நம்மைவிட்டுப் பிரிந்துவிட்டாரா.. உண்மையா.. இக்கணம் வரை இதயத்தால் அதை நம்ப முடியவில்லை..
அவர் பிரிவுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் என்று கூட அவர் மனைவி பிள்ளைகளிடம் நான் சொல்லவில்லை... என் இதயத்தில் அவருக்கு இறப்பில்லை ஆதலால் யாருக்கும் சொல்லவில்லை.
வாழ்க்கை மைதானத்தில் கண்டிப்பாக சதம் போடுவார் என்று கருதிய வல்வையின் விளையாட்டு வீரர்களில் அவரும் ஒருவர்..
ஒருவர் இவ்வளவு விரைவாக பிரிந்து செல்வதற்கு நாம் சொல்லும் காரணகாரியங்கள் எதுவுமற்ற ஆரோக்கிய வாழ்வு வாழ்ந்த வரை காலம் ஏன் கடிதெனப் பிரித்தது...?
பதில் காணமுடியவில்லை.. வாழ்வின் மர்மமும் அதைத்தழுவி ஓடும் கருஞ்சுழியும் கண்களுக்குத் தெரியாது நீண்டு போகிறது, முடிவே இல்லாத ஒரு படச்சுருள் போல..
அந்தப் படச்சுருளை கடந்த காலம் நோக்கி பின் புறமாக சரசரவென இழுக்கிறேன்... நான் பிரிந்து வந்த அந்தக்கால வல்வை தென்னைமரங்களோடு ஆடுகிறது.. முருங்கை மரங்களும்.. சோளகக்காற்றும்.. வேம்படி வேம்புமாக காட்டுவளவுக்குள் நுழைகிறது..
சுமார் அரைநூற்றாண்டுகளுக்கு முன் ஒருநாளில் அந்த நினைவு குத்திட்டு நிற்கிறது..
எப்படியாவது ஒரு சிறந்த உதைபந்தாட்டவீ ரனாக வந்து விடவேண்டும் என்றவெறியோடு சிறியதோர் பந்தை கால்களில் எடுத்து எனது காட்டுவளவுந ண்பர்களை சுழற்றிக் கொண்டிருந்தேன்......
கொழும்பில் சிலகாலம் வாழ்ந்து அங்கிருக்கும் இளைஞர்களுடன் பந்தடித்து அறிந்த வித்தைகளை காட்டுவளவில் காட்டிக் கொண்டிருந்தேன்..
அதை ஒருவர் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்... சொற்பநேரத்தில் போய்விட்டார்.. மறுநாள் இன்னொருவர் சொன்னார்.. இருந்து பாருங்கள் காட்டுவளவில் இருந்து ஓர் உதைபந்தாட்ட வீரன் வருவான் என்று உன்னைப்பற்றி குமாரசிறீதரன் பெருமையாகச் சொன்னார் என்று..
ஆச்சரியமாக இருந்தது.. அந்த ஒலி தந்த உற்சாகம் காட்டுவளவில் ஒரு உதைபந்தாட்ட அணியை உருவாக்கி விடவேண்டும் என்ற துடிப்பை ஏற்படுத்தியது. பலஆண்டுகள் நண்பர்களுடன் இணைந்து போராடினேன்... முடியவில்லை..
சிறீதரன் மாஸ்டரின் குரல் என்னை விரட்டிக் கொண்டிருந்தது. உதைபந்தாட்டத்தை மாற்றிப் போட்டேன் கரபந்தாட்டமாக, பிற்காலத்தில் இமையாணன் போன்ற கழகங்களையே வெல்லுமளவுக்கு வளர்வதற்கு துணையாக இருந்தது.. அவருடையகுரல்தான்.
இதுதான் குமார சிறீதரன் மாஸ்டரின் சக்தி..
பாராட்டி உயர்த்துவது அவருடைய பண்பு.. இப்படி பல மாணவர்களை சிகரம் தொடவைத்த கலங்கரை விளக்கம்.
காட்டுவளவு என்பது பெயரைப் போன்று காட்டுப்பகுதியா என்ற கேள்வி என்னுள்ளத்தில் இருந்து வந்தது. ஆனால் காட்டில்தான் நல்ல முதிரை, தேக்குமரங்கள் வளரும் என்ற இரகசியத்தை என்னால் அப்போது புரியமுடியவில்லை.
சிலஆண்டுகள் உருண்டுபோயின..
தூக்குக் கூலிக்காக கராம்பு மூடை ஒன்றைத் தூக்கியபடியே தள்ளாடிய படி வண்டி மரத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தேன்..
அப்போது என்னை விட வயதில் மூத்த குமாரசிறீதரன், நவகோடி நாராயணசாமி, அவர்களுடைய நண்பரான பாலசிங்கம், சிவப்பிரகாசம் போன்றவர்கள் உயர்கல்வி கற்பதற்காக மிதி வண்டிகளில் எங்கோ ஓடிக்கொண்டிருந்தார்கள்.
மூட்டையை வண்டிமரத்தில் போட்டுவிட்டு அவர்களை அவதானிக்கத் தொடங்கினேன். படிப்பில் கவனம் செலுத்தினால் வாழ்வில் ஏதாவது நன்மைகிடைக்குமா. எனதுஎண்ணங்களில் ஏதோ ஒரு மாற்றம்..
அவர்களையே அவதானித்துக் கொண்டு எனது பாடசாலை வாழ்வை நகத்திக்கொண்டிருந்தேன். திடீரெனஒருநாள் இவர்கள் எல்லோருக்குமே அரசாங்கத்தில் நல்ல நல்ல வேலைகள் கிடைத்து பல ஊர்களுக்கும் பறக்க ஆரம்பித்தார்கள்.
குமார சிறீதரனுக்கு A/L படித்தவுடனேயே ஆசிரியர் பணி கிடைத்துவிட்டதை நேரடியாகக் கண்டுகொண்டேன். ஊர் அவர்களைப் போற்றியது. எல்லோரும் காட்டுவளவின் கதாநாயகர்களாகி விட்டார்கள்.
ஆம் நாமும் இதேவழியில் தான் நடக்கவேண்டும். அவர்களின் கல்விப் பாதையில் என் கவனத்தை மாற்றினேன்.
காட்டுவளவில் இருந்து வல்வை புளுஸ் போன்ற ஆற்றல் மிக்ககழகங்களை நோக்கி நகர்ந்தார்கள் விளையாட்டிலும் புகழ் பெற்றார்கள்.
நாம் சிறப்படைய வேண்டுமானால் சிறந்த கழகங்களில் விளையாடவேண்டும் என்ற செய்திஅவர்களின் வாழ்வில் இருந்து நல்லதோர் பாடமாகக் கிடைத்தது.
நமக்கான ஒருகழகம் இருக்கலாம் ஆனால் நமதுதிறமைக்கேற்ற இடங்களையும் நாமே தேடிக்கொள்ளவேண்டும். இல்லையேல் இளமைபோய்விடும்.
குமாரசிறீதரன் மாஸ்டர் காட்டுவளவில் இருந்து நமக்கு இப்படித்தான் வழிகாட்டினார் முன்னோடியாக இருந்தார்.
விளையாட்டு, படிப்பு இது மட்டுமா வாழ்க்கை இல்லை அதுவேறும் பலவிடயங்களை உள்ளடக்கியிருக்கிறது..
தன்னுடைய சகோதரிகளை எல்லாம் கரைசேர்க்கும் ஓர் அண்ணனாக அவர் வாழ்ந்த வாழ்வை அருகிருந்து அவதானித்தேன்.
பாசமலர் திரைப்படத்தில் கண்டஒரு பாசமிகு அண்ணனை எங்காவது நிஜத்தில் காணமுடியுமா என்பது எனது ஆசையாக இருந்தது. அந்தஅண்ணன் ஒரு தங்கைக்காக பாடுபட்டான் இவரோ பல தங்கைகளுக்காக பாடுபடும் பாசமலராக மணம் பரப்பிக்கொண்டிருந்தார்.
தனது சகோதரிகளுக்கெல்லாம் மணமக்களை தேடுவதற்கு அவர் பட்டபாடுகளை எனக்கு அவர் என்றுமே சொன்னதில்லை ஆனால் நான் அவதானித்து இதயத்தில் எழுதிக்கொண்டேன்.
எதையும் தாங்குவேன் அன்புக்காகநான் இதையும் தாங்குவேன் தங்கைக்காக என்ற பாடலைக் கேட்கும் போதெல்லாம் அவர் முகமே என் மனக்கண்ணில் வரும்.
கொடுமை கண்டால் எரிமலையாகக் கொதிக்கும் ஒரு கோபம், அதேபோல கல்லுக்குள் கசியும் ஈரம் இரண்டையும் அவரிடம் கண்டுள்ளேன் என்றாவது அவர் தன் சகோதரிகளை திட்டுவார், அடிப்பார் என்று பல ஆண்டுகள் அவதானித்தேன் ஒரு நாள் கூட அதை நான் கேட்டதில்லை நினைத்தால் இன்றும் அதிசயமாக இருக்கிறது.
அவருடைய சகோதரன் குருபரன் போலஅருமையான ஓர் இளைஞனை கதைகளில் மட்டும் படிக்கலாம் நிஜத்தில் காணமுடியாது..
நான் நேதாஜி தலைவராக இருந்த போது அவனே செயலாளராக இருந்தான்.. திடீரெனஒருநாள் அவன் காணாமல் போய்விட்டான்..
அவருக்கு மட்டுமல்ல அவன் எனக்கும் உடன்பிறந்த தம்பியாக இருந்தான்.. அவன் இறந்துவிட்டான் என்கிறார்கள் ஆனால் அப்படியொரு பதிவு என் இதயத்தில் இல்லை என்றோ வருவான் என்று நான் சிறுகதைகள் கூட எழுதியுள்ளேன்..
அவன் வருவதை அம்மா நான் வந்துவிட்டேன் என்ற தலைப்பில் சிறுகதையாகவும் எழுதியுள்ளேன்.
அப்படிப்பட்ட ஓர் உடன்பிறப்பை பிரிந்து இடிந்து துவண்டு போனாலும் அதைவெளிக்காட்டிக்கொள்ளாது இரும்புத்தூணாக நின்றார்.
சென்ற ஆண்டும் நாம் இருவரும் சந்தித்தபோதுஅவன் வருவான் என்றே பேசிக்கொண்டோம்.. எப்படி குருபரன் இறந்துவிட்டான் என்பதை நான் இன்றும் ஏற்கவில்லையோ அதுபோலத்தான் குமாரசிறீதரன் மாஸ்டரையும் மரணித்துவிட்டார் என்று என்னால் ஏற்க முடியவில்லை.
பாடசாலை வாழ்வில் அவரிடம் கணிதத்தைப் படித்த மாணவர்கள் அவரின் அன்பையும், அறிவுரைகளையும் நான் போகும் நாடுகளில் எல்லாம் சொல்வார்கள்.
தாம் இன்று நல்லதோர் நிலையில் இருக்க அவரேகாரணமெனவும் கூறுவார்கள்.
அவர் ஆசிரியர் மட்டுமல்ல அவர் பிரிவால் வல்வையின் புகழ்மிக்க விளையாட்டுவீரர்கள் அமர்ந்த சிம்மாசனம் ஒன்று வெற்றிடமாகிவிட்டதென்றும் அழுகிறார்கள்.
இங்கிலாந்தில் வல்வை புளுஸ் கழகத்தை வளர்க்க அவர்பட்டபாடுகள் அனைத்தையும் நான் அறிவேன் வயதுக்கு மீறிய உழைப்பு, பாடு அத்தனையும் பட்டார்.
எத்தனை சோகம் வந்தாலும் அதே சிரித்த முகம்..
அவர் வெளிநாடு வந்தபோது முதலில் பிரான்சிற்கே வந்துசேர்ந்தார்..
அப்போது ஐரோப்பாவின் இலக்கியத்துறைக்காக இரவு பகலாக எழுதிக்கொண்டிருந்தேன்.. டென்மார்க்கில் இருந்த சிலர் எனது எழுத்துக்களை அழிக்க பிரான்சில் இருந்த வெளியீட்டு நண்பருக்கு பலமான ஆப்பை இறுக்கிவிட்டார்கள்..
அந்த ஆபத்திலிருந்தும் அவரே என்னைக் காப்பாற்றினார்.
பிரான்சில் என்னைப்பற்றி விசாரித்தவர்களுக்கு அவர் கொடுத்த பதில் எனது எதிரிகள் கட்டிய மாளிகையை அத்திவாரத்தோடு இடித்து வீழ்த்தியது.
அப்படியொரு செயலைச் செய்து என்னைக் காப்பாற்றியதை என்றுமேஅவர் எனக்கு சொல்லியதில்லை பிரான்ஸ் போனபோது தான் அதை அறிந்துகொண்டேன்.
அவருக்கு என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்.. எழுதமுடியவில்லை.
தனக்கு இலாபம் இல்லையென்றால் நாற்புறமும் பார்த்துவிட்டு மண்ணள்ளிப் போடுவோர் மலிந்தஉலகில் இப்படியொருமனிதனா.. அவன் இல்லாத இந்தவல்வைஉண்மையில் வல்வையா..?
முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டிலே என்ற சங்கத்தமிழ் பாடல் ஒன்றுண்டு அது முல்லையும் பூத்தியோ வல்வையூர் நாட்டிலேஎன்றுஎன் மனதில் மாறிஒலிக்கிறது.
நான் படிப்பிலோ, அறிவிலோ, விளையாட்டிலோ எதிலுமே வீரன் இல்லை..
ஆனால் இருந்து பாருங்கள் அவன் சாதிப்பான் என்று எனது பத்து வயதில் அவர் சொன்ன வாசகங்களே இன்றும் என்னை வேகமாக ஓட வைத்துக்கொண்டிருக்கிறது..
அவர் சொன்ன இலக்கைப் பிடித்துவிட இந்த நிமிடமும் உறக்கமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறேன்..
நாம் இந்தஉலகத்தில் நாம் பொன்னையோ பொருளையோ கொடுக்கவேண்டியதில்லை இருந்துபாருங்கள் அவன் சாதிப்பான் என்ற ஒரு நம்பிக்கை வார்த்தையை கொடுப்பது அதைவிடப் பெரியவிடயமாகும்.
இப்படி எனக்கு மட்டுமல்ல எத்தனையோ மாணவர்களுக்கு நம்பிக்கைகொடுத்த மாபெரும் வெளிச்சவீடு குமாரசிறீதரன்..
இவரைப்போன்றவர்கள் எப்போதும் பிறப்பதில்லை.. பிறந்துவிட்டால் அவர்கள் எப்போதும் இறப்பதே இல்லை..
மாஸ்டர் கவலைப்படாதீர்கள் சாதனை இலக்கைப் பிடிப்போம் என்றஅவர் மாணவர்கள் குரல்கள் கேட்கின்றன..
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.