வல்வெட்டித்துறை சிதம்பராக்கல்லூரி பழையமாணவர் தாய் சங்கத்தின் இரண்டாவது மாதாந்த நிர்வாகசபைக்கூட்டம், கல்லூரிமண்டபத்தில் 24-03-2013 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு இடம்பெற்றது.
இதனுடன் சம்பந்தப்பட்ட மேலதிக விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
வல்வெட்டித்துறை சிதம்பராக்கல்லூரி பழையமாணவர் ;சங்கத்தின் இரண்டாவது மாதாந்த நிர்வாகசபை கூட்ட அறிக்கை [24-03-2013]
சிதம்பராக்கல்லூரியின் பழையமாணவர் தாய்ச்சங்கத்தின் இரண்டாவது மாதாந்த நிர்வாகசபைக் கூட்டமானது 24-03-2013 மாலை 5 மணியளவில் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது. மேற்படி கூட்டத்தில் கல்லூரியின் அபிவிருத்தி மற்றும் பிறவிடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு மிகமுக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்தவகையில் முதலாவது மாதாந்த நிர்வாகசபைக்கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் மற்றும் மிக அத்தியாவசியமான செலவுகள் தொடர்பாக கொழும்பு பழையமாணவர் சங்கத்திடம் கேட்டுக்கொண்ட சிலவிடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
எமது நிர்வாகசபையினால் தீர்மானம் எடுக்கப்பட்ட ஆசிரியர் கொடுப்பனவு மற்றும் Broadband இற்கான கொடுப்பனவுகள் தொடர்பாக கொழும்பு பழையமாணவர் சங்கத்தினரிடம் E-mail மற்றும் கடிதம் மூலமாகவும் விடுத்த கோரிக்கைகளுக்கு மூன்று வாரங்களாகியும் எந்தவிதமான பதிலும் E-MAIL மூலமாகவோ கடிதமூலமாகவோ கிடைக்கப்பெறவில்லை என்பதனை செயலாளர் முன்வைத்தார்.
இது தொடர்பாக கொழும்பு பழையமாணவர் சங்கத்திடம் தொலைபேசியூடாக தொடர்புகொண்டு கேட்ட பொழுது எந்தவிதமான சாதகமான பதிலும் கிடைக்கப்பெறவில்லை எனவும் செயலாளர் தெரிவித்தார். மேலும் தாய்ச்சங்க நிர்வாகத்தினரை, ஒரு ரவுடித்தனம் மூலம் தெரிவு செய்யப்பட்ட நிர்வாக சபையினர் என்று அவதூறான முறையிலும், ஜனநாயகமற்ற முறையிலும் கருத்து தெரிவிக்கப்பட்டது என செயலாளர் தெரிவித்தார். மிக நீண்டகாலத்திற்கு பின்னர் வல்வெட்டித்துறை சிதம்பரக்கல்லூரியின் பொதுக்கூட்டத்திற்கு மிகப்பெருந்தொகையானோர் சமூகமளித்த நிலையில், அதனூடாக ஜனநாயகமுறையில் தெரிவுசெய்யப்பட்ட தாய்ச்சங்க நிர்வாகத்தினருடன் நேரடியான தொடர்புகளைப்பேணாது இவ்வாறு தெரிவித்திருப்பது கண்டனத்துக்குரியது எனவும் கருத்து தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் கொழும்பு பழையமாணவர் சங்கம் வல்வை தாய்ச்சங்கத்திற்கு தங்களுடைய இந்நிலைப்பாடு தொடர்பில் சரியான விளக்கத்தினை அளிக்கவேண்டும் எனவும் மற்றும் நிதிநிலவரம் தொடர்பான விபரங்கள் அனுப்பப்படவேண்டியதன் அவசியம் பற்றியும் தீர்மானம் எடுக்கப்பட்டது. சிதம்பராக்கல்லூரியின் அத்தியாவசியமான கோரிக்கை தொடர்பில் வல்வை பழையமாணவர் சங்கம் விடுத்த கோரிக்கைகளுக்கு கொழும்பு பழையமாணவர் சங்கம் காட்டிவரும் அசிரத்தை தொடர்பிலும் எழுத்துமூலமான எதுவித பதில்களும் கிடைக்கப்பெறாத நிலையிலும் மிகுந்த சிரமத்தை எதிர்கொள்வதாக விசனம் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறான நிலையில் Broadband இற்கான செலவினை கொழும்பு பழையமாணவர் சங்கம் அனுப்பி வைக்காத நிலையில் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. எனவே உடனடியாக பணம் செலுத்தப்பட வேண்டுமெனவும் எமது இரண்டாவது நிர்வாக சபைக்கூட்டத்திற்கு முன்னராக பதிலினை அனுப்பிவைக்குமாறு E-mail, மற்றும் கடிதம் மூலமாக கேட்கப்பட்டிருந்த போதிலும் எதுவித பதிலும் கிடைக்கப்பெறவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் கடந்த 10-02-2013 ஜனநாயக முறையில் தெரிவுசெய்யப்பட்டு கல்லூரியின் அபிவிருத்தி மற்றும் வளர்ச்சி தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுத்துவரும், முன்னெடுக்கவிருக்கும் எமது தாய்ச்சங்கம் கொழும்பு பழையமாணவர் சங்கத்துடன் பலமுறை தொடர்புகளை ஏற்படுத்தியும் எதுவிதபதில்களும் அளிக்கப்படாதது ஜனநாயகமுறைக்கு எதிரானது என உபதலைவர் திரு. சிவாகிருஸ்ணமூர்த்தி தெரிவித்தார்.
இதன் அடிப்படையில் கொழும்பு பழையமாணவர் சங்கம் எமது தாய்ச்சங்கத்துடன் சரியான தொடர்புகளை பேணவேண்டும் எனவும், புலம்பெயர் மக்கள் மற்றும் பழையமாணவர்களால் வல்வெட்டித்துறை சிதம்பராக்கல்லூரியின் செலவுகளுக்கென கொழும்பு பழையமாணவர் சங்கத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட நிதி பாடசாலையின் செலவுகளுக்கு பயன்படுத்தப்படவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக கல்லூரியின் தாய்ச்சங்கத்திற்கு எந்த முரண்பாடுகளும் இன்றி ஜனநாயக முறையில் ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என்ற தனது கருத்தை முன்வைத்தார்.
மேலும் தாய்ச்சங்கம் கல்லூரியின் அத்தியாவசியமான தேவைகள் தொடர்பில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்ட விடயங்களை முறையாக E-mail, மற்றும் கடிதம் மூலமாக அனுப்பிவைத்தபோது, அது பரீசீலிக்கப்பட வேண்டும் என தொலைபேசியூடாக கருத்துக்கூறப்பட்டதாக செயலாளர் தெரிவித்தார். இதற்கு, பாடசாலையின் தற்போதைய நிலை தொடர்பில் பாடசாலை நிர்வாகத்தால் எமக்கு தரப்பட்ட கோரிக்கைகளை தாய்ச்சங்கத்தினராகிய நாம் பரிசீலித்தே அனுப்பிவைத்துள்ளோம். அதன் அடிப்படையில் கிளைச்சங்கத்தினராகிய கொழும்பு பழையமாணவர்சங்கம் இதனை பரீசீலிப்பதென்பது நியாயமற்றதெனவும் இதற்காக கோரப்பட்ட நிதியினை செலுத்துவது தொடர்பில் உள்ள இடர்பாட்டினை E-Mail அல்லது கடிதமூலமாக எமக்கு அனுப்பிவைக்கப்படவேண்டுமென சபையால் தீர்மானிக்கப்பட்டது. மேலும் கடந்த காலங்களில் வல்வை பழையமாணவர் சங்கம், கொழும்பு பழைய மாணவர் சங்கத்திடமிருந்து அதற்குரிய ஆமோதிப்புக்கள் பெறப்படாமலேயே பலமில்லியன் ருபாய்கள் செலவழிக்கப்பட்டிருப்பதை சபையினர் சுட்டிக்காட்டி தமது கருத்துக்களை தெரிவித்தனர்.
மேலும் கடந்த பத்து வருடங்களாக கொழும்பு பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் கூட்டப்படாமல் இருப்பது ஜனநாயக முறைக்கு முரணாணது எனவும் கருத்து தெரிவிக்கப்பட்து. மற்றும் கல்லூரிச்சமூகத்தால் கேட்கப்படுகின்ற மிக மிக அத்தியாவசியமான செலவுகளுக்கு, கொழும்பு பழையமாணவர் சங்கத்திலிருக்கும் நிலையான வைப்பிலிருந்து வருடாந்தம் பெறப்படும் வட்டி மிகவும் போதுமானது மட்டுமல்ல, அதிகமானது என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டது.
புதிய நிர்வாக சபை தெரிவுசெய்யப்பட்டதிலிருந்து ஆறு வாரங்கள் கடந்த நிலையில் பாடசாலையின் அத்தியாவசிய தேவை தொடர்பில் எம்மால் கோரப்பட்ட எந்த நிதியும் இதுவரை கிடைக்கப்பெறாத நிலையில் பணம் கொடுப்பதில் உள்ள சிரமங்களை பொருளாளர் தெளிவுபடுத்தினார்.
இறுதியாக, கொழும்பு பழையமாணவர் சங்கம் தாய்ச்சங்கத்துடன் ஜனநாயக முறையிலான தொடர்புகளை பேணி கல்லூரியின் வளர்ச்சிப்பாதையில் எம்முடன் இணைந்து பணியாற்ற வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது.
எது எவ்வாறு இருப்பினும் பாடசாலையின் கல்விவளர்ச்சி பாதையில் எமது அடுத்த செயற்பாடுகளை மிக விரைவாக செயற்படுத்த வேண்டுமெனவும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் பாடசாலை மாணவர்களின் வினைத்திறனை அதிகரிக்கும் செயற்பாடுகளான Leader Ship Training Program, Career Guidance Workshop, போன்ற விடயங்களை எதிர்வரும் மாதங்களில் நடத்துவதெனவும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.
இதற்கு செயற்குழு உறுப்பினர் திரு. சு. சிறீஸ்கந்தராசா அவர்கள் கொழும்பு பழையமாணவர் சங்கத்துடனான பிரச்சனைகளை தீர்த்துக்கொண்டு அதன்பிறகு அடுத்த கட்ட செயற்பாடுகள் பற்றி கவனிக்கலாம் என்று கூறினார். அதற்கு செயலாளர், கொழும்பு பழையமாணவர் சங்கத்துடன் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை எனவும், ஆனால் எமது கல்லூரியின் அபிவிருத்தி மற்றும் கல்வித்தரம் என்பவைதான் எமக்கு மிக முக்கியமானது என்றும் ஆகவே இவை தொடர்பான செயற்பாடுகளுக்கு முன்னுரிமை கொடுத்து ஆக்கபூர்வமாக செயற்படுத்துவதற்கு தேவை ஏற்படும் பட்சத்தில் பாடசாலையின் அத்தியாவசிய தேவைகளுக்குரிய நிதியை நாமே திரட்டிக்கொள்வதற்குரிய முயற்சியை எடுக்கவேண்டிவரும் எனவும் எடுத்துக்கூறினார். மேலும் புலம்பெயர் மக்கள் மற்றும் பழையமாணவர்களால் வல்வெட்டித்துறை சிதம்பராக்கல்லூரியின் செலவுகளுக்கென கொழும்பு பழையமாணவர்சங்கத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட நிதி எம்மால் கோரப்படும்போது வழங்க வேண்டிய கடமையும் பொறுப்பும் அவர்களுக்கு உரியது என்றும் இதில் எந்த விதத்திலும் தாய்ச்சங்கத்தினருக்கோ, பாடசாலை நிர்வாகத்தினருக்கோ ஜனநாயக முறையற்றவிதத்தில் இடர்பாடுகளை ஏற்படுத்துவது உகந்ததல்ல எனவும் வலியுறுத்தப்பட்டது. இதன்பின்னர் எமது அடுத்த செயற்பாடுகளை திட்டமிட்டபடி விரைவாக எதிர்வரும் மாதங்களில் நடத்துவதெனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு கூட்டம் இனிதே நிறைவுபெற்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.