செல்வச் சந்நிதி முருகன் ஆலய கொடியேற்ற அவசர திருத்த வேலைகள் நிறைவு செய்ய முடியவில்லை - வல்வை நகரசபைத் தவிசாளர் கவலை தெரிவிப்பு.
பிரசுரிக்கபட்ட திகதி: 03/08/2013 (சனிக்கிழமை)
இலங்கையில் பிரசித்தி பெற்றதும், இலங்கை அரசினால் வர்த்தமானியில் பிரகடனப்படுத்தப்பட்டதுமான தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய உற்சவம் எதிர்வரும் 7 ஆம் திகதி ஆரம்பமாவதையிட்டு மிகவும் அவசரமாக மேற்கொள்ள வேண்டிய சில வேலைகளை நடைமுறைப்படுத்துவதற்கான அனுமதியை வழங்குமாறு வல்வை நகரசபையால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு உள்ளுராட்சி உதவி ஆணையார் திணைக்களத்திலிருந்து, இதுவரை எதுவித அனுமதியும் வழங்கப்படவில்லை எனத் தெரியவருகின்றது.
இது தொடர்பாக வல்வை நகரசபைத் தவிசாளர் திரு.ந.அனந்தராஜ் அவர்கள் தெரிவித்திருப்பதாவது,
செல்வச் சந்நிதி ஆலயத்திற்கு தொண்டைமானாறு சந்தியில் இருந்து ஆற்றங்கரையோரமாகச் செல்லும் பிரதான பாதையினூடாக நீர் வழங்கல் வடிகால் அமைப்புச் சபையினரின் கனரக வாகனங்கள் ஓடித் திரிந்தமையால், அந்தப் பாதையின் பல இடங்கள் மிக மோசமாகப் பழுதடைந்து குண்டும் குழியுமாகக் காணப்படுகின்றன.
நீர் வழங்கல் வடிகால் அமைப்புச் சபையினரால், அவர்களின் செயற்பாடுகள் காரணமாகப் பழுதடைந்த வீதிகளின் திருத்த வேலைகளுக்கென வழங்கப்பட்ட ரூபா 360,000 தொகையில் இருந்து தற்காலிகமாக கிறவல் போட்டுத் திருத்துவதற்கான அனுமதி கேட்டு உள்ளுராட்சி உதவி ஆணையாளருக்கு, வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற செயலாளரினால் கடிதம் அனுப்பப்பட்டதற்கு, இது NELSIP (நெல்சிப்) திட்டத்தின் கீழ் புனரமைக்கப்படவுள்ளதால், இந்த நிதியைப் பயன்படுத்தி பாதை புனரமைப்பைச் செய்வதற்கான அனுமதி வழங்க முடியாது என உள்ளுராட்சி உதவி ஆணையாளரினால் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாதை மூலம் உற்சவ காலங்களில் பல இலட்சக் கணக்கான பக்தர்கள் வந்து செல்வதுடன், நூற்றுக்கணக்கான காவடிகள், தூக்குக் காவடிகள், பாற்செம்பு என்பனவும் நேர்த்திக் கடனுக்காக வந்து செல்கின்றன. இந்த நிலையில் அந்தப்பிரதேச மக்களினதும், பல்லாயிரக் கணக்கான சந்நிதி முருகன் பக்தர்களினதும், அவசர தேவை கருதி நியாயமான முறையில் இக் கோரிக்கை விடுக்கப்பட்டது. நெல்சிப் திட்டத்தின் கீழ் இப்பாதை புனரமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டாலும், நிர்வாக நடைமுறைகள் காரணமாக பல மாதங்கள் செல்லும் நிலையில் அவசர வேலைத்திட்டத்தின் கீழ் தற்காலிகமாக இதனை மேற்கொள்ளப்படுவதற்கான கோரிக்கைக்கான அனுமதி கிடைக்கவில்லை என நகராட்சி மன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதே வேளை வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தற்போது 10 சுகாதார தொழிலாளர்களுக்கான வெற்றிடம் நிலவுவதாலும் 14 தொழிலாளர்கள் மட்டுமே சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையாலும், நகராட்சி மன்றத்தின் பரந்த பிரதேசத்தில், திண்மக் கழிவகற்றல், குடிநீர் விநியோகம் மற்றும் சுகாதார நடவடிக்கைகளை வினைத்திறனுடன் மேற்கொள்ள முடியாதுள்ளது. அதே வேளை செல்வச் சந்நிதி ஆலய உற்சவ காலங்களில் 24 மணி நேரமும் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றமே, கழிவகற்றல், மலசலகூட சுத்திகரிப்பு, குடிநீர் விநியோகம், மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது.
இதற்காக மேலதிகமாகத் தொழிலாளர்கள் பயன்படுத்தவேண்டிய தேவை இருந்த போதும், பற்றாக் குறையாக உள்ள சுகாதாரத் தொழிலாளர்களில் 6 பேரை வெளிவாரியாக உற்சவ காலங்களுக்கான கழிவகற்றல்,மற்றும் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகாகவென தற்காலிகமாக நியமிப்பதற்கான அனுமதி கோரி, செயலாளரினால் ஜூன் மாதம் இரண்டு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்ட போதும் அவற்றிற்கான பதில் கடிதம் இதுவரை உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தினால் அனுப்பி வைக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனால் செல்வச் சந்நிதி ஆலயத்தில் மக்களுக்கான நலன்புரி சேவைகளை முழுமையாகவும், திருப்திகரமாகவும் வழங்க முடியாதிருப்பதாகவும் நகரசபைத் தவிசாளர் திரு.ந.அனந்தராஜ் அவர்கள் கவலை தெரிவித்துள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.