தொலைபேசியில் யாரோ அழைக்கின்றார்கள் அதற்கு ‘தீருவில் தூபியடிக்கு வாருங்கள்’ என அழைக்கின்றார் வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் அவர்கள்.
கடந்த 5 ஆம் திகதி தீருவில் தூபி ஒன்று அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு வைபவத்தின் போது மேற்கண்ட உரையாடல் இடம்பெற்றது. அன்றைய நிகழ்வின் இந்த உரையாடல் உட்பட்ட சம்பவங்கள் அடங்கிய குறித்த காணொளிகள் சமூகவலையதளத்தில் பரவியிருந்தது.
வல்வையின் தீருவில் பகுதியில் - முருகையன் கோயிலுக்கும் கொலனிக்கும் இடைப்பட்ட பகுதியை - எவராவது அழைக்கும் பொழுது ‘தூபியடி’ என்னும் ஒரே ஒரு சொல்லில் தான் இன்றும் அழைத்து வருகின்றார்கள்.
மேற்குறித்த இரண்டு விடயங்களும் தீருவில் வெளியில் அமைந்திருந்த தூபி பற்றி விளக்க போதுமானவை.
இவ்வாறு இன்றும் இயல்பாகவே விளங்கிவரும் தூபிக்கு நிகராக இன்னுமொரு தூபி அமைக்க ஒரு சாரார் பிரேரணை சமர்ப்பித்து ஒரு வாக்கினால் வெற்றிபெற்று இன்னொமொரு தூபி அமைப்போம் என்று கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கின்றார்கள். அதுவும் தீருவில் வெளியில் தான் என்று. இதுதான் ஏன் என்று புரியவில்லை.
கடந்த 5 ஆம் திகதி தூபிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் எதிர்ப்பைத் தெரிவித்தவர்கள், தீருவிலில் ‘குமரப்பா, புலேந்திரன் தூபி தவிர்ந்த வேறு எந்தவொரு தூபியும் அமைக்கப்படக் கூடாது’ என்ற தமது நிலைப்பாட்டை வெளியிட்டிருந்தனர்.
எதிர்ப்பைத் தெரிவிக்க அன்று கூடியிருந்தவர்கள் சிலராக இருந்த போதிலும் - பொதுவாக தீருவிலில் இன்னொரு தூபி அமைக்க முற்படுவதை பலரும் விரும்பவில்லை என்பது உண்மை.
ஏற்கனவே சர்ச்சைக்குள் மாட்டியிருந்த தீருவிலில் தூபியே இப்பொழுது தேவையில்லை என்கிறார்கள் இன்னொரு சாரார்.
*அரசியல்வாதிகள் தூபி அமைக்கக் கூடாது.
*பொது மக்கள் panaபணத்தில் தான் தூபி அமைக்கப்பட வேண்டும்
*அன்று போராட்ட காலங்களில் இங்கு இல்லாதவர்கள் இப்பொழுது ஏன் தூபி அமைக்க அவசரமாக முனைய வேண்டும்.
.................... போன்றவாறான கருத்துக்களை எதிர்ப்பாளர்கள் அன்றைய அடிக்கல் நிகழ்வில் போது தெரிவித்திருந்தார்கள். காணொளிகளும் இதற்கு சாட்சி.
இதைவிட,
•உள்நாட்டு யுத்தம் முடிந்து 9 வருடங்கள் கடந்து, தீடிரென ஏன் இன்னொரு தூபி ?
•அவ்வாறு இன்னொரு தூபி அமைக்கப்பட வேண்டும் என்றாலும் அதற்கு பொருத்தமான - தகுந்த இடங்கள் வேறு பல உண்டு.
•மாகாண சபை இயற்கை மரணம் அடையும் நேரத்தில் அரசியல் ஆக்கப்படுகிறது தூபி விடயம்.
.................... போன்றவாறான தமது கருத்துக்களை பலரும் வெளியிட்டு வருகின்றனர், சமூக வலைத் தளங்களில். பலர் கேவலமான வார்த்தைகளால் பதிவிட்டு இன்னொரு தூபி அமைக்க முற்படுபவர்களுக்கு எதிராக தமது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.
இயங்க ஆரம்பித்து சில மாதங்களே கடந்த வல்வை நகரசபையில், தூபி விடயத்தால் தொடர்ச்சியான குழப்பங்கள். ஒரு அமர்வு கூட அமைதியாக நிறைவடையவில்லை. பத்திரிகைகளிலும் இது பற்றிய செய்தி பிரசுரமாகியுள்ளது.
‘நகரசபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணை ஒன்றின் முடிவுகளை செயற்படுத்த முனைவதை போலீசார் தடுக்க முடியாது’ என நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தூபிகள் அமைக்க முற்படுபவர்களுக்கு வெற்றி போன்ற ஒரு தோற்றத்தைக் கொடுத்தாலும், இதே தீர்ப்புஎதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தலாம்.
அதாவது, தற்பொழுது தமிழர் அரசியல் கூட்டு என்பது கிட்டத்தட்ட சிதறுண்டுள்ள நிலையில், எதிர்காலத்தில் வல்வை நகரசபைக்கு வெவ்வேறு கட்சிகள், உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படக்கூடும். அவ்வாறு அமையும் உறுப்பினர்களின் பெரும்பான்மையைப் பொறுத்து பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டு (தீருவில் தூபி சம்பந்தமாக) பின்வரும் முடிவுகள் கூட எடுக்கப்படலாம்.
* உயிர்நீத்த விடுதலைப் புலிகள் உறுப்பினர்களுக்கு என்றொரு தூபி
* உயிர் நீத்த ஈ.பி.டி.பி உறுப்பினர்களுக்கு என்றொரு தூபி
* உயிர் நீத்த ஈ.பி.ஆர்.ல்.ப் உறுப்பினர்களுக்கு என்றொரு தூபி
* உயிர் நீத்த ஏனையவர்களுக்கு.......... என்றொரு தூபி
* முன்னாள் நகரசபை தலைவர்களுக்கும் என்றொரு தூபி .....
..................... என்று தூபிகளால் தீருவில் வெளி நிறையலாம்.
மேற்கண்டவாறு பிரேரணைகள் முன்வைக்கப்பட்டு அவை ஏற்றுக் கொள்ளப்பட்டு தூபிகள் அமைக்கப்படுமாயின் - பொதுமக்கள் எதுவித எதிர்ப்பினையும் தெரிவிக்கமுடியாது. அவ்வாறு செய்வது என்பது, அண்மையில் நீதிமன்ற தெரிவித்துள்ள தீர்ப்பின் படி ‘நீதிமன்ற கட்டளையை அவமதிக்கும்’ (Contempt of court order) ஒரு செயலாக அமையும்.
வாக்குகளுக்கு வீடு வீடாக சென்ற உறுப்பினர்கள், ஊரின் ஒரு பிரதான விடயம் சம்பந்தமாக பகிரங்கமாக கலந்துரையாடி, பொதுமக்கள் விருப்பு வெறுப்புக்களுக்குக்கேற்ப முடிவுகளை எடுக்காதது – செயற்படாதது வருத்தத்திற்குரியது. ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதல்ல.
திரு.பொதுஜனம் அவர்கள் இன்றி அரசியல் இல்லை என்பதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்..
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
RAJKUMAR PERIYATHAMBY (canada)
Posted Date: October 18, 2018 at 20:10
உண்மையான நிதர்சனமான பதிவு .
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.