இன்றைய நாளில் - 1974 தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/01/2024 (புதன்கிழமை)
அனைத்துலக தமிழாராச்சி மன்றம் பாரீசில் எடுத்திருந்த மூன்றாவது மாநாட்டிலே, நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு (Fourth international conference seminar of Tamil studies) ஈழத் திருநாட்டிலே நடைபெறவேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.
அந்தத் தீர்மானத்திற்கு அமைய நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு 1974 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3 ஆம் திகதியிலிருந்து ஜனவரி 9 ஆம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து இன்றைய நாளான ஜனவரி 10 ஆம் திகதி மாநாட்டுக்கு வருகை தந்திருந்த அறிஞர்கள் கெளரவிப்பு மற்றும் விருது வழங்கல் என்பன யாழ் திறந்த வெளி அரங்கில் நடாத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனாலும் குறித்த நிகழ்வைத் தடுக்கும் வண்ணம் அப்போது மேயராக இருந்த சிறிமாவின் ஆதரவாளர் அல்பிரட் துரையப்பா யாழ் திறந்த வெளியரங்களில் நிகழ்வுகளை நடத்தவும் அனுமதி தரமறுக்க குறித்த திறந்த வெளி அரங்கம் மூடப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
இதனால் குறித்த நிகழ்வுகள் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் ஆரம்பமாகின. பல்லாயிரக் கணக்கில் மக்கள் கூடியிருந்ததால் வீரசிங்கம் மண்டபம் மக்கள் கூட்டத்தால் நிரம்ப, ஏனைய பொதுமக்கள் வீரசிங்க மண்டபத்திற்கு முன்னாலும், யாழ் முற்றவெளியிலும் தங்கியிருந்தனர்.
இதன்போது இலங்கை காவல் துறையினருக்கும் பொது மக்களுக்கும் இடையே ஏற்பட்ட முறுகலைத் தொடர்ந்து ஏற்பட்ட அசம்பாவிதத்தால், மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் பதினொரு பேர் இலங்கை காவல்துறையினரின் துப்பாக்கிச்சூடு உட்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் ஏற்படுத்திய குழப்ப நிலையினால் மரணம் அடைந்தனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டினால் மின்கம்பிகள் அறுந்து மக்கள் திரண்டிருந்த இடத்தில் விழுந்தமை, ஆயிரக்கணக்கில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எனத் திரண்டிருந்த மக்கள் மத்தியில் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியமை, இரவு நேரத்தில் ஏற்பட்ட இக்குழப்பத்தினால் நிகழ்ந்த வாகன விபத்துகள் போன்றவை இந்த மரணங்களுக்குக் காரணமாயின எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த இறப்புகள் மற்றும் சம்பவமே பின்னர் தீவிரமாக வெளிப்பட்ட தமிழ்த் தேசியவாத போக்குக்கு முக்கிய புள்ளியாக விளங்கியிருந்தது எனவும் பரவலாகக் கருத்துத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
யாழ் முற்றவெளிக்கு அருகில் பலியானவர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த நினைவாலயம்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.