‘என்ன சுந்தரம் உம்மை நீண்ட நாட்களாக இந்தப் பக்கம் காணவில்லை’ என எனது தந்தையார் கேட்டுள்ளார். காலையில் கோப்பாயில் இருந்து பஸ் பிடித்துக் கொண்டு தந்தையாரைப் பார்க்க வீடு வந்துள்ளார் சுந்தரம் ஐயா. வீட்டில் இரண்டு பக்கமும் பாதி பிளந்த தென்னோலைகள் கட்டப்பட்டிருந்தது.
என் மனைவியிடம் ‘இன்று அதிகாலை தான் கனவு கண்டதாகவும், கனவில் என்ன சுந்தரம் உம்மை நீண்ட நாட்களாக இந்தப் பக்கம் காணவில்லை’ என தந்தையார் கேட்டதாயும், அதனால் ஐயாவை ஒரு முறை வந்து பார்த்துவிட்டுப் போவோம்’ என்று வந்ததாகக் கூறினாராம் சுந்தரம் ஐயா.
சுந்தரம் ஐயா இவ்வாறு கூறியதை கேட்டதும் தனக்குண்டான வியப்பை எனக்கு மனைவி கூறியதுபொழுது எனக்கும் வியப்பாக இருந்தது. ஏனெனில் எம்மைத் தவிர எமது சுற்றத்தினர் எவரும் சுந்தரம் ஐயாவிடம் தொடர்பில் இல்லை தந்தையார் இறந்த சம்பவம் பற்றிக் கூற.
சுந்தரம் ஐயாவிடம் ‘மாமா நேற்று இறந்து விட்டார்’ என மனைவி கூறியுள்ளார். மிகவும் உணர்ச்சி பூர்வமான மனிதர் ஆடிப்போய் விட்டாராம்.
உடனடியாக யாழ் நகரில் பார்லர் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த தந்தையாரின் உடலைச் சென்று பார்வையியிட்டார் சுந்தரம் ஐயா.
சுந்தரம் ஐயா – சாயலில் எமது தந்தையாரை ஒத்த சற்று சிறிய உருவம். நாணயமான மனிதர், புறம் பேசாதவர். மிகவும் அன்பான பண்பான மனிதர்.
15 வருடங்கள் முன்பு கார் வாங்கியிருந்த போது, இன்னுமொரு சுற்றத்தாரால் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு கார் திருத்துனர் தான் இவர்.
மிகவும் வசதியான குடும்ப பின்னணியை முன்னர் கொண்டிருந்தவர். யாழ் ஆனைபந்தியில் உள்ள பல வீடுகள் மற்றும் நிலங்கள் இவரின் குடும்ப்பத்தினைச் சார்ந்தவையாக முன்னர் இருந்தது.
கொழும்பில் வாகனங்கள் திருத்தும் செட்டை சுமார் நாற்பது வருடங்களுக்கு மேலாக நடாத்தியிருந்தார், பெரிய அளவில் இன்றி.
சிறந்த ஒரு மெக்கானிக், ஆனால் யாவாரம் தெரியாத ஒரு அப்பாவி – என்றுதான் இவரைத் தெரிந்த எல்லோரும் கூறுவார்கள். எனக்கும் அப்படித்தான் தெரிந்தது. வாகனத்தை திருத்திய பின் எவ்வளவு பணத்தை வாங்க வேண்டும் என்பதில் மிகவும் சங்கடப்படும் சுபாவம் கொண்டவர்.
வீதியில், வீட்டில் காரில் எதுவும் பிழை என்றால் உடனடியாக வந்து விடுவார்.
பல வருடங்கள் முன்பு, யாழ் தீவகத்தைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் ஒருவரின் அதிக விலையுடைய சொகுசு ஜீப் ஒன்றின் இயந்திரத்தில் பிழை என்று கொம்பனிக்காரர் ‘ஜீப்பை கொண்டம்ன் பண்ண வேண்டியது தான்’ என்று கையை விரித்து விட்டார்கள்.
யாரோ சுந்தரம் ஐயா பற்றி கூறி 'அவரிடம் ஒரு முறை போய்ப் பாருங்கள்' எனக் கூறியுள்ளார்கள்.
சில ஆயிரம் மட்டும் செலவு செய்து வாகனத்தை திருத்தியுள்ளார் சுந்தரம் ஐயா. நம்ப முடியாத வர்த்தகர் அதன் பின்னர் மே ஃபீல்ட் ரோட்டில் இருந்த தனது பெரிய வீட்டின் இன்னொரு பகுதியில் சுந்தரம் ஐயாவையும் அவர் மனைவியையும் தங்க வைத்திருந்தார்.
குறித்த வர்த்தகர் பின்னர் ஒரு நாளில் கொட்டஹேனாவில் சுடப்பட்டு இறந்தார். விபரம் அறிந்தவுடன் வர்த்தகரின் மகள் முதலில் அழைத்தது சுந்தரம் ஐயாவைத்தான்.
கப்பல்களில் சில வேளைகளில் சில பிரச்சனைகளை கையாள்வது மிகவும் சவாலான ஒன்றாக பலருக்கும் அமைந்து விடுகின்றது.
சுமார் 10 வருடங்கள் முன்பு, விதி விலக்கல்லாமல் நானும் இது போன்றதொரு பிரச்சணையயை சந்தித்தேன்.
அந்தச் சமயத்தில் எனக்கு தொலைபேசி அழைப்பை எடுத்த எனது மனைவி, ‘சுந்தரம் ஐயா நேற்று கதைத்தவர் என்றும் தம்பி எங்கேயுள்ளார் என்றும், தம்பிக்கு ஒரு பிரச்சனையும் இல்லைத்தானே’ என்று திரும்பத் திரும்ப கேட்டார்’ என்று கூறினார்.
பின்னர் நான் கப்பலால் இறங்கியை பின்னர், சுந்தரம் ஐயாவைச் சந்தித்த பொழுது ‘கப்பலில் ஏதாவது பிரச்சனை இருந்தததா’ எனக் கேட்டார். இன்று நினைத்தாலும் வியப்படைவேன்.
ஒரு முறை தனியாக கொழும்பிலிருந்து ஊர் செல்ல புறப்பட ஆயுத்தமான போது, 'ஒரு போதும் நீண்ட பயணத்தில் தனியாகப் போகாதீர்' எனக்கூறி தானும் என்கூட வந்து திரும்பினார். அவ்வாறு சென்று வந்த போது நெடுச்சாலைகளில் எவ்வாறு பாதுகாப்பாக வாகனத்தைச் செலுத்தவேண்டும் என ஒவ்வொன்றாக கூறிக்கொண்டு வந்ததுடன் 50, 60 வருடங்கள் முன்பு இருந்த கொழும்பு யாழ் வீதியின் வேறுபாடுகளையும் கூறிக்கொண்டு வந்தார்.
முன்னர் மாளிக்காவத்தையிலும் பின்னர் மோதரையிலும் பட்டறை வைத்திருந்தார். இரண்டு சந்தர்ப்பத்திலும் பட்டறைக்கு கட்டணம் ஏதுமின்றியே நிலத்தின் சொந்தக் காரர்கள் நிலத்தை சுந்தரம் ஐயாவிற்கு வழங்கியிருந்தார்கள்.
மோதரையில் இறுதியாக பட்டறை வைத்திருந்த பொழுது கள்வர்கள் பட்டறையில் இருந்த முக்கிய பொருட்களை களவு செய்து விட்டார்கள். நிலச்சொந்தக்காரரான சிங்களவர் உட்பட்ட இவரைத் தெரிந்த அனைவருமே மிகவும் நொந்து போனார்கள், 'இந்த மனுசனுக்கா இப்படி ஒரு சம்பவம் நிகழ வேண்டும்' என்று.
வயது, கூட வேலை பார்த்தவர்கள் ஓய்வு, களவில் பொருட்களை கொடுத்தது, கொழும்பில் செலவு என்ற காரணங்களால் மீண்டும் யாழ்ப்பாணம் சென்று விட்டார் சுந்தரம் ஐயா.
ஆணைப்பந்தி சந்தியில் உள்ள தமது பிறந்த வீட்டில் (பெயருக்கு) ஒரு பட்டறை மற்றும் பழைய கார் உதிரிப் பாகங்கள் விற்பனைக் கூடம் ஒன்றையும் போட்டுள்ளார்.
'தம்பி கொழும்பில் காருக்கு ஏதும் பார்ட்ஸ் மாற்றினால் பழசை முடிந்தால் கொண்டு வந்து தாரும்' என ஒரு முறை கூறினார். காசு என்று எதுவும் அவராக என்னிடம் இதுவரை கேட்டதில்லை.
விடுமுறையில் ஊர் செல்லும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒரு முறையாவது அவரைச் சென்று பார்ப்பேன். நலம் விசாரிப்பார். அருந்த ஏதாவது தராமல் அனுப்பமாட்டார்.
அழைப்பிதழ்களில் நிகழ்வுகளுக்கு அழைக்கும் பொழுது உற்றார், உறவினர், நண்பர்கள் என்னும் ஒழுங்கில் தான் அழைப்பிதழை வடிவமைப்பார்கள். 'உற்றார்' என்றால் சுற்றத்தார் எனும் பொருள்படுகின்றது.
Face book இல் 5000 Friends (இதில் உற்றார், உறவினர், நண்பர்கள், தெரிந்தவர் மற்றும் தெரியாதவர் என சகலரும் அடக்கம்) இருந்தாலும், சாதாரண ஒரு நபரின் வாழ்வு வெறும் ஒரிரு நூறு பேர்களுடனேயான வட்டத்திலேயே நடைமுறையில் செல்கின்றது.
சொந்த முயற்சி நீங்கலாக, எமது வளர்ச்சி என்பது உற்றார், உறவினர், நண்பர்கள் என்னும் சுற்று வட்டத்திலும் தங்கியுள்ளது. வளர்ச்சியை விட எமது வீழ்ச்சியை விரும்பவர்களும் இந்த வட்டத்தினைச் சேர்ந்தவர்களுக்குள்ளேயே இருப்பார்கள்.
பல இடங்களில் கூறப்பட்டுள்ளது தான் - சரியான உற்றார், உறவினர், நண்பர்கள் வட்டத்தை அமைத்துக் கொள்ள வேண்டும்.
வாழ்க்கையில் நான் கண்ட சிறந்ததொரு உற்றார் 'சுந்தரம் ஐயா'.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.