கடந்த சில தினங்களில் பல செய்திகள் நாட்டில் உலாவந்திருந்தாலும், எங்கள் வீட்டில் ‘அப்பாடா இனி நிம்மதி’ என கூற வைத்த செய்தி ‘தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை இனி கட்டாயமில்லை’ என்ற கல்வி அமைச்சின் அறிவிப்புத்தான்.
அந்தளவுக்கு எங்கள் மேலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது இந்தப் பரீட்சை. தவிரவும் ஒரு கமிட்டி போட்டு ‘இந்தப் பரீட்சையானது தொடர்ந்து நடாத்தப்பட வேண்டுமா’ என்று ஆராய்ந்து அறியுமளவுக்கு - நாடளாவிய ரீதியிலும் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது இந்தப் பரீட்சை.
எனது மூத்த மகள் 2 வருடங்கள் முன்பு இந்த புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றியிருந்தாள். இதர பல பெற்றோர்கள் போல் அதிகம் வற்புறுத்தி அழுத்தம் கொடுத்துப் படிப்பிக்க நாங்கள் விரும்பியிருக்கவில்லை.
ஆனாலும் குறித்த பரீட்சையானது கட்டாயமானதொன்றாக அமைந்திருந்ததாலும், ஏனைய சக மாணவர்களுடன் பரீட்சை என்னும் ஓட்டப் பந்தயத்தில் மகளும் ஓட நின்றிருந்ததாலும் - ஓரளவு தானும் ஓட வைக்க வேண்டிய கட்டாயம் எங்களுக்கு. தவறினால் மகளின் தன்னம்பிக்கைக்கு பாதகம் ஏற்பட்டுவிடும் என்ற ஆதங்கம்.
பரீட்சை நடந்த ஆண்டில் ஒரேயொரு ஆசிரியரிடம் மாத்திரம் மகளை கற்பதற்கு அனுப்பியிருந்தோம். அதுவும் அந்த வருடம் 'ஆகப்பிரபல்யம்' இல்லாத ஆசிரியர் ஒருவரிடம்.
இந்தக் காலப்பகுதியில் 3 மாதம் லீவில் நின்றபொழுது ‘வேண்டாம் என்னும் அளவுக்கு வெறுத்து விட்டது’ மகளை வகுப்புக்கு கூட்டிச்சென்று வந்து, டியூஷன் ஹோம் வேர்க்....... எனச் செய்வித்து.
ஆனாலும் எனக்குத் தெரிய நாங்கள் மகளுக்காக பரீட்சைக்கென காட்டிய ஈடுபாடு பெரியளவில் இல்லை என்றே நினைக்கின்றேன். பலர் தமது பிள்ளைகளை மூன்றாம் வகுப்பிலேயே, புலமைப் பரிசில் வகுப்புக்களுக்கு அனுப்பி தயார்படுத்தத் தொடங்குகின்றார்கள்.
நான் முதன் முதலில் ‘செமினார்’ என்று சென்றது சில வருடங்கள் முன்பு தான்.
தலைநகரில், ‘தரம் 5 புலமைப் பரிசில் செமினார்’ என்பது பிரபல்யம். மகளுக்கு கற்பித்த ஆசிரியர் பிறிதொரு ஆசிரியர் ஒருவருடன் சேர்ந்து செமினார் ஒன்றை ஒரு முறை நடாத்தியிருந்தார். குறித்த ஆசிரியரின் வகுப்பில் மகளோடு கற்றவர்கள் வெறும் 20 பேர்தான். ஆனால் குறித்த செமினாருக்கு வந்த பிள்ளைகள் சுமார் நானூறுக்கு மேல். 7 மணியிலிருந்து 1 மணி வரை செமினார்.
1 மணிக்கு சற்று முன்னதாக மகளை அழைத்து வர செமினார் இடம்பெற்ற இடத்துக்குச் சென்றேன். 1 மணியைத் தாண்டி செமினார் சென்று கொண்டிருந்தது. அந்த சமயத்தில் பல பெற்றோர்கள் தமது பிள்ளைகளை வகுப்பிலிருந்து அழைத்துச்செல்லத் தொடக்கிவிட்டார்கள். என்னவென்று கேட்டால் – ‘இன்னொமொரு செமினார் 2 மணியிலிருந்து 8 மணி வரை இருக்குதாம்’ என்றார்கள்.
பிள்ளைகள் புலமைப் பரீட்சையில் சித்திபெறுவது ஒரு புறம். விருதுகள், பாராட்டுக்கள், கெளரவங்கள், தத்தெடுப்புக்கள் என்ற பகிடிகள் மறுபுறம். இவற்றில் சில அரசியல்வாதிகளாலேயே நடாத்தப்படுகின்றது. ஓடுகின்ற குதிரையில் பணம் கட்டுவது போன்றது இது.
பரீட்சை, பிள்ளைகள், விருதுகள் ஒரு புறம் இருக்க, கற்பிக்கும் சில ஆசிரியர்களின் 'Rules and Regulations' விதம் விதம். சில ஆசிரியர்கள் வகுப்புக்கு முன்னதாக 'Assessment exam' வேறு வைக்கின்றார்களாம்.
கப்பல் ஏறுவது தாமதமாகியிருந்ததால் நேரத்தை ஏன் வீணடிப்பான் என்று வகுப்பு ஒன்றுக்குச் சென்றேன். ஒரு நாள் ஆசிரியர் ‘நாளை வகுப்புக்கு வர முடியுமா’ என்று கேட்டார். சட்டென்று ‘ஆம்’ என்று கூறினேன். சிரித்துவிட்டு ஆசிரியர் கூறினார். “இப்பதைப் பிள்ளைகளிடம் இதைக் கேட்டால், ‘அம்மாவிடம் கேட்டுவிட்டுத்தான் சொல்ல முடியும் என்று கூறுகின்றார்கள்’ என்றார்.
இங்கு தலைநகரில் பிள்ளைகளை விட தாய்மார்களிடையே உள்ள போட்டி என்பது அசாதாரணமானது. இந்தச் அசாதாரணமான சூழலுக்குள் செல்லக்கூடாது என மனைவியிடம் கண்டிப்பாகக் கூறியுள்ளேன்.
தலைநகரில் தான் இப்படியெல்லாம் இருக்கும், ஊரில் இப்படி எல்லாம் இருக்காது என்றால், ‘ஊரும் இதற்கு குறைந்தது இல்லை’ என்கின்றார்கள் சம்பந்தப்பட்டவர்கள்.
‘மகள் ஸ்கொலர்ஷிப் எடுக்கிறாள் அல்லவா, எப்படி படிகின்றாள். Past Papers, இன்ன பேபெர்ஸ்.......எல்லாம் செய்கிறாளா?’ என்று எனது வகுப்பு நண்பன் ஒருவன் ஊரில் நின்றபொழுது கேட்டான். ‘இல்லை’ என்றேன். ‘என்னடா என் மகன் அடுத்த முறைதான் பரீட்சைக்குத் தோற்றப்போகின்றான், இப்பவே இது எல்லாம் செய்யத்தொடக்கிவிட்டான்’ என்று கூறி ஒரு வினாத்தாள் கட்டை நண்பன் தந்தான்.
புலமைப் பரிசில் பரீட்சை இரண்டு நோக்கங்களுக்காக நடாத்துப்படுகின்றது.
ஒன்று நிதியுதவி மற்றையது பிரபல பாடசாலைக்கான தெரிவு. இரண்டும் பெறுபவர்கள் மிகச் சிலர் தான். இதற்காக இதற்குள் மாட்டுப்பட்டுக் கொண்டோர் மிகப்பலர்.
ஸ்கொலர்ஷிப் போன்று சிறுவயதில் நடாத்தப்படும் போட்டிப் பரீட்சைகள் நிச்சயமாக எதிர்காலத்தை தீர்மானிக்காது.
‘தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை இனி கட்டாயமில்லை’ என்று சட்டம் வந்தாலும், புற்றுநோய் மாதிரி படிந்துள்ள இந்த விடயம், பாடசாலைகளாலும் வகுப்புக்களை நடாத்தும் நபர்களாலும் எப்படி எடுத்துக் கொள்ளப்படும் என்பதை பொறுத்துத்தான் பார்க்கவேண்டும்.
'கட்டாயம் இல்லை' என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டாலும், புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளை மறைமுகமாக முன்னிறுத்தி ‘Donation’ வாங்கும் பாடசாலைகள், பரீட்சை முடிவுகளால் தமது பெயரை நிலை நிறுத்திவரும் பாடசாலைகள் போன்றவை மறைமுகமாக பிள்ளைகளை குறித்த பரீட்சையை கண்டிப்புடன் தோற்றக்கூறி அழுத்தத்தைக் கொடுக்கக்கூடும்.
அமெரிக்காவில் இரட்டைக் கோபுரத் தாக்குதலைத் தொடர்ந்து, ஐநாவின் கடல் சார் விடயங்களைக் அமுல்படுத்தும் பிரிவான IMO வினால் கொண்டு வரப்பட்ட ஒரு விடயம் ISPS Code. IMO வரலாற்றில் மிகவும் குறுகிய காலத்தில் உருவாக்கப்பட்டு - அமுல்படுத்தப்பட்ட விடயம் இது. இதில் 2 பிரிவுகள் உள்ளன.
Part A – Recommendation
Part B – Compulsory
பெயருக்கு Part A ஆனது ‘Recommendation’ அதாவது ‘கட்டாயம் இல்லை’ என்று இருந்தாலும், Seafarers ஆகிய நாங்கள் A, B இரண்டையும் முழுமையாகச் செய்ய வேண்டியுள்ளது. இதுபோல், 'புலமை பரிசில் பரீட்சை இனி கட்டாயமில்லை' என்றாலும், பிள்ளைகளுக்கும் இது போன்றதொரு சூழல் ஏற்படலாம்.
‘புலமைப் பரிசில் பரீட்சை இனி கட்டாயமில்லை’ என்பதை அமுல்படுத்தக் கூறி சுற்று நிருபம் ஒன்றை அமைச்சர் அனுப்பக்கோரியளவில் தான் விடயம் தற்பொழுது உள்ளது.
ஒரே இரவில் பிரதமர் மாற்றப்பட்டு, அமைச்சரவையும் கலைக்கப்பட்டு விட்டது. புதிய அமைச்சர் வந்து விடயத்தை ஒரு வேளை கைவிட்டுவிட்டால் - 2 வது மகளுக்கு இன்னும் 2 ஆண்டுகளில் பரீட்சை எழுதுவேண்டிவரும் – அப்படி ஏற்பட்டால் மீண்டும் நானும் மனைவியும் ஒரு ‘தம்’ கட்ட வேண்டியது தான்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
C. Shajethan (Srilanka)
Posted Date: October 29, 2018 at 20:59
I am frequent reader of your all posts on valvettithurai.org. Thanking you for your open & straight mind. Because you post comments & ideas openly. Hats off to you captain. On this article paragraph 21 & 22 really a disease as CANCER.
Thank you once again captain.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.