ஆதவன் பக்கம் (44) – ஆபத்தான வயர்களும் வாணவேடிக்கைகளும்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/11/2018 (சனிக்கிழமை)
எங்களில் பலருக்கு உள்ள பழக்கம், ஊரில் ஏதாவது பொது விசேட நிகழ்வுகள் இடம்பெற்றால் அவற்றைப்பற்றி புகழ்வதுடன் மட்டும் நிறுத்திக்கொள்வது. பேச்சில் என்றாலும் சரி எழுத்தில் என்றாலும் சரி, குறித்த நிகழ்வுகளைப் பற்றிய குறைபாடான விடயங்களை ஆராயமால் விடுவது வழமை.
பரீட்சை ஒன்றில் நூறுக்கு எண்பது புள்ளிகள் வாங்கும் மாணவனின் வினாத்தாளில் கவனிக்கப்படவேண்டிய விடயம், மாணவன் புள்ளிகள் பெறத்தவறிய இருபது வீதத்தில் தான் இருக்கவேண்டும். இதுபோல்தான் பொதுநிகழ்வுகளின் குறைபாடுகள் சுட்டிக்காட்டப்படவேண்டும், தட்டிக் கொடுப்பதற்கும் மேலாக.
அந்தவகையில், பல நாட்களாக திருவிழாக்களுடன் தொடர்புபட்ட என்னைக்குடையும் இரண்டு விடயங்களை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.
பொதுவாக யாழ்ப்பாணத்தில் திருவிழாக்களின் போது (இந்து கோயில்களில் என்றாலும் சரி, கிறிஸ்தவ தேவாலயங்களில் என்றாலும் சரி) மின் அலங்காரங்கள் என்பது ஒரு பிரதான விடயமாக விளங்கிவருகின்றது. இவை இங்கு வல்வையில் பல படிகள் மேல்.
விரும்பிப் பார்க்கின்றோமே அல்லது ரசிக்கின்றோமோ இல்லையோ, எங்களை அறியாமலே ஒரு மகிழ்வைக் கொடுப்பவை இந்த மின் அலங்காரங்கள் என்றால் மிகையாகாது.
ஊரில் பெயரளவுக்குப் பல பொதுக்கோயில்கள் இருந்தாலும், அம்மன் கோயில் ஒன்றுதான் நடப்பளவில் பொதுக்கோயிலாக இருந்துவருகின்றது. அத்துடன் கிட்டத்தட்ட சகல ஊர்மக்களும் கலந்துகொள்ளும் வருடாந்த மகோற்சவமும் இது என்றால் மிகையாகாது.
ஆகவே எனது இந்தப் பக்கத்தின் உதாரணத்துக்கு அம்மன் கோயிலை நோக்குவதே சிறப்பு எனக் கருதுகின்றேன்.
அம்மன் கோயில் திருவிழா என்றால் முதலில் கோயிலுக்கு உள்ளே கட்டப்படும் வெண்திரைச்சீலைகளுக்குக் கீழே கட்டப்படும் மின் அலங்காரங்கள், தொடர்ந்து கோயிலின் வெளிவீதிகளில் அமைக்கப்படும் மின் அலங்காரங்கள், திருவிழாக் காலங்களில் அம்பாளுடன் சேர்ந்து வீதியுலாவரும் மின் அலங்காரங்கள், பின்னர் படிப்படியாக, கோயிலை அடுத்து பிரதான வீதியின் கிழக்காக ஊரணி வரையும், மேற்காக ஊரிக்காடு வரையும் இந்திரவிழா அன்று வியாபிக்கும் மிகச்சிறப்பான மின் அலங்காரங்கள்.
அம்மன்கோயில் திருவிழாவுக்கு முன்னரே அமைக்கப்படும் மின் அலங்காரவிளக்குகள் மனதில் ஏற்படுத்தும் சந்தோசம் ஒருபுறம் இருக்க, இறுதித் திருவிழாவான குளித்திமுடிந்து, மின்விளக்குகள் அகற்றப்பட்டு வீதிகள் இருண்டு வெறிச்சோடும்போது சிறு பிராயத்தில் ஏற்பட்ட ஒரு விதமான வெறுமை கலைந்த உணர்வும், மின் அலங்காரங்களின் சிறப்பை மனதில் ஓட விட்டுள்ளன என்பதைத் தெளிவு படுத்தி நிற்கின்றன.
இவ்வாறு திருவிழாக்களுக்கு அடையாளம் ஒன்றைக்கொடுத்து, பலரையும் மகிழவைக்கும் மின் அலங்காரங்களில் மறைந்திருக்கும் ஆபத்துக்கள்பற்றி எவரும் அலட்டிக்கொள்வதில்லை.
மின் அலங்காரங்களை அமைப்பதில் ஈடுபடுபவர்கள் மின் தொடர்பான வேலைகள் தெரிந்தவர்கள் என்பதில் ஐயமில்லை. ஆனாலும் இவர்களில் பெரும்பாலானோர் ‘ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு’ (Trickle down method) என்ற முறையிலேயே மின் சம்பந்தப்பட்ட விடயங்களை அறிந்துவருகின்றனர். ‘Trickle down method’ என்பது பல்வேறு துறைகளில் பலரால் கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஒரு முறைதான். காரணம் இது பொருட்செலவு குறைந்த முறை ஒன்றாகும். ஆனால் இதில் சில குறைபாடுகள் உண்டு.
இன்று வளர்ந்த நாடுகளில் மின் சம்பந்தப்பட்ட பணிகளுக்கு ‘தகமைச் சான்றிதழ்’ என்பது கட்டாயம்.
இங்கு திருவிழாக் காலங்களில், குறிப்பாக அம்பாள் வீதியுலா, மேளச்சமாக்கள், வீதி நிகழ்வுகள் போன்றவற்றில், ஏராளமான மின் கம்பிகள் (Live Wires) பல இடங்களில் நிலத்தின் மேலாக செல்கின்றன. குறித்த இந்த வயர்களை ஒரு முறையாவது மிதித்தோ அல்லது வயர்களால் தடக்கப்பட்ட அனுபவங்களோ பலருக்கு இருப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம்.
இந்த வயர்களில் எப்பொழுதாவது ஒருமுறை மின்ஒழுக்கு (‘கரண்ட சோர்ட் அடித்தல்’ என்போம்) ஏற்படுமானால் பெரிய விபரீதமே நடந்துவிடும். முன்னர் இது போன்று இடம்பெறவில்லைத்தானே என்ற வாதம் தவறானது. அந்தக் காலத்துக்கும் இந்தக் காலத்துக்கும் நிறைய வேறுபாடுகள்.
குறித்த மின் அலங்காரங்களில் இணைக்கப்படும் வயர்கள் தொடர்பாக நான் அவதானித்த மற்றும் அனுமானிக்கின்ற சில குறைபாடுகள் பற்றி கீழே குறிப்பிடுகின்றேன். (அம்மன் கோயில் என்று இல்லாமல் பொதுவாக சகல கோயில்களிலும்)
· பொதுத் தொண்டாக இவை அமைவதால், இவர்தான் பொறுப்பு என்று எவரும் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்படுவது இல்லை. வருபவர்கள், மின்வேலை தெரிந்தவர்கள் - ஒரு தொண்டாக தாம் விரும்பிய நேரம் இதைச் செய்கின்றார்கள்.
· செய்த மின்வேலைகள் மிகச்சரிதான் என்று உறுதிப்படுத்தப்படுவது முழுமையானதாக இல்லை. அதாவது ஒரு தகுந்த மேர்பார்வையாளரால் மேற்பார்வை செய்யப்படுவதில்லை.
· பணிகள் பிரதானமாக ஒளி வந்தால் சரி என்றளவில்தான் உள்ளது.
· பாதுகாப்பு சமிக்கைகள் (Warning signs) போடப்படுவதில்லை.
· மின்வேலைகளில் ஈடுபடுபவர்கள் எந்தவொரு பாதுகாப்பு சாதனங்களையும் அணிவதில்லை.
· பல மின்பொருட்கள் கழிக்கப்படாது நீண்ட காலமாக தொடர்ந்து உபயோககிக்கப்பட்டுவருகின்றது.
· ‘Compatibility issues’ அதாவது ஒன்றுடன் ஒன்று சரியாகப் பொருந்தாத பொருட்கள் பாவிக்கப்படுகின்றன. (அவர் கனடாவில் இருந்து கொண்டுவந்து கொடுத்தார், இவர் லண்டனில் இருந்து கொண்டு வந்து கொடுத்தார் என்று கூறப்படும் பொருட்கள்)
· சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் மற்றும் அதிகாரிகள் மட்டத்தில் இருந்து, இவை சம்பந்தமான எதுவித கட்டுப்பாடுகளும் இல்லை.
· வீதிகளில் நீர் ஊற்றுகின்றோம், வயர்களில் ஏதாவது பழுது இருந்தால் ஈரம் ஆபத்தை அதிகப்படுத்தும்.
வாண வேடிக்கைகளும்
அடுத்த முக்கிய விடயம், திருவிழாக் காலங்களில் இடம்பெறும் வாண வேடிக்கைகள்.
வல்வையில் பெரியளவில் வாணவேடிக்கை வருடந்தோறும் இடம்பெறுவது என்றால் அது அம்மன் கோயில் புலிவேட்டைத் திருவிழாவின்போது தான். (இப்பொழுது இது ஏனைய திருவிழாக்களுக்கும் பரவி வருகின்றது)
எனது சிறுபராயத்தில் என்னை மிகவும் கவர்ந்த நிகழ்வுகளில் ஒன்று இது. இப்பொழுது இடம்பெறுவதை விட, 25 வருடங்கள் முன்பு இடம்பெற்ற வாணவேடிக்கைகள் மிகவும் சிறப்பானவை.
ஒரு வருடம் எங்கள் வீட்டுக்கு இடப்பக்கமாகவுள்ள இளைஞர்களும், அடுத்த வருடம் வீட்டுக்கு வலப்பக்கமாகவுள்ள இளைஞர்களும் குறித்த இந்த புலிவேட்டைத் திருவிழாவை நடாத்துவதால், நிகழ்வும் போட்டிக்கு மத்தியில் சிறப்பாக இருந்ததது, இருந்தும் வருகின்றது.
அப்பொழுது வாணவெடிபொருட்கள் நேரடியாக தமிழகத்திலிருந்து கொண்டுவரப்பட்டிருந்தன. அன்றைய புலிவேட்டைத் திருவிழாக காலங்களில் மாலையிலிருந்து இரவுவரை மேடை நிகழ்ச்சிகள் இடம்பெற்று, பின்னர் பூசையைத் தொடர்ந்து அம்பாள் மேற்குவீதிவர நள்ளிரவாகி, இதற்குப் பின்னர்தான் வாணவேடிக்கைகள் ஆரம்பமாகும்.
வானத்தைக் கிழித்துக்கொண்டு செல்லும் ‘எலி வாணங்கள்’ இன்றும் நினைவில் உள்ளன. அதிக மின்விளக்குகளாலான ஒளிவெள்ளத்தில் சனத்திரள்களுக்கு மத்தியில், மேலே ஏவப்படும் எலி வாணங்களைத்தான் நீங்கள் எல்லோரும் பார்த்திருப்பீர்கள்.
ஆனால் இதனை வித்தியாசமான கோணத்தில் பார்க்கும் சந்தர்ப்பம் எங்களைப்போல் கோயிலை ஒட்டி அமைந்துள்ள சில வீட்டுக்காரருக்கு மட்டும்தான் கிடைக்கின்றது.
எங்கள் வீட்டுமுற்றத்தில் நின்று பார்க்கும்போது எலிவாணங்கள் மேல் எழும்பி நிலத்திற்குச் சமாந்தரமாகச் சென்று கடற்பக்கமாக விழும் காட்சி கொள்ளை அழகு.
பாதுகாப்பு விடயத்தில் தந்தையார் மிகக்கவனம், கடுமையும் கூட. சிறுவயதில் வாணவேடிக்கைகள் இடம்பெறும்போது குறித்த வீதிப்பக்கம் போக எம்மை அனுமதித்ததில்லை. அப்போது இரண்டு பகுதிகளைக்கொண்ட எமது வீட்டின் ஒருபகுதி கூரையால் வேயப்பட்டிருந்தது.
வீட்டில் கிணற்றையொட்டி இரண்டு நீர்த்தொட்டிகள் இருந்தன.
வாணவேடிக்கைகள் இடம்பெறும் புலிவேட்டைத் திருவிழா அன்று, தந்தையார் இரண்டு தொட்டிகளுக்குள்ளும் முழுதாக நீர் நிரப்பி வைப்பது வழக்கம் – எலி வந்து கூரையை எரித்தாலும் என்று முற்பாதுகாப்பாக.
ஆனால் அப்படி பல வருடங்களாக ஒன்றும் இடம்பெறவில்லை, ஆனால் தந்தையார் தொடர்ந்து வருடந்தோறும் நீர் நிரப்பி வைப்பதை நிறுத்தவில்லை. அத்துடன் வாணவேடிக்கை இடம்பெறும் நேரத்தில் அடிக்கடி உள்ளே வந்து வீட்டை வந்துபார்ப்பதையும் நிறுத்தவில்லை.
ஒரு முறை எலிவாணம் ஒன்று எமது வீட்டுக்கூரையின்மீது விழுந்து கூரை எரிந்தது. ஆரம்பத்திலியே தந்தையார் இதைக் கண்டதாலும், தண்ணீர் தயாராக இருந்ததாலும் உடனேயே தீயை அணைத்துவிட்டார். கப்பலில் ‘Fire drill’, ‘Fire Patrol’ என்று வரும்போது இந்த நிகழ்வையும் தந்தையரையும் அவ்வப்போது நினைத்துக்கொள்வேன்.
இன்று முன்னரைப்போல் அன்றி, கோவிலைச்சுற்றி பெரும்பாலும் சீமெந்துக் கட்டடங்கள் தான், ஆகவே எரிய வாய்ப்பில்லை என்று தட்டிக்கழிக்க முடியாது.
மூன்று வருடங்கள் முன்பு பண்டிகை ஒன்றின்பொழுது ஏவப்பட்ட ‘குருவி வாணம்’ ஒன்று, ரெயின்போஸ் வாசிகசாலைக்கு அண்மையில் உள்ள ஒரு வீட்டின் தென்னையின் வட்டில் தீப்பற்றி தென்னை பகுதியாக எரிந்தது குறிப்பிடத்தக்கது.
அம்மன் கோயிலில் இடம்பெறும் வாணவேடிக்கைகள் பலருக்கு தீக்காயங்களை ஏற்படுத்தியுள்ளது, பலரது உடைகளில் தணலும் பிடித்திருக்கின்றது. இதில் எனது குடும்ப உறுப்பினர் ஒருவரும் அடக்கம். காயம்பட்டவர்கள் எவர்மீதும் குறைகூற முடியாத காரணத்தாலும், கோயில் என்று கருதியும் பேசாமல் இருந்து வருகின்றார்கள்.
மற்றைய பொதுநிகழ்வுகளான கலைவிழாக்கள், விளையாட்டுப் போட்டிகள், இசை நிகழ்ச்சிகளில் லைற் எஞ்சின்களினதும் வயர்களினதும் பிரசன்னம் இருந்தாலும், இவை ஓரளவுக்கு ஒதுக்குப்புறமாகவும் பொது மக்களுக்கு அப்பாலும்தான் உள்ளன. ஆனாலும் முழுக்க ஆபத்துக்கள் அற்றவை என்று கோடிடமுடியாது.
மின் அலங்காரங்கள், வாண வேடிக்கைகள் தொடரவேண்டும். ஆனால் காயங்களும் உயிர்பலிகளும் எந்தவொரு காலத்திலும் நிகழா வண்ணம் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
முக்கியமாக மற்றைய இடங்களைவிட இந்த விடயங்களில் நாம் சற்றுக்கூடுதல் கவனம் செலுத்தவேண்டும், காரணம் மற்ற இடங்களைவிட அதிகம் ‘கலர்’ (லைற்ஸ்) காட்டுவதில் மற்றவர்களைவிட நாங்கள்தான் குறிப்பிடக் கூடியளவில் முன்னிற்கின்றோம்.
எமது பிரதேசங்களில் இது போன்றவற்றை பெரிதாக காதில் வாங்கிக்கொள்ளமாட்டார்கள் என்பது தெரிந்தவிடயம் ஒன்றுதான். ஏனெனில் தேவையற்ற உயிர்ப்பலிகள், விபத்துக்கள் பற்றிய விழிப்புணர்வுகள் இங்கு எந்த மட்டத்திலும் பெரியளவில் இல்லை.
ஒரேயொரு உதாரணம். கடந்த இரண்டு வருடங்கள் முன்பு இந்திரவிழாவின் இறுதியில், விழாவிற்காக அமைக்கப்பட்ட மின் இணைப்பில் ஒழுக்கு ஏற்பட்டு ‘கட்டியண்ணா’ (பாய்மரக் கப்பல்களுக்கு பாய் அமைக்கத் தெரிந்த ஒரிருவரில் சிறந்த ஒருவர்) உயிரிழந்தார். அவரின் உயிரிழைப்பை சாதரணமாக எடுத்துவிட்டோம், எடுத்துவிட்டார்கள்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
K N Kumar (Canada)
Posted Date: November 11, 2018 at 11:22
Thanks to Aathavan to alarm our people about the safety precautions,especially thousands of people gathering. Always safety is first. Thank you
Nanda (U.A.E)
Posted Date: November 10, 2018 at 23:46
Well said Athavan. This has to be controlled with at least a basic minimum safety.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.