இன்று வடக்கிலே இளைஞர்கள் சினிமா மோகத்திலே கையிலே வாள்களுடன் அலைந்து திரிவதை பார்க்கும் போது,
எங்களுடைய நெஞ்சம் கனக்கின்றது. இன்று சினிமாவிலே பைத்தியங்கள் பிடித்தவர்கள் போல நடிகர்களுக்கு பால் அபிஷேகம் செய்வதும், சிலர் நடிகர்களின் படங்களை தங்களது சட்டைப் பையிலே கொண்டு திரிவதும் மன வேதனையினை தருகின்றது.
இந்தகைய காட்சிகளை பார்க்கின்ற போது வேதனையாகவும் வெட்கமாகவும் இருக்கின்றது. யாரும் எதிர்பார்த்திராத ஒரு சமூக மாற்றம் எமது மண்ணிலே தோன்றி விட்டது என்ற ஆதங்கம் மனதிலே தோன்றி கவலை தருகின்றது.
சினிமா என்பது ஒரு கலை வடிவம் அதனை முற்றுமுழுவதுமாக கூடாது என்று சொல்லுகின்ற தகுதி எனக்கு கிடையாது. நல்ல தயாரிப்பாளர்கள், நல்ல கதைகள், நல்ல சிந்தனைக்கு விருந்தான காட்சிகள், வெறும் 3 மணத்தியாலத்துள் இந்த உலகத்திற்கு நல்ல கதைகளை சொல்லுகின்ற சினிமாக்களும் உண்டு.
ஆனால் சினிமாவிலே பாத்திரங்களாக வந்துவிட்டு போகின்றவர்கள் எல்லோரும் தங்கள் வாழ்வில் பத்திரமாக வாழ்கின்றார்கள் என்று அபிப்பிராயம் கொள்வது பெரும் தவறு.
இந்திய சினிமா நட்சத்திரங்கள் பற்றி நான் சிறு வயது தொடக்கம் வாசித்து கொண்டு இருக்கின்றேன். திரையிலே வருகின்ற கதா நாயகர்கள் எல்லோரும் தங்கள் வாழ்வில் இராமனாக, சீதையாக அல்லது அரிச்சந்திரனாக அவர்கள் நடத்திருக்கலாமே அல்லாமல் அவர்கள் தங்கள் வாழ்வில் வாழ்ந்ததாக சரித்திரமே இல்லை.
இவர்களை பார்த்து ஏமாந்து விடுகின்ற இளைய சமூகம் இந்தியாவிலே இருந்தது. இந்திய மாநிலங்களிலே கேரள மாநிலம் 96 வீதம் கல்வியறிவு பெற்று உயர்ந்த நிலையிலே இருக்கின்ற பொழுது தமிழ்நாட்டிலே இந்த சினிமா பாதிப்புக்கள் இன்றும் உள்ளன.
தமது சிறு வயதிலே பாடசாலைக்கு செல்லாதவர்கள் கூட அங்கு உள்ளார்கள், பலர் வறுமையிலே வாடுகின்றார்கள்.
தமிழ்நாட்டிலே கல்வியறிவு குறைந்தவர்கள் மத்தியிலே இந்த சினிமா மோகமானது வேகம் கொண்டு இந்த சினிமாவிலே நடடிப்பவர்களை கடவுளாக உயர்த்தி போற்றும் நிலை உருவாகி அவர்கள் இந்த நடிகர்களுக்காக சங்கங்கள் அமைத்துள்ளார்கள்.
ஒரு காலத்திலே தமிழுக்கும் சங்கம் அமைத்து, முத்தமிழுக்கும் சங்கம் அமைத்து மதுரை தமிழ் சங்கம் என்றும் சென்னை தமிழ் சங்கம் என்றும் சங்கங்கள் அமைத்து தமிழை போற்றிக் காத்த தமிழர் பண்பாட்டிற்கு அப்பாலே,
நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் சங்கம் அமைத்து அதற்கு தலைவர் என்றும் செயலாளர் என்றும் தேர்தல் நடாத்தும் அவலம் அங்கு நடைபெறுகின்ற செய்திகளை பத்திரிகைகளிலே பார்க்கின்ற பொழுது எமது மண்ணை நினைத்து சற்று ஆறுதலாக இருந்தது.
எங்கள் மண்ணிலே சினிமா நாயகர்களுக்கு யாருமே சங்கம் அமைக்கவில்லை சினிமா நாயகர்களை யாரும் வீட்டிலே படமாக வைக்கவில்லை, சினிமா நாயகர்களின் படங்களை பொறித்த உடைகளை யாருமே அணிந்து செல்லவில்லை,
என்று நிதானமானர்கள் எல்லோரும் எங்கள் மண்ணிலே வாழ்கின்றார்கள் என்று நான் தமிழ் நாட்டிற்கு செல்லும் பொழுதுகளில் நினைத்து ஆறுதல் அடைந்தேன்.
என்ன பரிதாபம்?.. போருக்கு பின்பு ஏற்பட்ட மாற்றங்களின் விளைவு இன்று எதிர்பாராத விதமாக எங்கள் மண்ணிலே இந்த போலித்தனமான சினிமாவின் சாயல்கள் அவர்களின் உள்ளங்களிலே ஊறி இருக்கின்றது.
இதன் காரணமாகத்தான் நிதானம் கெட்ட செயற்பாடுகள் எமது மண்ணிலே நடைபெறுகின்றது.
அன்புக்குரிய மாணவர்களே! உங்களுடைய கைப் பையிலே ஒரு விஞ்ஞானியின் படம் இருக்கலாம், ஒரு மெய்ஞானியின் படம் இருக்கலாம், பெற்றவர்களின் படம் இருக்காலம் ஆனால் நடடிகர்களின் படங்களை நீங்கள் சுமப்பீர்களானால் நீங்கள் இந்த மண்ணிற்கு சொந்தக்காரர்கள் அல்ல.
அன்பு குழந்தைகளே அப்படி ஏதாவது சினிமா படங்களை நீங்கள் வைத்திருந்தால் அவற்றை இன்றே அப்புறப்படுத்தி விடுங்கள்.
இந்த சினிமா நடிகர்கள் வெறும் பணத்திற்காக நடிக்கின்றார்கள். இந் சினிமா மோகத்திலே தமிழர்கள் ஊறி அழிகின்றார்கள் என்பதை உணர்ந்து வேறு பல மாநிலங்களில் இருந்து வந்து தமிழ்நாட்டிலே படம் நடடிக்கின்றார்கள்.
பலபேருக்கு தமிழ் மொழியே தெரியாது. படம் நடித்து பெரிய கதாநாயகர்களாக கொண்டாடுகின்ற பலருக்கு தமிழ் மொழியே தெரியாது.
தமிழர்களே பல கோடிகளை செலவு செய்து படம் எடுக்கின்றார்கள் தமிழர்களே நாயகன் நாயகிகளை கொண்டாடுகின்றார்கள் ஆனால் அவர்களுக்கு தமிழ் தெரியாது.
இந்த 21ம் நூற்றாண்டிலே தமிழன் ஏமாறுகின்றானே...
அன்புக்குரிய மாணவர்களே சினிமாவிலே வருகின்ற நுட்பங்கள் அனைத்தும் எமக்கு அப்பாற்பட்டவை இவை அனைத்தும் தொழில்நுட்பத்தினாலே உருவாக்கப்பட்டவை.
மிகப் பெரிய உயரத்தில் இருந்து குதிக்கும் கதாநாயகன் எந்ந காயமும் இல்லாமல் தப்புகின்றான் என்று கனவு காண வேண்டாம்.
சம தரையிலே ஓடுகின்ற நீங்கள் விழுந்தாலே காயம் ஏற்படுகின்றது ஆனால் மலையிலே இருந்து விழுந்து எழுந்து நாயகன் 10 பேரை அடித்து வீழ்த்துகின்றான் என்றால் இந்த 21ம் நூற்றாண்டிலே என்ன வேடிக்கை?
ஆற்றல் உள்ள மாணவர்கள் இது தொழில்நுட்பத்தின் கெட்டித்தனம் என்று நன்றாக ரசிக்கலாம் ஆனால் அது கதாநாயகனின் கெட்டித்தனம் என்று ரசிப்பதுதான் பெரும் ஆபத்து ஆகும்.
இன்று எமது மண்ணிலே பல இளைஞர்கள் கையிலே வாள்களுடன் திரிகின்றார்கள். சினிமா காட்சிகளிலே உள்ளது போல அவர்கள் வாள்களை கையிலே எடுத்து தெருக்களிலே சண்டை பிடிக்கின்றார்கள்.
யாழ் போதனா வைத்தியசாலையிலே மருத்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. இவ்வாறான சூழலிலே ஒவ்வொரு மாதமும் வைத்தியசாலையிலே படுக்கையிலே கிடக்கின்ற இளைஞர்களை போய் பாருங்கள்.
இவர்களுக்கு மூலம் என்ன?.. சினிமாதான்...
சினிமாவிலே காட்டுகின்ற வாள்கள் அனைத்தும் போலியானவை. வாள்களுடன் சட்டை போடும் காட்சிகளிலே சினிமா கதாநாயகனின் முகத்தினை வைத்து தொழில்நுட்பம் மூலம் காட்சிகளை தயார் செய்கின்றார்கள்.
ஆனால் பல இளைஞர்கள் என்ன நினைக்கின்றார்கள் என்றால் எங்களுடைய கதாநாயகன் நன்றாக வாள் வீசுகின்றான் என்று.
அன்பு குழந்தைகளே... இந்த சினிமா போலித்தனங்களில் நீங்கள் அகப்பட்டு விடக்கூடாது. நன்மைகளை செய்த சினிமா இன்று கெடுதல்களை உருவாக்குகின்றது.
வயதிற்கு மூத்தவர்களை ஏளனம் செய்வது,பொருளை திருடுவதற்காக கொலை செய்வது போன்ற இன்றைய இளைஞர்களின் நடத்தைகள் எல்லாம் தற்கால சினிமாவிலே காட்டியவை தான்.
எமது மண்ணிலே இன்றைய திருடர்கள் எங்கே இருந்து கற்றார்கள்? சினிமாவிலே சில காட்சிகளை அவ்வாறு காட்டி விட்டு போய்விடார்கள்.
பணம் தேவை என்றவுடன் சினிமாவிலே கற்றதை கையாளுகின்றார்கள். ஒரு காலத்திலே ஆங்கில படங்களிலே மட்டும் காட்டுகின்ற காட்சிகளை தற்காலத்தில் தமிழ் சினிமா காட்சிகளிலே காட்டுகின்றார்கள்.
இன்று எங்கள் மண்ணிலே சினிமாவிலே பார்த்து விட்டு எத்தனை கொடுமைகள் நடைபெறுகின்றன. ஒரு இரக்கமற்ற ஒரு சமூகத்தை நாங்கள் எங்கள் மண்ணிலே உருவாக்கி கொண்டிருக்கின்றோம்.
சினிமாவிலேதான் பொருட்களை கடத்துகின்ற நுட்பங்களை காட்டிக் கொடுத்தார்கள். இன்று வடக்கிலே இந்தளவு போதைப் பொருட்களை கடத்துகின்றார்கள் என்றால் அது சினிமா கற்று தந்த தந்திரங்கள்தான்.
இன்று எமது மண்ணிலே போதைகளை கடத்துபவர்கள் ஒரு பெரிய நிறுவனத்தின் அதிபதி போல சிறப்பான தோற்றத்துடன் திரிகின்றார்கள் யாரும் இவர்களை எளிதில் அடையாளம் காண முடியாத அளவிற்கு திரிகின்றார்கள்.
சினிமாவிலே வரும் காட்சிகளை பார்த்து தத்தம் தேவைகளுக்கு அவற்றை பயன்படுத்துகின்றார்கள்.
ஒரு காலத்திலே யாழ்ப்பாணம் நிமிர்ந்து நின்றது. யாருக்கும் அஞ்சாது நின்றது, நிதானமாகத்தான் எந்த ஒன்றையும் செய்யும். ஒரு காலத்திலே 5 சதம் செலவு செய்வது என்றாலும் வீணாக செலவு செய்ய மாட்டர்கள்.
ஒரு காலத்திலே வடக்கினுடைய பொருளாதார வலிமையினை ஏனையவர்கள் பெருமையுடன் பேசினார்கள்.
இந்த பண்பாட்டிற்கு ஆபத்து வரக்கூடிய ஆடம்பரமான செலவீனங்கள் எமது மண்ணிலே தொடங்கி விட்டது. சினிமா மோகம் பலர் வாழ்வில் குடி கொண்டுள்ளது. திருமண வீட்டிலே ஒரு பெண்னை அலங்கரிப்பதற்கு பல இலட்சங்களை செலவு செய்கின்றார்கள்.
எங்கள் மண்ணிலே பல பெண்கள் தமிழுக்காக வாழ்ந்து உயிர் துறந்த பண்பாட்டிலே இன்று எங்கள் தமிழ் பெண்கள் ஆந்திரா வடிவமைப்பு, கேராள வடிமைப்பு என்று கூறிக் கொண்டு அலங்கரிக்கின்றார்கள்.
எங்கள் பண்பாட்டிற்கு அப்பால் பெண்களை அலங்கரிப்பதெல்லாம் எங்கள் தமிழ் பண்பாட்டிற்கு செய்யும் பெரும் துரோகம் ஆகும்.
இந்த ஒப்பனை பெண் கலைஞர்களை எங்கள் மண்ணிலே உருவாக்கியிருப்பது இந்த சினிமாதான். இந்த ஒப்பகைளை பார்த்து விட்டு சிலர் அழகாக இருப்பதாக சொல்லலாம் ஆனால் இது பெரும் ஆபத்து. எங்கள் பண்பாட்டை குழி தோண்டி புதைக்கின்ற ஆபத்து.
எத்தனை நூற்றாண்டுகள் பழமையான வரலாற்றை கொண்ட எங்கள் மண்ணிற்கு இந்த சினிமா கதா நாயகிகளை பார்த்து பார்த்து பெண்கள் எல்லோரும் திசை மாறிச் செல்கின்றார்கள்.
அன்பு குழந்தைகளே இந்த போலித்தனமான வலையிலே நீங்கள் அகப்பட்டு விடாதீர்கள்.
சினிமா நடிகர்கள் கோடிக் கணக்கில் பணம் சம்பாதிக்கின்றார்கள். ஆனால் ஒரு ஏழைக்கு கொடுக்க மாட்டார்கள்.
சினிமாவிலே கோடிக்கணக்கில் உழைத்து தள்ளுகின்ற கதாநாயகர்கள் நினைத்திருந்தால் எத்தனையோ ஏழைகளுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்திருக்கலாம். பல தர்ம காரியங்கள் செய்திருக்கலாம்.
கோடிகளை சம்பளமாக பெற்றுக் கொள்ளும் நடிகர்கள் நினைத்திருந்தால் தெருக்களிலும், மரங்களுக்கு அடியிலும், புகையிர தண்டவாளங்களின் அருகிலும் வாழும் ஏழைகளுக்கு உதவி செய்திருக்கலாம்.
சினிமாவிலே தங்களை ஏழைகளின் பங்காளன் என வீர வசனங்களை பேசுபவர்கள் சுய வாழ்விலே ஒரு ஏழையின் வாழ்வில் ஒரு சுபீட்சத்தை ஏற்படுத்த மாட்டார்கள்.
சினிமாவிலே ஏழைகளின் பங்காளன் என்றும் அநியாயங்களை எதிர்ப்பவர்கள் போலவும் இளைஞர்களின் மனங்களில் குடி கொள்ளும் சினிமா நடிகர்கள் நிய வாழ்விலே தாம் சார்ந்த சமூகங்களிற்கு ஏதுவும் செய்வதில்லை.
முன்பு பல நடிகர்கள் தர்மங்கள் செய்திருக்கின்றார்கள் ஆனால் தற்காலத்தில் 90 வீதமான நடிகர்கள் நடிகைகள் தர்மம் செய்வதில்லை.
எனவே அன்பு குழந்தைகளே போலியான இந்த சினிமா காட்சிகளை பார்த்து ஏமாந்து விடாதீர்கள். இன்று எங்கள் மண்ணிலே பலர் பணம் கொடுத்து உடலிலே சினிமா நடிகர்களின் உருவங்களை பச்சை குத்துகின்றார்கள்.
நாளும் பொழுதும் தனது பிள்ளைகளுக்காக அரும்பாடுபட்ட பெற்றோர்களை மறந்து சினிமா நடிகர்களை பச்சை குத்தும் அவலம் இன்று எங்கள் மண்ணிலே நடைபெறுகின்றது.
தமது வாழ்விலே மொழிகளை கடந்து, தேசங்களை கடந்து, மதங்களை கடந்து வாழ்ந்த எத்தனையோ சரித்திர நாயகர்களின் வரலாறுகள் உள்ளன அவற்றை படியுங்கள் இந்த சினிமா போலிகளை நம்பாதீர்கள்.
எந்தவொரு நடிகர்களின் சங்கங்களை எங்கள் மண்ணில் தமிழர்கள் கொண்டாடக் கூடாது. நடிகர்களுக்காக புத்தி கெட்டவர்களாக நடப்போமாக இருந்தால் எதற்கு பள்ளிக்கூடங்கள்? ஏன் ஆசிரியர்கள்? உங்களுடைய பெற்றோர்களுக்கு செய்கின்ற கைமாறு இதுவா?
எங்களுடைய வளரும் பயிர்களாக உள்ள மாணவர்கள் புனிதமாக வளர வேண்டும். தற்கால சினிமா படங்களை பார்க்கின்ற போது மிகவும் கவலையாக இருக்கின்றது.
ஏனென்றால் தரமான அறிவு நிறைந்த படைப்பாளிகளின் போற்றத்தக்க சினிமா படங்களை கடந்த காலங்களில் பார்த்த நாங்கள் தற்காலத்தில் வெளிவரும் சினிமா படங்களை பார்த்து வேதனைப்பட வேண்டியுள்ளது.
ஒரு காலத்திலே சினிமாவிலே பாடல்களை நிறைந்த அறிவுடைய கவிஞர்களால் படைக்கப்பட்டது. இன்று ஆங்கிலச் சொற்களை பயன்படுத்துவதும் தமிழ் மொழியினை அசிங்கப்படுத்துவம் சினிமாவில் மலிந்து போய் உள்ளது.
எத்தனை ஆயிரம் ஆண்டுகள் சென்றாலும் அழியாத காவியங்களை முன்னைய சினிமாக்களில் பல மகான்கள் எமக்காக ஏற்படுத்தி கொடுத்தார்கள்.
ஆனால் இன்று சினிமா பாடல் என்றால் ஓசை அதிகமாகிவிடுகின்றது மேலைத்தேச வாத்தியங்கள் பாடலை தின்று விடுகின்றது கருத்து அங்கே கைகழிவிப் போகின்றது தமிழை தேட வேண்டியிருக்கின்றது.
தமிழ் படைப்புக்களில் தமிழ் அசிங்கப்படுத்தப்படுமேயானால் அது தமிழ் அன்னைக்கு செய்கின்ற துரோகம் ஆகும்.
ஒரு காலத்தியே என்ன அற்புதமான தமிழ் பாடல்கள் இருந்தது என்ன அற்புதமான படைப்புக்கள் இருந்தது இன்று அவற்றை காண முடிவதில்லை.
கவிஞர் வைரமுத்துவைப் பார்த்து ஒருவர் கேட்டார் ஆரம்பத்தில் நல்ல தமிழை தந்தீர்கள் இன்று நீங்கள் படைப்பது வாணிபத்திற்காக இருக்கின்றது. அதற்கு அவர் நாங்கள் என்ன செய்ய முடியும் தயாரிப்பாளர்கள் அப்படி கேட்கின்றார்கள் என பதில் சொன்னார்.
ஒரு தமிழ் கவிஞன் அப்படி பதில் சொல்ல முடியாது.
இன்று தமிழ் படங்களுக்கு பெயர் வைப்பதற்கு கூட தமிழ் தட்டுப்பாடாக உள்ளது. கோடான கோடி தமிழர்கள் பார்க்கின்ற படங்களுக்கு தமிழ் பெயர் வைக்க மறுக்கின்றார்கள்.
சங்கம் வைத்து தமிழ் வளர்த்து தென்னாடு என்று போற்றுகின்ற தமிழ்நாட்டிலே தமிழ் படங்களுக்கு தமிழ் பெயர் இல்லை.
மகாகவி பாரதி போன்றவர்களின் படைப்புக்களை எடுத்து சினிமாக்களிலே முன்பு படைத்தார்கள் சங்கீத விற்பன்னர்களை பயன்படுத்தி அருமையான படைப்புக்களை தந்தார்கள். எண்ண முடியாத அரும் பெரும் சொத்துக்கள் தமிழர்களிடையே உள்ள போதும்,
இன்று போலித்தனமான காட்சிகளை வைத்து சினிமாக்களை தயாரிக்கின்றார்கள்.
எனவே அன்பான குழந்தைகளே...
இந்த போலியான சினிமாக்காரர்களையும் காட்சிகளையும் நம்பி அதனை பின்பற்றாமல் எம் மண்ணிற்கென்ற தனித்துவத்துடன் வாழ்ந்து,
எமது மண்ணிற்கு பெருமை தேடித்தாருங்கள்...
காலங்காலமாக கல்விச்சூழல் உள்ளது எமது யாழ்ப்பாணம். தடக்கி விழுந்தாலும் ஒரு தமிழ் பண்டிதர் யாழ்ப்பாணத்தில் இருக்கின்றார் என்று கி.வ.ஜெகநாதன் யாழ்ப்பாணத்தை புகழ்ந்து பேசினார்.
மிகப்பெரிய எழுத்தாளர் டாக்கடர் மு.வரதராஜன் இலங்கை விஜயம் என்ற தனது கட்டுரையிலே மூளை வளம் மிக்க நாடு வடக்கு என்று எழுதினார்.
இத்தகைய சான்றோர்கள் போற்றிய இந்த மண்ணிலே ஒரு நடிகனுக்கு படம் கட்டி பால் ஊற்றி கொண்டாடும் அவலம் நடைபெறுகின்றது.
இதைப் பார்த்து வேதனை வராதா? என்ன சோதனை?
எங்களுக்குரிய அடையாளங்களை தெலைத்து விட்டு சினிமாவின் அடையாளங்களை பாதுகாக்கின்ற அவலம் எங்கள் மண்ணிலே நடைபெறுவது வேதனை தருகின்றது.
போலித்தனமான சினிமாக்களை நம்பி இதற்கு அடிமையாகி விடாதீர்கள்.
நல்லதை வரவேற்று தீயவற்றை கைவிட்டு நல்ல சமூகமாக எங்கள் சமூகம் மாற குழந்தைகளே போலித்தனமான சினிமாக்களை கைவிடுங்கள்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.