வடக்கு அந்தமான் கடல் பகுதியில் கடந்த 8 ஆம் திகதி உருவாகியிருந்த தாழமுக்கமானது மிகக் கடும் புயலாக மாறி (Very severe cyclonic storm, Phailin), வங்காள விரிகுடாவில் வடமேற்குத் திசையாக நகர்ந்து, நேற்று இரவு ஒரிசா கரையைக் கடந்துள்ளது.
புயல் பயிலினின் (Phailin) செய்மதிப்படம் - ஒரிசாவின் கரையைக் கடப்பதற்கு சில மணி நேரங்கள் முன்னர்
ஒரிசாவின் கோபால்பூர் அருகே மணிக்கு 240 கி.மீ. சூறாவளிக் காற்றுடன் கரையை கடந்த இப் புயலினால் (Phailin) இந்தியாவின் கிழக்கு கரையோர மாநிலங்களான ஒரிசா, ஆந்திரா மற்றும் தமிழ் நாட்டின் கரையோரப் பகுதிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. குறிப்பாக புயலால் நேரடியாகத் தாக்கப்பட்டுள்ள ஒரிசா மாநிலம் மிகக் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளதாக இந்திய செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
வலுவிழந்து புயல் பயலின் (Phailin) பயணிக்கும் பாதை
இது இவ்விதமிருக்க புயல் பயிலினால் இலங்கையின் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு ஆகிய கிழக்கு கரையோரப் பகுதிகளிலும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
வடமராட்சி கிழக்கு, மணற்காடு, கட்டைக்காடு, வண்ணார்குளம், செம்மலை, முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களின் கடற்பகுதியில் இன்று அதிகாலை 12:00 மணி முதல் 12.05 வரையில் ஏற்பட்ட 'திடீரெனெ அதிகரிக்கும் காற்றினால்' (Gust wind) கடும் கடற் கொந்தளிப்பு ஏற்பட்டிருந்தது . மேலும் புயல் பயிலினால் குறிப்பிட்ட கரையோரப் பிரதேசங்கள் கடல் அலை (Sea Waves) மற்றும் ஆழி அலை (Swell waves) ஆகிய இரு வேறுபட்ட அலைகளின் தாக்கத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்தன.
வடமராட்சி கிழக்கு கடற்கரை தொடக்கம் முல்லைத்தீவு செம்மலை வரையான கடற்பகுதி கொந்தளித்தமையினால் 150 ற்கும் மேற்பட்ட வள்ளங்கள் கடலில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளன.
இதனால் வடமராட்சி கரையோரங்களினை அண்டிய கடற்றொழிலாளர்களின் 100 இற்கும் மேற்பட்ட வள்ளங்கள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், பல வள்ளங்கள் சேதமடைந்துள்ளன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.