சுமார் ஐந்து மாதங்களாக காணாமல் போயிருந்த 15 வயது சிறுமி, நக்கிள்ஸ் மலைத்தொடரில் உள்ள தொலைதூரக் குகை ஒன்றில் தனது இரண்டு மாதக் குழந்தையுடன் வசித்து வந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உடுதும்பர பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, மீமுரே பகுதிக்கு அருகிலுள்ள வனப்பகுதியில் குறித்த சிறுமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
சுமார் ஐந்து மாதங்களுக்கு முன்னர் சிறுமி காணாமல் போயுள்ளதாக அவரது குடும்பத்தினர் முறைப்பாடு செய்திருந்த நிலையில், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
விசாரணையின் போது, உள்ளூர் கடை ஒன்றிலிருந்து வழமைக்கு மாறாக அதிகளவான அரிசி மற்றும் உணவுப் பொருட்களைத் தொடர்ச்சியாகக் கொள்வனவு செய்த இளைஞன் ஒருவன் மீது பொலிஸாருக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
மக்கள் குடியிருப்புகளிலிருந்து விலகியுள்ள தொலைதூர வனப்பகுதிக்குள் குறித்த இளைஞனைப் பின்தொடர்ந்து சென்ற பொலிஸார், அங்கு பிளாஸ்டிக் விரிப்புகளால் மூடப்பட்டிருந்த குகை ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர்.
அந்தக் குகைக்குள்ளேயே காணாமல் போயிருந்த 15 வயது சிறுமியும், அவரது இரண்டு மாதப் பெண் குழந்தையும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளனர்.
எவ்வித மருத்துவ உதவியுமின்றி அந்தக் குகைக்குள்ளேயே சிறுமி குழந்தையைப் பிரசவித்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கித்துள் பதநீர் இறக்கும் தொழிலுக்குப் பயன்படுத்தப்படும் கூர்மையான ஆயுதமொன்றைப் பயன்படுத்தி குழந்தையின் தொப்புள்கொடி வெட்டப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுற்றியுள்ள காட்டிலிருந்து சேகரிக்கப்பட்ட பாரம்பரிய மூலிகை மருந்துகளைக் கொண்டே தாய்க்கும் சேய்க்கும் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
குழந்தையின் தந்தை என நம்பப்படும் 23 வயதுடைய குறித்த இளைஞன், கித்துள் பாகு காய்ச்சுவதற்குப் பயன்படுத்தப்படும் பெரிய பாத்திரமொன்றில் (தாச்சி) குழந்தையைக் குளிப்பாட்டியதாகவும் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் 23 வயதுடைய குறித்த இளைஞனையும், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது உறவினர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும் தெல்தெனிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் நவம்பர் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸ் பாதுகாப்பில் எடுக்கப்பட்ட சிறுமியும் குழந்தையும், மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சைகளுக்காக கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் உடுதும்பர பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். (நியூஸ்வயர்)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.