ஆதவன் பக்கம் (80) – யாழில் காணி விலை – யதார்த்தமும் எதிர்காலமும்!
(எனது தாய்நிலத்தையோ இழிவுபடுத்துவதோ, புலம்பெயர் உறவுகளைக் காயப்படுத்துவதோ இந்தப் பதிவின் நோக்கமல்ல)
மும்பாயில் Nariman Point, சிங்கப்பூரில் Raffles Place, ஜப்பானில் Tokyo, லண்டனில் Mayfair, சிட்னியில் Double Bay, நியூயோர்க்கில் Manhattan, சீனாவில் Beijing... இவை போன்ற இடங்களையும் நகரங்களையும் நான் பார்த்திருக்கிறேன்.
பல வழித்தடங்களைக் கொண்ட பாரிய வீதிகள், மேம்பாலங்கள், வானளாவிய கட்டடங்கள், வர்த்தக மையங்கள், பங்குச் சந்தைகள், அதிநவீன தொழில்நுட்பங்கள், சர்வதேச சுற்றுலா மையங்கள், ஹோட்டல்கள், நவீன கழிவுநீர் முகாமைத்துவம், குடிநீர் மற்றும் நகர்ப்புற சுகாதார வசதிகள், பெரிய விளையாட்டு அரங்குகள், பூங்காக்கள், பொது பொழுதுபோக்கு வசதிகள், பாரிய துறைமுகங்கள், விமான நிலையங்கள், தொழிற்துறைகள், வெளிநாட்டினருக்கும் வேலைவாய்ப்புகளை வழங்கக்கூடிய பொருளாதாரச் சூழல் என இவற்றின் சிறப்புகளை நீட்டிக்கொண்டே போகலாம்.
இவ்வாறான பெருநகரங்களில் உள்ள சில முக்கிய இடங்களின் நில விலைகள் (ஒரு சதுர மீட்டருக்கு – Gemini AI வழங்கிய தகவல்):
Monaco – $38,800
New York – $27,500
Hong Kong – $26,300
London – $24,000
Paris – $20,400
Sydney – $19,500
Los Angeles – $17,500
இவை AI வழங்கிய தோராயமான ஒப்பீட்டுத் தகவல்கள் மட்டுமே.
இடம், நிலத்தின் வகை, மதிப்பீட்டு முறை ஆகியவற்றைப் பொறுத்து விலைகள் மாறுபடும். இவற்றை ஒரே தரப்படுத்தலிலான அதிகாரபூர்வ உலகத் தரவரிசையாகக் கருதக்கூடாது.
KKS துறைமுகம் இன்னும் முழுமையான வர்த்தகச் செயற்பாட்டில் இல்லை.
பலாலி விமான நிலையம் மிகச் சிறியது. அதன் கட்டுப்பாட்டு அறையே Container மூலம் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
வாழ்க்கைச் செலவைச் சமாளிக்கக்கூடிய வேலைவாய்ப்புகள் போதுமானதாக இல்லை. அவ்வப்போது யாழ் பட்டதாரிகளே வேலைவாய்ப்பு கோரி போராடும் நிலை.
(இருக்கின்ற சில வேலைகளுக்கு ஆள் பிடிப்பது கடினம் என்பது வேறு விடயம்!)
பலருக்கு தொழில் என்றால் வெளிநாட்டுக் கனவு. அரச ஊழியர்கள் சிலர்கூட விசிட் விசாவில் கனடா செல்லும் நிலை.
புலம்பெயர்ந்தவர்கள் விடுமுறையில் இங்கு வந்தால் போவது South க்கும் Up Country க்கும்தான்.
குப்பை கொட்டுவதிலும், கையாள்வதிலும் தொடர்ந்தும் இழுபறி.
யாழ் புதிய பஸ் நிலையத்தைக்கூட இன்னும் முழுமையாகச் செயற்பட வைக்க முடியாத நிலை.
800 மீட்டர் x 800 மீட்டர் அளவிலான யாழ் “Town” ஐ நிர்வகிப்பதில்கூட தொடர்ச்சியான பிரச்சினைகள்.
ஒருவாறு இங்கு ஏதாவது பொருட்களை உற்பத்தி செய்தாலும் பெரியளவில் சந்தைப்படுத்த வாய்ப்பில்லை. காரணம், மக்கள் தொகை குறைவு. மற்றது, பொருட்களின் வரத்து தம்புள்ளையிலிருந்தும் கொழும்பிலிருந்தும்.
கட்டடம் கட்ட மண் இல்லை, கல் இல்லை. குடிப்பதற்கு நல்ல குடிநீர் வசதியில்லை.
பெண்கள் இயற்கை உபாதைகளைக் கழிப்பதற்குக்கூட போதுமான பொது இடங்கள் இல்லை.
மின்சாரத்தில் ஒரு பகுதி சுன்னாகத்திலிருந்து, எஞ்சியது லக்ஸ்பாணவிலிருந்து.
யாழைத் தளமாகக் கொண்ட பங்குச் சந்தை என்று எதுவுமில்லை.
ஒரு பாரிய நிகழ்வை நடத்தக்கூடிய மையங்கள் இல்லை.
முற்றவெளியிலும் தொல்லியல்காரர்கள் தூண்களைப் போட்டு விட்டார்களாம்
வரவு செலவுத் திட்டங்களில்கூட யாழை பாரிய நகரங்களுக்கு இணையாக உயர்த்துவதற்கான குறிப்பிடத்தக்க அபிவிருத்தித் திட்டங்கள் அறிவிக்கப்படுவதில்லை.
இவ்வாறு ஏராளமான காரணிகள் சாதகமற்றிருக்க, யாழில் காணி விலை மட்டும் எகிறிக்கொண்டே போகின்றது.
நகர்ப்பகுதிகளில் சொல்லவே வேண்டாம். அதுவும் யாழ் நகரையும் அதனையொட்டிய பகுதிகளையும் பற்றிச் சொல்ல வார்த்தைகளே இல்லை.
யாழ் வைத்தியசாலை வீதியில் அண்மையில் ஒரு பரப்புக்கும் மேலாக காணி ஒன்று 48 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டதாகக் கொழும்பில் உள்ள சட்டத்தரணி ஒருவர் என்னிடம் கூறினார். உண்மை பொய் தெரியவில்லை.
நிலத்துக்கு கீழே பெட்ரோலோ அல்லது தங்கமோ இருந்தால்கூடப் பரவாயில்லை!
7, 8 வருடங்களுக்கு முன்பு கோண்டாவில், கொக்குவில் பகுதிகளில் ஒரு பரப்பு 50, 60 லட்சம் என்றபோது, ஊரில் வல்வையில் 20, 30 லட்சம் என்றபோதே வாயைப் பிளந்தேன். இப்போது இங்கு காணி விலைகளைக் கேட்கும்போது என்னத்தைப் பிளப்பது என்றே தெரியவில்லை!
இரண்டு சம்பவங்கள்
1. 2002 – சமாதான காலம்
வல்வை ஊரிக்காட்டில் குலம் மாமா (Council இல் வேலை செய்தவர்) வீட்டுக்குச் சென்றிருந்தேன்.
அப்போது அவர், ஊரிக்காடு – நெற்கொழு பகுதியில் ஒரு காணி விற்பனைக்கு இருப்பதாகவும், ஒரு பரப்பு 60 ஆயிரம் ரூபாய் என்றும், என்னைச் சும்மா வாங்கி விடுமாறும் கேட்டார். அந்த நேரம் காணிக்கு அவ்வளவு பெறுமதி இல்லாத காலம். அவர் சொன்னதைக் கேட்கவில்லை.
இன்று அதே காணியின் ஒரு பரப்பு 60–70 லட்சம் அளவில் இருக்கலாம். கிட்டத்தட்ட 100 மடங்கு!
2. போர் முடிந்த காலம்
எங்கள் முன்னாள் கார் மெக்கானிக் சுந்தரம் ஐயா – அநியாயத்துக்கு நல்ல மனிதர்.
குறிப்பிட விரும்பவில்லை என்றாலும், கட்டுரைக்கு அவசியம் என்பதால் குறிப்பிடுகிறேன்.
அவருக்குச் சில உதவிகள் செய்துள்ளேன். தானும் பதிலுக்கு எனக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தாரோ என்னவோ, யாழ் – பருத்தித்துறை வீதியில் ஆனைப்பந்தி சந்திக்கு அருகில் (JCB போன்ற கனரக வாகனங்கள் நிற்கும் பகுதி), தனது தங்கைக்கு வீடு ஒன்றும் காணியும் வீதியோரமாக இருப்பதாகவும், அவர்கள் வெளிநாட்டில் வசிப்பதால் இனிமேல் இங்கு வரப்போவதில்லை என்றும், தான் கதைக்கிறேன், 70 லட்சம் அளவில் வரும், உங்களுக்கு இன்னும் 5, 10 லட்சம் குறைத்துத் தருகிறேன் என்றும் என்னை அந்தக் காணியை வாங்க வலியுறுத்தினார்.
இதிலும் நான் விலை அதிகம் என்று கருதி ஆர்வம் காட்டவில்லை - தற்போது இதன் மதிப்பு கோடிகளில்!
வல்வையில் பூச்சிகுத்தான் பகுதியில் எனது ஜூனிய்ர் நண்பன் ஒருவன் காணி வாங்கி அவ்வப்போது தோட்டம் செய்கிறான். சிறு பராயத்தில் பழகிய நல்ல தோட்டங்கள் இருந்த இடம் என்பதால், அவ்வப்போது குறித்த நண்பனைச் சந்திக்கும்போது காணி விலை பற்றிக் கேட்பது வழக்கம்.
10–15 லட்சத்தில் இருந்த காணி. விலை குறைய வாங்கலாம் என அடுத்த விடுமுறையில் சென்று கேட்டபோது, 30 லட்சம் என்றால் கைவிடத் தயார் என்று காணி உரிமையாளர் கூறியதாக நண்பன் சொன்னான் - சில மாதங்களில் இரண்டு மடங்கு!
அதே நேரம் சந்திப் பகுதியில் 40, 50 லட்சம் விலை போன காலத்தில், இந்தியாவில் உள்ள ஊரவர் ஒருவர் சந்தியையொட்டிய காணி ஒன்றுக்கு “1½ கோடி என்றால் மட்டுமே கதைப்பேன்” என்று தன்னிடம் கூறியதாக ஊரிக்காட்டில் உள்ள தரகர் ஒருவர் என்னிடம் கூறினார். - மூன்று மடங்கு!
நகர்ப்பகுதியில் காணி விலை இப்படி என்றால், தோட்டக் காணிகள், காட்டுக் காணிகளின் விலையும் அசுர வேகத்தில்தான் செல்கின்றது.
முகமாலையில் உறவினர் ஒருவரின் A9 வீதியோரமாக இருந்த தேங்காய்த் தோட்டம் ஒன்றைப் பார்க்கச் சில வருடங்களுக்கு முன்பு சென்றிருந்தேன். அப்போது எனக்கும் வீதியோரமாக ஒரு காணி பார்க்கச் சொன்னேன். அப்போது அவர் கூறினார்:
“இப்பொழுது இங்கு காணி விலை ஏறிவிட்டது. ஏக்கர் (16 பரப்பு) 25 லட்சத்துக்கு மேல் போகின்றது.”
இப்பொழுது அதே இடத்தில் ஒரு பரப்பு 25 மாம்.
ஏன் என்று கேட்டால், A9 வீதி. பெட்ரோல் செட் போடலாமாம், ஹோட்டல்கள் கட்டலாமாம், பண்ணைகள் அமைக்கலாமாம்!
இருப்பவை போதாது என்று எத்தனையை, யாருக்காக அமைப்பது?
கொழும்பில் காணி விலை
எனக்கு மிகவும் பரிச்சயமான வெள்ளவத்தையில் 6–7 வருடங்களுக்கு முன்பு ஒரு பேர்ச் 60–80 லட்சம். இன்று 70–120 லட்சம். 1/2 மடங்காக கூட விலை ஏறவில்லை.
பணவீக்கத்தையும் கணக்கில் எடுத்துப் பார்த்தால், வெள்ளவத்தையில் காணி விலை அதிகரிப்பானது, யாழுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவானது. இவ்வளவுக்கும் வெள்ளவத்தை City Limit க்குள் உள்ளது. பெரும்பான்மையினரைப் பொறுத்தவரை வெள்ளவத்தை ஒரு Expensive Place.
பொது நியதி
பொதுவான பொருளாதார நியதிப்படி, ஒரு இடத்தில் காணி விலை அதிகரிக்கின்றது என்றால், அந்த இடத்தில் மக்கள் தொகை அதிகரிப்பு, கல்வி, பொருளாதாரம், மருத்துவம், சுற்றுலா, நீர் வசதி, புதிய அபிவிருத்தித் திட்டங்கள் போன்ற ஏதாவது ஒன்று அல்லது இரண்டு காரணிகள் தாக்கத்தைச் செலுத்த வேண்டும்.
விளக்குவதற்கு வல்வையை எடுத்துக்கொள்வோம். (ஏனைய இடங்களுக்கும் சில வேறுபாடுகளுடன் இது பொருந்தும்)
நகரசபையின் வருமானம் கூடவில்லை. (வருமானம் போதவில்லை, சிலரின் சம்பளம் கொடுப்பதில்கூடத் தாமதம் என்று அங்கு வேலை செய்யும் தங்கை ஒருவர் அண்மையில் கூறினார்).
மரக்கறிச் சந்தையில் இருவர் மட்டுமே வியாபாரம் செய்கிறார்கள். அவர்களும் பிணக்கு காரணமாக இப்போது சந்தைக்கு வருவதில்லை.
மீன் சந்தையில் அதே ஐந்து மீன் வியாபாரிகள்தான்.
வியாபாரத்தில் சொல்லக்கூடிய அளவுக்கு முன்னேற்றம் இல்லை. (எனக்குத் தெரிந்தவரை வல்வையில் வியாபாரம் ஓகோ என்று ஓடிய காலம் 80களின் நடுப்பகுதிதான். அப்போது இரண்டு சினிமாத் தியேட்டர்கள்கூட இருந்தன.)
உற்பத்தி, தொழிற்பேட்டைகள் என்று புதிதாக எதுவும் உருவாகவில்லை.
சுனாமியும் இல்லை, புதிய வீட்டுத் திட்டங்களும் இல்லை.
போர் முடிந்து 17 வருடங்கள் கடந்துவிட்டன. இதுவரை செய்ய முடியாத பாரிய அபிவிருத்தித் திட்டங்களை இனிமேல் ஊர்ச் சங்கங்களோ ஒன்றியங்களோ செய்யப்போகின்றனவா என்பதும் கேள்விக்குறிதான்.
மக்கள் தொகை ஒப்பீட்டளவில் சரிவு. பிறப்பு வீதம் குறைவு, இறப்பு வீதம் அதிகரிப்பு. தொடர்ந்தும் மக்கள் புலம்பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
குடிநீர்ப் பிரச்சினை அதிகரித்துக் கொண்டிருக்கின்றது.
குளிப்பதற்கான நீர்கூடப் பிரச்சினையாக உள்ளது. வெயில் காலத்தில் பற்றாக்குறை. பல இடங்களில் குளிப்பதற்கும் கழிவுநீரை அகற்றுவதற்கும் பிரச்சினைகள் உள்ளன.
கல்வியைப் பொறுத்தவரை அதே பள்ளிக்கூடங்கள்தான். ஆகா, ஓகோ என்று சொல்லக்கூடிய அளவுக்கு முன்னேற்றம் இல்லை. மாணவர் எண்ணிக்கையும் குறைந்து கொண்டிருக்கின்றது.
வெளியிலிருந்து வருபவர்கள் தங்குவதற்கு சந்தியை ஒட்டிய பகுதியில் ஒரு கட்டடம்கூட இல்லை. குடும்பத்துடன் மூன்று வேளையும் ஒழுங்காக அமர்ந்து சாப்பிடக்கூடிய ஒரு நல்ல உணவுச்சாலைகூட இல்லை. இயற்கை உபாதைகளைக் கழிப்பதற்கான வசதிகளும் இல்லை.
பொழுதுபோக்கு அம்சங்கள் என்று பெரிதாக ஒன்றுமில்லை.
பல ஒழுங்கைகளுக்கு வான் போகாது, சில ஒழுங்கைகளுக்கு கார் போகாது. ஆட்டோக்கூடப் போக முடியாத ஒழுங்கைகள் உண்டு.
இப்படி எதுவிதத்திலும் Demand அதிகரிப்பதற்கான சாதகங்கள் இல்லாத அல்லது குறைந்த ஒரு பகுதியில், காணியின் விலை எதற்காக மடங்காக உயர்ந்து கொண்டே செல்கின்றது?
மும்பாய் நகரத்தின் மக்கள் தொகை முழு இலங்கை நாட்டின் மக்கள் தொகைக்கு நிகரானது. சென்னையில் வசிப்பவர்கள் இலங்கை சனத்தொகையின் அரைவாசி பேர். கொழும்பு (Greater Colombo) பகுதியில் வசிப்பவர்கள் நாட்டின் சனத்தொகையில் கால் பங்குக்கு அண்மித்தவர்கள்.
இந்த நகரங்களை நோக்கி மக்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறார்கள். வேலைவாய்ப்புகள், தொழில்கள், வர்த்தகம், கல்வி, மருத்துவம் எனப் பல காரணங்களால் மக்கள் அங்கு குடியேறுகிறார்கள். அதற்கேற்ப காணி விலையும் அதிகரிக்கின்றது. இது ஏற்றுக்கொள்ளக்கூடியது.
ஆனால் யாழில் நிலைமை என்ன?
பலாலி, காங்கேசன்துறை ஒட்டிய பகுதிகளில் 2015 வரை சும்மா கொடுத்தால்கூட யாரும் காணி வாங்கத் தயாராக இருக்கவில்லை. இன்று இப்பகுதிகளில் வல்வெட்டித்துறை, பருத்தித்துறையை விடக் காணி விலை அதிகம்.
பலாலி விமான நிலையத்தை அண்மித்து காணி வாங்கினால் ஹோட்டல்கள் கட்டலாமாம்.
காங்கேசன்துறை Harbour தொடங்கப்போகிறதாம். வாங்கி விட்டால் இன்னும் நல்ல விலைக்கு விற்கலாமாம்.
கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்மித்த காணிகளுக்கு இவ்வளவு Build-up இல்லை. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தைச் சுற்றி இப்படிக் காணி வாங்குவதற்காகப் போட்டி போட்டதாகவும் தெரியவில்லை.
எனது அறிவுக்கு எட்டியவரை KKS Harbour ஐப் பெரிய அளவில் வர்த்தக ரீதியாகச் செயற்பட வைக்கக்கூடிய அழுத்தத்தைக் கொடுக்கக்கூடிய தமிழ் அரசியல் தலைமைகளும் இல்லை. ஒருவேளை அப்படி அழுத்தம் கொடுத்தாலும், தெற்கில் அத்தகைய அபிவிருத்தியைச் செய்யக்கூடிய அரசியல் மனநிலையும் இருக்குமா என்பது கேள்விக்குறியே.
காணி விலை ஏற்றத்துக்கான காரணங்கள்
எனது பார்வையில் முக்கியமாக மூன்று தரப்பினரின் செயற்பாடுகள் இதற்குப் பங்களிக்கின்றன.
புலம்பெயர்ந்தவர்கள்
சிலர் உயிர்ப்பயத்துக்கு அஞ்சி புலம்பெயர்ந்தார்கள். சிலர் கல்வி, அந்தஸ்துக்காகப் புலம்பெயர்ந்தார்கள். ஆனால் மிகப் பெரும்பாலானோர் இங்கிருந்தால் உழைத்து வாழ்க்கையை நடத்த முடியாது என்றுதான் சென்றார்கள், இன்றும் செல்கிறார்கள், நாளையும் செல்லவுள்ளார்கள்.
ஆனால் இதே புலம்பெயர்ந்து சென்றவர்கள், உழைக்க முடியாது என்று விட்டுச் சென்ற இடத்தில், தமது சந்ததியினர் இங்கு வரப்போவதில்லை என்று தெரிந்தும் காணிகளை வாங்குகிறார்கள்; (பேய்) வீடுகளைக் கட்டுகிறார்கள்!
இதில் அனைவரையும் குறை கூற முடியாது. தாய்நிலத்தின் மீதான பற்று, பெற்றோர் வாழ்ந்த வீடு, பூர்வீகச் சொத்து போன்றவற்றைப் பாதுகாக்கும் எண்ணம் நியாயமானதே.
ஆனால், ஊரில் காணியற்ற நிலையில் இருந்து புலம்பெயர்ந்து, வெளிநாட்டில் வசதியாக வாழும் சிலர், தத்தம் ஊர்களில் காணியின் உச்சபட்ச விலைகளை நிர்ணயிப்பவர்களாக மாறிவிடுகின்றனர்.
சில வருடங்களுக்கு முன்பு கொண்டக்கட்டையைச் சேர்ந்த ஒருவர் இங்குள்ள ஒருவரிடம், “கொண்டைக்கட்டைக்குள் அரைப் பரப்பாவது காணி வாங்கித் தா. பணம் எவ்வளவு என்றாலும் பரவாயில்லை” என்று கூறியதாகக் கேள்விப்பட்டேன்.
இதுதான் யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளாத நிலை.
எனக்குத் தெரிந்த மிகச் சிறந்த ஊர் விசுவாசி ஒருவர் கனடாவுக்குப் புலம்பெயர்ந்தவர். ஊர் சார்ந்த பல ஆவணங்களைத் திரட்டி, தனது சொந்தச் செலவில் ஆவணக் காப்பகம் ஒன்றை நடத்தி வந்தார். சில வருடங்களுக்கு முன்பு ஆவணங்களைக் கைமாற்றிவிட்டு, தனது வீட்டையும் விற்றுவிட்டார்.
கதைத்தேன். “வயதாகிவிட்டது. இனிமேல் எங்களால் பராமரிக்க முடியாது” என்றார். இதுதான் யதார்த்தம்!
இன்னுமொரு உதாரணம்.
எனது இரத்த உறவினர் வல்வையின் எல்லையில் 40 பரப்பு காணியைப் பல வருடங்களுக்கு முன்பு வாங்கியிருந்தார். பார்த்துப் பார்த்து, ரசித்து ரசித்து மரங்கள் வைத்து அழகான மாடி வீடு ஒன்றையும் சில வருடங்களுக்கு முன்பு கட்டினார்.
நான் ஒவ்வொரு முறையும் விடுமுறையில் போகும்போது, 4, 5 பரப்புகளை விற்றுவிட்டதாகக் கூறுவார். போன முறை போகும்போது, மீதிக் காணியையும் வீட்டையும் சேர்த்து அனைத்தையும் விற்கப்போவதாகக் கூறினார்.
“பிள்ளைகள் இனிமேல் இங்கு வரப்போவதில்லை. எங்களையும் தங்களோடு வந்துவிடுமாறு கேட்கிறார்கள்” என்றார். இதுதான் யதார்த்தம்!
சென்டிமென்ட் என்ற ஒன்றைத் தவிர வேறு என்ன இருக்கின்றது?
10 நாட்கள் வந்து நின்று தங்கிப் போவதற்கு 5 கோடி, 10 கோடியில் காணி + வீடு. அதுவும் அந்த 10 நாட்களும் வாங்கிய இடங்களில் நிம்மதியாகத் தங்கிப் போகிறார்களா என்றால் அதுவும் இல்லை. அரைவாசி நாட்கள் அனுராதபுரத்திலும், கால் வாசி நாட்கள் ஹட்டனிலும், மீதி நாட்கள் வேறு இடங்களிலும் கழிகின்றன.
B) இயக்கக் காசு
புலம்பெயர்ந்தவர்களின் முதலீடுகளுடன், முன்னாள் இயக்க நிதி தொடர்பான செல்வச் சேர்க்கையும் காணி விலை ஏற்றத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.
2007 ஆம் ஆண்டு பிரபல ஆங்கிலப் பத்திரிகை ஒன்று வெளியிட்ட செய்தியில், “இயக்கத்தின் சொத்துக்களின் மதிப்பு 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த மதிப்பீடு எவ்வாறு கணக்கிடப்பட்டது, அந்தச் சொத்துக்களின் உண்மையான நிலை என்ன என்பவை தனியாக ஆராயப்பட வேண்டிய விடயங்கள். இந்தப் பக்கத்துக்க சம்பந்தம் இல்லாதாவை
ஆனால், இயக்கம் மறைந்த பின்னர் அதன் நிதி மற்றும் சொத்துக்கள் தொடர்பாகப் பல்வேறு தரப்பினரிடையே ஏற்பட்ட உரிமை மாற்றங்கள், கட்டுப்பாடு மற்றும் செல்வச் சேர்க்கை பற்றிய கேள்விகள் எழுந்தன. இப்பொழுதும் விவாதிக்கப்பட்டு வருகின்றன.
அவ்வாறான நிதி ஆதாரங்களைக் கொண்டிருந்த இங்கு காணி போன்ற சொத்துக்களில் முதலீடு செய்திருக்கின்றார்கள் (என்று கதைக்கிறார்கள், என் பணம், உன் பணம், உன் பணம், என் பணம் என்ற நிலை மாறி, இறுதியில் எல்லாமே என் பணமாக - தனிப்பட்ட சொத்தாக மாறிவிட்டது)
அவ்வாறு பணம் வைத்திருந்த சிலர் விசிறி விசிறிக் காணிகளை வாங்கியதும், சந்தை விலையை உயர்த்தியதும் மறுக்க முடியாத ஒரு சமூகப் பார்வையாக இருக்கின்றது.
இவற்றால் ஏற்பட்ட இன்னுமொரு ஆபத்து என்னவென்றால், இங்குள்ளவர்கள் கூட இனிமேல் வெளிநாட்டுக்குப் போனால்தான் காணி வாங்க முடியும், வீடு கட்ட முடியும் என்ற யதார்த்தமான நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டார்கள்.
1.4 C செலவழித்து அண்மையில் தனது மகனை லண்டனுக்கு அனுப்பியதாக நண்பன் ஒருவன் கூறினான். இங்கு உழைத்து எப்படிச் சமாளிப்பான் என்ற தனது ஆதங்கத்தையும் பகிர்ந்துகொண்டான்.
புரோக்கர்கள் / YouTube காரர்களின் பங்கு
இங்கு யாழில் காணியின் அசாத்திய விலை ஏற்றத்துக்குப் பல புரோக்கர்களும் காரணம்.
அந்தக் காலத்தில் ஒருவர், இருவர் மட்டுமே புரோக்கர்களாக இருந்தார்கள். இன்றைக்கு ஏராளமான புரோக்கர்கள்.
வாங்குபவரும் விற்பவரும் இடையில் நடக்கும் பேரத்தில், அதிக விலைக்கு விற்றால் கொமிஷனும் அதிகம். இதனால் சிலர் விலையை உயர்த்துவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
அடுத்தது YouTube காரர்கள்.
காணிகள் பற்றி அதீதமாக வர்ணனை செய்கிறார்கள்.
கீழேயுள்ள நகைச்சுவையான, ஆனால் கருத்துப் பொதிந்த பதிவைச் சில வருடங்களுக்கு முன்பு முகநூலில் படித்தேன். இந்தப் பந்தியுடன் அப்படியே ஒத்துப்போவதால் மாற்றம் ஏதுமின்றி பகிர்ந்துள்ளேன்.
இந்தக் காணிக்கு வடக்குப் பக்கம் உள்ள காணியை அமிதாப்பச்சன் வாங்கப்போறார். கிழக்குப் பக்கம் உள்ள காணியை ஜாக்கிசான் வாங்கி ஒரு ஹோட்டல் கட்டப்போறார். தெற்குப் பக்கத்துக் காணியை அண்ணாமலை வாங்கிட்டார். அதுக்குள்ள ஒரு பெரிய Wedding Hall கட்டப்போறார். மேற்குப் பக்கத்துக் காணியில் ஹெலிகொப்டர் இறங்கிற ஒரு Landing Port வரப்போகுது.
ஓ... ஐ... சீ... பட் இந்தக் காணிக்குள்ளயும் நீங்க சொன்ன பக்கத்துக் காணியளுக்குள்ளயும் ஒரே கல்லு கல்லா இருக்கே. இதையா கலட்டி எண்டு சொல்லுறது?
இல்லை இல்லை. இதெல்லாம் High Quality Granites. இங்க இருக்கிற சனத்துக்கு ஒண்டும் தெரியாது. அதால்தான் கலட்டி காணி எண்டு சொல்லுதுகள். உங்கள போல Foreign காரருக்குத்தான் அந்தக் கல்லுகளிண்ட பெறுமதி விளங்கும்.
யா யா... சுவர் சுவர்.
அதால்தான் அமிதாப்பச்சன், ஜாக்கிசான், அண்ணாமலை எல்லாரும் இதுக்குள்ள வந்து வாங்கியிருக்கினம். இந்த விஷயங்கள் இந்தக் காணியை விற்கிற காணிக்காரருக்கே இன்னும் தெரியாதெண்டா பாருங்கோவன்.
ஓ... ரியலி...
நீங்க Future ல இங்க வீடு கட்டி, பிள்ளையளிண்ட Functions களை இங்க வந்து செய்யேக்க, பிள்ளையளை ஹெலியில அழைச்சுக்கொண்டு வர எல்லாம் நல்ல ஈஸி...
யா யா... Definitely...
வேற வெளிநாட்டுக்காரரும் என்னட்ட ஒரே கேட்டுக்கொண்டிருக்கினம் இந்தக் காணிய வாங்கித் தரச்சொல்லி. நான் உங்களுக்கு காட்ட ஓமெண்டதால அவையளுக்கு இன்னும் காட்டேல்ல.
நோ நோ. நீங்க அவையளுக்கு காட்ட வேண்டாம். எங்களுக்கு இந்த Granite Land OK. என்ன Price எண்டாலும் பரவாயில்லை. பேசி முடிச்சுத்தாங்கோ.
எங்கோ தொலைவில் ஒரு ஆலயத்தில் பூட்டியிருந்த ஒலிபெருக்கியில் ஒலிக்கிறது:
வல்வை சந்தியிலிருந்து சுமார் 700 மீட்டர் தொலைவில், பிரதான வீதியிலிருந்து சுமார் 100 மீட்டர் உள்ளே, 4 பரப்பு காணியில் அமைந்த அண்மையில் கட்டப்பட்ட ஒரு வீட்டுக்கு ஆரம்பத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலை 12 கோடி. பின்னர் 10 கோடியாகக் குறைக்கப்பட்டது. இன்னும் விற்கப்படவில்லை.
இப்போதே இப்படி ஒரு நிலை என்றால், அடுத்த தலைமுறை மாறும்போது, 20, 30 வருடங்கள் கழித்து, எல்லோரும் வெளிநாட்டிலிருந்து ஓடிவந்து ஒரே நேரத்தில் யாருக்கு கோடிகளில் வீட்டை விற்கப்போகிறார்கள்? யார் வாங்கப்போகிறார்கள்?
20, 30 வருடங்கள் கழித்து 20, 30 கோடிக்கு விற்க நினைத்தாலும், வெளிநாட்டில் அடுத்த தலைமுறையில் வாழ்பவர்களும் வாங்கப்போவதில்லை. இங்குள்ளவர்களும் வாங்க முடியாது.
சட்டச் சிக்கல்
இலங்கை காணி சம்பந்தமான சுற்று நிருபங்களின் படி, இலங்கை பிரஜை அல்லாத ஒருவர், நிலம் வாங்க முடியாது. Apartment (Flat) மாத்திரம் வாங்க அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புலம் பெயர்ந்தவர்கள் பலர் வெளிநாட்டு பிரைஜைகளாக மாறிய பின்னர், இலங்கையில் தாம் பெற்ற NIC யைப் பாவித்து காணிகள் வாங்குகிறார்கள். வெளிநாட்டு பிரைஜைகளாக மாறிய பின்னர் இலங்கை NIC யைப் பாவிப்பது சட்டத்துக்கு முரணானது. அந்த வகையில் அப்படி வாங்கப் படும் காணிகளின் உரிமமும் சட்டத்துக்கு புறம்பானது.
ஒரு விடயத்தை உன்னிப்பாக கவனிக்கக் வேண்டும் - காணிகளை வாங்கி எழுதுவதில் பிரச்சனை இல்லை. சிக்கல் பின்னர் தான் ஏற்படும்.
TIN நடைமுறைக்கு வரும்போது இதற்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கப்படும். ஏனெனில் காணி வாங்க / விற்க TIN கட்டாயம் என்ற நடைமுறையை இந்த மாதம் 1 ஆம் திகதியே கொண்டு வந்த தற்போது 6 மாதங்களுக்கு பிற்போட்டுள்ளார்கள்.
அது மட்டுமல்ல, அனுர அரசு அடுத்த 4 ஆண்டுகளுக்கும் தொடர்ந்தால், இப்போது எப்படி பழைய பைல்களை தொண்டுகிறார்களோ அது போல மேற்குறித்த விடயத்தையும் தோண்டக்கூடும். அப்போது நிலம் வாங்கிய பல புலம் பெயர் வாசிகள் சட்ட சிக்கலை எதிர்கொள்வார்கள்.
பாவம் உள்ளூர் வாசிகள் !
இங்குள்ளவர்கள் இப்போது இங்கு காணி வாங்க வேண்டும் என்றால் இரண்டு வழிகள்தான் இருப்பதுபோல் தெரிகின்றது.
ஒன்று – வெளிநாட்டில் செட்டில் ஆக வேண்டும்.
மற்றையது – சட்டவிரோதமான வழிகளில் பெரும் பணம் சம்பாதிக்க வேண்டும்.
ஆனால் போதைப்பொருள் கடத்தல் போன்ற சட்டவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களின் சொத்துக்களையும் அரசு கவனிக்க ஆரம்பித்துள்ளது. ஆகவே அந்த வழியும் இனிமேல் சுலபமானதல்ல.
முன்னர் பெரிய காணிகள், சொத்துக்கள் வாங்கக்கூடிய வல்லமை படைத்தவர்களாகக் கப்பலில் வேலை செய்யும் கடைநிலை மாலுமிகள்கூட இருந்தார்கள்.
தற்போது அதிகாரிகள் தரத்தில் இருக்கும் மாலுமிகளுக்கே காணிகள் வாங்குவது கிட்டத்தட்ட உச்சபட்சமாகிவிட்டது.
சில வருடங்களுக்கு முன்பு இளம் அரச ஊழியர் ஒருவர் முகநூலில் இவ்வாறு பதிவிட்டிருந்தார்:
“காணி விற்கிற விலையைப் பார்த்தால் கக்கூஸ் கட்டக்கூட காணி வாங்க முடியாமல் இருக்கின்றது.”
ஊரில் அரச / தனியார் வேலை செய்பவர்கள் அல்லது சுயதொழில் செய்பவர்கள், ஊரே கதி என்று இருப்பவர்கள், காணியற்றவர்கள் – இவர்களால் காணி வாங்க முடியாது என்பது மிகவும் வேதனையான விடயம்.
2004 ஆம் ஆண்டுக்குப் பின்னர், 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஒவ்வொரு வருடமும் குறைந்தது ஒரு மாதமாவது ஊரில் நிற்கிறேன்.
பரப்பு 10 லட்சம் அதிகம் என்று விட்டேன். அடுத்த வருடம் அதுவே 15 லட்சம், 20 லட்சம் என்று கூடி இன்று 50–100 லட்சம் வரை நிற்கின்றது.
ஆரம்பத்தில் நான் காணி வாங்காமல் விட்டதற்கு ஒரு காரணம் இருந்தது.
“ஆதவன் இவ்வளவு காசு கொடுத்து காணி வாங்கி காணி விலையைக் கூட்டிவிட்டான்” என்று யாரும் என்னைக் குறை கூறக்கூடாது. இங்குள்ள, இங்கு தொடர்ந்து வாழப்போகின்ற நலிந்தவர்கள் காணி வாங்க முடியாத நிலைக்கு என்னால் செல்லக்கூடாது என்ற எண்ணம்தான்.
இறுதியில் கடந்த வருடம், காணி உரிமையாளர்களும் புரோக்கர்களும் 40 லட்சம் என்று கூறியிருந்த ஒரு தெரிந்த காணியை, ஒரு பரப்பு 19.6 லட்சம் என்ற விலையில் வாங்கினேன். மொத்தம் 10 பரப்பு.
தவிர்க்க முடியாமல் முயல் அடித்த கணக்கில் காணி உரிமையாளரிடமிருந்து வாங்கவில்லை. சுமார் 8 மாதங்கள் வாங்குவதற்கு Buyers இல்லாத நிலை இருந்தது.
எனக்குத் தெரிந்து இப்படி சரியான விலை கொடுத்து காணி வாங்கியது நானாகத்தான் இருக்கும்.
இதை ஒரு சமூகப் பொறுப்பு என்றே கருதுகிறேன்.
மனைவியின் பூர்வீக வீட்டை ஒரு குடும்பம் வாடகை ஏதுமின்றி வசிப்பதற்குக் கொடுத்துள்ளேன். இதையும் ஒரு சமூகப் பொறுப்பு என்றே கருதுகிறேன்.
சமூகப் பொறுப்பு என்று எழுதியதன் நோக்கம் தற்புகழ்ச்சிக்காக அல்ல. மாறாக, சிலராவது இதனைப் பின்பற்றக்கூடும் என்ற எண்ணத்தில்தான்.
கப்டன் ஆதவன்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
துரைலிங்கம் (UK)
Posted Date: November 15, 2026 at 11:49
இது ஒரு அருமையான பகுப்பாய்வுக் கட்டுரை. வெளிநாட்டில் பணத்தை முதலீடு செய்யத் துடிக்கும் தமிழருக்கு சிறந்த செய்தி.
அவர்கள், கேட்கும் செய்திகள் எதையும் 'ஈ அடிச்சான கொப்பி' செய்வது போல் செய்யாது, அலசி ஆராய்ந்து விளங்கிச் செய்தால் யாழ்ப்பாணத் தமிழன் Elon Musk யைவிட பணக்காரராக இருப்பர். யாழ்ப்பாணத்திலும் சரி வெளிநாட்டிலும் சரி அனேகமான முதலீடு செய்யும் தமிழருக்கு தமது திறமை என்னவென்றே தெரியாது என்றால் மிகையாகாது.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.