இலங்கை பொருளாதாரம் வீழ்வதற்கு ராஜபக்ஷக்களே காரணம்: நீதிமன்றம் தீர்ப்பளித்தும் ஏன் நடவடிக்கை இல்லை? (BBC)
பிரசுரிக்கபட்ட திகதி: 02/12/2023 (சனிக்கிழமை)
இலங்கை பொருளாதாரம் வீழ்வதற்கு ராஜபக்ஷக்களே காரணம்: நீதிமன்றம் தீர்ப்பளித்தும் ஏன் நடவடிக்கை இல்லை? (BBC)
கட்டுரை தகவல்
எழுதியவர்,யூ.எல். மப்றூக்
பதவி,பிபிசி தமிழுக்காக
இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் நிதியமைச்சர்களான மஹிந்த மற்றும் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேர் மேற்கொண்ட தவறான பொருளாதார மேலாண்மைத் தீர்மானங்களே காரணம் என இலங்கை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.
அதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் அவர்கள் மேல் ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?
ராஜபக்ஷ குழுவுக்கு எதிரான வழக்கு
2020-ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர், பொருளாதார ரீதியாகக் கடுமையாக வீழ்ச்சியடைந்த இலங்கை, ஒரு கட்டத்தில் திவால் ஆன நாடாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் பி.பி. ஜயசுந்தர, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல மற்றும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் பேராசியர் டப்ளியு.டி. லக்ஷ்மன் ஆகியோரின் தவறான பொருளதார தீர்மானங்களால் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக ஆணையிடுமாறு கோரி, உச்ச நீதிமன்றில் 2022-ஆம் ஆண்டு இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இவற்றில் ஒரு மனுவை இலங்கை வணிக சபையின் முன்னாள் தலைவர் சந்ரா ஜயரத்ன, நீச்சல் வீரர் ஜுலியன் போலிங், ஜெகான் கனகரட்ன மற்றும் ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஆகிய தரப்பினர் தாக்கல் செய்திருந்தனர்.
மற்றைய மனுவை இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கலாநிதி அதுலசிறி குமார சமரகோன், சூசையப்பு நேவிஸ் மொராயஸ் மற்றும் கலாநிதி மாஹிம் மென்டிஸ் ஆகியோர் தாக்கல் செய்திருந்தார்கள்.
நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் பிரதிவாதிகள் எடுத்த தவறான முடிவுகளால், நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக ஆணையிடுமாறு மேற்படி மனுக்களிலும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரி, புவனேக அலுவிகார, விஜித் மலல்கொட, மூர்து பெனாண்டோ மற்றும் பிரியந்த ஜயவர்த்தன ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் இது குறித்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், நவம்பர் 14-ஆம் தேதி தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. நீதியரசர்களில் பிரியந்த ஜயவர்த்தன தவிர்ந்த ஏனைய மூன்று நீதியரசர்களும் பிரதிவாதிகளின் தீர்மானங்களால் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அறிவித்து தீர்ப்பு வழங்கினர்.
குறித்த வழக்கில் மனுதாரர்கள் நஷ்ட ஈடு கோரவில்லை என்பதனால், அது குறித்து தீர்ப்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. மேலும் தவறான தீர்மானத்தை எடுத்தவர்களுக்கான அபராதம் குறித்தும் தீர்ப்பில் குறிப்பிடப்படவில்லை.
இந்த நிலையில், மனுதாரர்களுக்கு தலா 150,000 இலங்கை ரூபாயினை வழக்குச் செலவாக பிரதிவாதிகள் செலுத்த வேண்டுமெனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்த பின்னர் வர்த்தகர்களுக்கு வழங்கிய வரிச் சலுகைகள், அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை நாணயத்தின் பெறுமதியை உயர்ந்த நிலையில் பேணியமை, சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக் கொள்ளத் தாமதித்தமை, நாட்டின் நிதிக் கையிருப்பு பற்றாக்குறையாக இருந்தபோது 500 மில்லியன் டாலர் பெறுமதியான பிணை முறிகளை மீளச் செலுத்தியமை பிரதிவாதிகள் மேற்கொண்ட முக்கிய தவறுகள் என தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பட மூலாதாரம்,
குடியுரிமைகளை ரத்து செய்யக் கோரிக்கை
இதனையடுத்து நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் தவறான தீர்மானங்களை எடுத்தார்கள் என, உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் பெயர் குறிப்பிடப்பட்ட நபர்களுக்கு சட்ட ரீதியாகத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், அவர்களிடமிருந்து மக்களுக்கு நஷ்டஈடு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டுமெனவும் பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
முன்னாள் ராணுவத் தளபதியும் தற்போதைய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா உள்ளிட்ட சிலர், "தீர்ப்பில் பெயர் குறிப்பிடப்பட்டவர்களின் சிவில் உரிமைகளை ரத்துச் செய்ய வேண்டும்," எனக் கூறுகின்றார்.
இந்த நிலையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள பிரதிவாதிகளுக்கு அரசு வழங்கும் ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகள் அனைத்தையும் நிறுத்துமாறு ஜனாதிபதியைக் கோரும் கடிதமொன்றில், பொதுமக்களின் கையொப்பங்களைப் பெறும் நடவடிக்கையொன்றினை சில நாட்களுக்கு முன்னர் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஆரம்பித்தது.
அது குறித்து அந்தக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதிச் செயலாளருமான முஜீபுர் ரஹ்மான் பிபிசி தமிழுக்குத் தெரிவிக்கையில், "அவர்களுக்கு அரசினால் ஓய்வூதியம் உட்பட பல சலுகைகள் வழங்கப்படுகின்றன. உடனடியாக அவற்றினை நிறுத்த வேண்டும். அத்தோடு, அவர்களால் நாட்டுக்கு ஏற்பட்ட நஷ்டம் எவ்வளவு என்பதை கணக்கிட்டு, அவற்றினை அவர்களிடமிருந்து எவ்வாறு பெறுவது என்பதை ஆராய்வதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றும் அமைக்கப்பட வேண்டும். இதனை நிறைவேற்றுமாறு ஜனாதிபதியை வலியுறுத்தும் ஆவணமொன்றிலேயே மக்களின் கையொப்பம் திரட்டபட்டது" என்றார்.
இதேவேளை, நாட்டை வங்குரோத்து அடையச் செய்தவர்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்புக் குறித்து கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக் குமாரதுங்க, "உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அரிய மற்றும் சிறந்த தீர்ப்பு" எனத் தெரிவித்துள்ளார்.
”நீதிமன்றத்துக்கு மக்கள் சென்று, உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்களுக்கு தண்டனை வழங்குமாறும், அவர்களிடமிருந்து இழப்பீடு பெற்றுத்தருமாறும் கோர முடியும்" என, அவர் மேலும் கூறியுள்ளார்.
நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் தவறான தீர்மானங்களை எடுத்தவர்களின் வெளிநாட்டுக் கணக்குகள் மற்றும் நிறுவனங்களில் குவிக்கப்பட்டதாகக் கூறப்படும் பணம் அல்லது இலங்கையில் உள்ள காணிகள், ஹோட்டல்கள் மற்றும் குடியிருப்புகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் அவர்களின் பணம் ஆகியவற்றை போலீஸ் விசாரணைகள் மூலம் கண்டுபிடித்து பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு அவற்றை இழப்பீடாக வழங்க பயன்படுத்த முடியும் எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குறிப்பிட்டுள்ளார்.
திருடப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கான உதவிகளை வழங்கும் தனிப் பிரிவை உலக வங்கி கொண்டுள்ளது என்றும், பிலிப்பைன்ஸின் அவ்வாறான சொத்துக்கள் மீட்கப்பட்டு அந்த நாட்டுக்குக் கொண்டு வரப்பட்டன எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவும், ”பொருளாதாரம் தொடர்பில் தவறான தீர்மானங்களை மேற்கொண்ட மேற்படி நபர்களுக்கு எதிராக, மக்கள் - மாவட்ட நீதிமன்றங்களுக்குச் சென்று, இழப்பீடு கோர முன்வர வேண்டும்,” என அழைப்பு விடுத்துள்ளார்.
இது இவ்வாறிருக்க உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளியானதை அடுத்து ஊடகங்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, நாட்டு மக்களின் நலன் கருதியே தாம் தீர்மானங்களை மேற்கொண்டதாகவும், ஒவ்வொரு நபரையும் இலக்காகக் கொண்டு தீர்மானங்களை மேற்கொள்ளவில்லை எனவும் கூறினார்.
”மக்களின் நலன் கருதி எடுத்த சில தீர்மானங்கள் பொருந்தவில்லை, சில தீர்மானங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. ஆனாலும், நல்லெண்ணத்துடனேயே அனைத்துத் தீர்மானங்களையும் மேற்கொண்டோம்" என, அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
'நோய் கண்டுபிடிக்கப்பட்டது, மருந்து வழங்கப்படவில்லை'
தவறான பொருளாதாரத் தீர்மானங்களுக்கு காரணமானவர்கள் என, உச்ச நீதிமன்றம் பெயர் குறிப்பிட்டு தீர்ப்பளித்துள்ள நிலையில், அவர்களுக்கான 'அபராதம்' என்ன என்பது அறிவிக்கப்படாமையினால், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுப்பது கடினமாகியுள்ளதாக, தென்கிழக்குப் பல்கலைக்கழத்தின் பொருளியல்துறை தலைமைப் பேராசிரியர் ஏ.எல். ரஊப் பிபிசி தமிழிடம் கூறினார்.
ஒரு நாட்டின் பொருளாதரத்தை வீழ்ச்சியடையச் செய்து, அந்த நாடு வங்குரோத்து அடைவதற்கு காரணமாக இருந்தமை - மிகப் பெரிய குற்றம் எனத் தெரிவித்த அவர், "இதனைப் புரிந்தவர்களுக்கு எதிராக நாடாளுமன்றமும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது,” என்கிறார்.
"உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் பொருளாதாரம் தொடர்பாக தவறான தீர்மானம் எடுத்தவர்கள் என, பிரதானமாக யாரெல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளார்களோ, அவர்களின் அரசாங்கமே தற்போது உள்ளது. எனவே, நாடாளுமன்றத்திலும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை எதிர்பார்க்க முடியாது” எனவும் அவர் கூறினார்.
அந்த வகையில், இவ்விவகாரத்தில் "நோய் கண்டறியப்பட்டுள்ள போதும், மருந்து வழங்கப்படவிலை," என தலைமைப் பேராசிரியர் ரஊப் குறிப்பிட்டார்.
ஈஸ்டர் தாக்குதல் தீர்ப்பின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்
இது இவ்வாறிருக்க, பொருளாதார ரீதியாக நாட்டைச் சீரழித்தமைக்காக பொறுப்புக் கூற வேண்டியவர்களாக ராஜபக்ஷக்களை உச்ச நீதிமன்றம் அடையாளப் படுத்தியுள்ளமையினால், அவர்களிடமிருந்து இழப்பீட்டை மக்கள் பெற்றுக் கொள்ள முடியுமென மூத்த சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் கூறியுள்ளார்.
பொறுப்புகூறலில் இருந்து விலகியமையால், அதற்கான இழப்பீட்டை பாதிக்கப்பட்ட மக்களுக்கு செலுத்த வேண்டும் என, ஏற்கனவே உச்ச நீதிமன்றம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் தீர்ப்பளித்துள்ளமையினை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே அந்த வழக்கின் தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு, தனது தலைமையில் - ஏனைய எதிர்க்கட்சிகளின் சட்டத்தரணிகள் மற்றும் சிவில் தரப்பினருடன் இணைந்து, ராஜபக்ஷகளிடமிருந்து நஷ்டஈட்டைப் பெறுவதற்கான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பது பற்றி ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உச்ச நீதிமன்றம் நஷ்டஈடு வழங்குமாறு உத்தரவிட்டிருந்தால், இந்த நாட்டிலுள்ள 2.2 கோடி மக்களுக்கும் வழங்குவதற்குப் போதுமான ராஜபக்ஷவினரின் பணம், நாட்டுக்கு வெளியில் உள்ளது என்றும் சுமந்திரன் நாடாளுமன்றத்தில் கூறினார்.
ராஜபக்ஷ சகோதரர்கள் நாட்டிற்கு வெளியே வைத்திருக்கும் பணத்தின் மூலம், நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும் இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ராஜபக்ஷவினரிடம் இழப்பீடு கோருவதற்கு உரிமை உள்ளது என்றும் சுமந்திரன் தெரிவித்தார்.
மைத்திரிக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு என்ன?
இலங்கையில் நடைபெற்ற ஈஸ்டர் தின குண்டு வெடிப்புத் தாக்குதல்களைத் தவிர்ப்பதற்குத் தவறியதன் ஊடாக, தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, பாதிக்கப்பட்ட தரப்பினரால் 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
அந்த மனுக்களில் தாக்குதல் நடைபெற்ற காலத்தில் ஜனாதிபதியாகப் பதவி வகித்த மைத்திரிபால சிறிசேன, அப்போதைய பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெணான்டோ, அப்போது போலீஸ் மாஅதிபராகப் பதவி வகித்த பூஜித் ஜயசுந்தர, அரச புலனாய்வு சேவையின் அப்போதைய பிரதானி நிலந்த ஜயவர்தன, மற்றும் தேசிய புலனாய்வு பிரிவின் அப்போதைய பிரதானி சிசிர மென்டீஸ் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்தனர்.
ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்த போதிலும், அதைத் தடுப்பதற்கு பிரதிவாதிகள் நடவடிக்கை எடுக்காமையின் மூலம், தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் தெரிவித்திருந்தனர்.
இதனை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு மனுதாரர்கள் தமது சொந்தப் பணத்திலிருந்து நஷ்டஈடுகளைச் செலுத்துமாறு உத்தரவிட்டிருந்தது. அதன்படி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 100 மில்லியன் ரூபாயை நஷ்டஈடாகச் செலுத்த வேண்டும் என, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. (BBC Tamil)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.