1 கிலோ கஞ்சா கடத்தலுக்கு சிங்கப்பூரில் தமிழருக்கு தூக்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 26/04/2023 (புதன்கிழமை)
உலகளவில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் குற்றங்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களைப் பின்பற்றும் சிங்கப்பூர் அரசு, ஒரு கிலோ கஞ்சா கடத்தல் வழக்கில் தமிழர் ஒருவருக்கு, சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் கோரிக்கைகளை மீறி மரண தண்டனையை நிறைவேற்றியிருக்கிறது.
முன்னதாக, கடந்த 2018இல் ஒரு கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் இந்தியா – தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தங்கராஜ் சுப்பையா என்பவரைச் சிங்கப்பூர் நீதிமன்றம் குற்றவாளி எனது தீர்ப்பளித்தது.
அதோடு, கஞ்சா கடத்தல் வழக்கில் மரண தண்டனை விதிப்பதற்கான குறைந்தபட்ச அளவை விடவும் தங்கராஜ் இரண்டு மடங்கு அதிகமாக வைத்திருந்ததாக அவர் மீதான மரண தண்டனையை நீதிமன்றம் உறுதிசெய்தது. நீதிமன்றத்தின் இத்தகைய தீர்ப்புக்கு மனித உரிமை அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்புகளிலிருந்து கடும் எதிர்ப்புகளும், மரண தண்டனையை நீக்குமாறு கோரிக்கைகளும் வந்தன.
தங்கராஜூவின் குடும்பத்தினர், தங்கராஜ் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும், இதில் நியாயமான விசாரணை நடக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியிருந்தனர். அதோடு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அலுவலகம், தங்கராஜூக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை அவசரமாக மறு பரிசீலனை செய்யுமாறு சிங்கப்பூர் அரசைக் கேட்டுக்கொண்டது.
கூடவே, ஜெனீவாவை தளமாகக் கொண்ட மருந்துக் கொள்கைக்கான உலகளாவிய ஆணையத்தின் உறுப்பினர் ரிச்சர்ட் பிரான்சன், “தங்கராஜூ கைது செய்யப்பட்ட நேரத்தில் உண்மையில் போதைப்பொருள் அருகில் எங்கும் இல்லை. ஒரு அப்பாவியை சிங்கப்பூர் கொல்லப்போகிறது. சிங்கப்பூரின் சில கொள்கைகள் காலனித்துவத்திற்குத் திரும்புவதைப் பார்ப்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது” எனக் கூறி மரண தண்டனையை நிறுத்துமாறு கடந்த திங்களன்று அழைப்பு விடுத்தார்.
இதற்குப் பதிலளித்த சிங்கப்பூர் உள்துறை அமைச்சு, தங்கராஜூவின் குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டிருப்பதாக நேற்று தெரிவித்தது.
இந்த நிலையில், தங்கராஜூவின் மரண தண்டனையை சிங்கப்பூர் அரசு இன்று நிறைவேற்றியது. இதன் மூலம் கடந்த ஆறு மாதங்களில் நிறைவேற்றப்பட்ட முதல் மரண தண்டனையாக இது அமைந்தது. மேலும் கடந்த ஆண்டு மார்ச் முதல் நிறைவேற்றப்பட்ட 12ஆவது மரண தண்டனை இதுவாகும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.