மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் 11 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அவரது 14 வயது சகோதரரை ஏறாவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
உயிரிழந்த சிறுமி, 11 வயதுடைய சத்தியானந்தன் சாதீஷா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கடந்த மே 28 ஆம் திகதி, தனது வீட்டின் குளியலறையில் அமைந்திருந்த நீர்த் தொட்டிக்குள் அவர் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் விசாரணைகளின் படி, சம்பவத்திற்கு முன்னர் கைப்பேசி தொடர்பான விவகாரத்தில் சகோதரர் மற்றும் சகோதரிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.
சிறார்களின் தாயார் வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதுடன், சம்பவம் இடம்பெற்ற நாளில் தந்தையும் வேலைக்காக வெளியே சென்றிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வாக்குவாதம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து சிறுமியின் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சம்பவத்திற்குப் பின்னர் சிறுவன் அயல் வீட்டிற்குச் சென்றிருந்ததாகவும் கூறப்படுகிறது.
வேலை முடிந்து வீடு திரும்பிய தந்தை, பிள்ளைகளைத் தேடியபோது, தனது மகளை நீர்த் தொட்டிக்குள் மயக்கமடைந்த நிலையில் கண்டுள்ளார். உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், அங்கு உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது, 14 வயது சிறுவன் சம்பவத்தில் தனது தொடர்பை ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர் என செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.